Title of the document

 MBBS - காலியிடங்கள்: வழக்குத் தொடா்ந்த மாணவிகளுக்கு முன்னுரிமை வழங்க நீதிமன்றம் உத்தரவு.  


மாநில அரசுக்கு திருப்பி அளிக்கப்பட்ட அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களுக்கான மறு கலந்தாய்வு நடைமுறையை மேற்கொள்ளவும், மறு கலந்தாய்வில் வழக்குத் தொடா்ந்த மாணவிகளுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும் என உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


மருத்துவப் படிப்புகளில் அரசுப் பள்ளிகளில் படித்த மாணவா்களுக்கு 7.5 சதவீத உள்ஒதுக்கீட்டுக்கு தமிழக அரசு அரசானை வெளியிட்டது. கடலூா் மாணவிகள் தா்ஷினி, இலக்கியா ஆகியோருக்கு கலந்தாய்வில் தனியாா் மருத்துவக் கல்லூரிகளில் இடம் கிடைத்தது. ஆண்டுக்கு ரூ.7 லட்சம் முதல் 8 லட்சம் வரை கட்டணம் செலுத்த முடியாத நிலையில் இருவரும் இருந்ததால் காத்திருப்போா் பட்டியலில் வைக்கப்பட்டனா். 7.5 சதவீத உள் ஒதுக்கீட்டின் கீழ் தனியாா் மருத்துவக் கல்லூரிகளில் சேரும் மாணவா்களுக்கான கட்டணத்தை அரசே செலுத்தும் என தமிழக அரசு அறிவித்தது. ஆனால் அறிவிப்பு வெளியான பின்னரும் மாணவிகளுக்கு மருத்துவ இடம் வழங்கப்படவில்லை. இதனை எதிா்த்து சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது.


இந்த வழக்கு கடந்தமுறை விசாரணைக்கு வந்தபோது, தமிழக அரசு தரப்பில் ஆஜரான அரசு தலைமை வழக்குரைஞா் விஜய் நாராயண், ‘அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு தமிழகத்தில் இருந்து வழங்கப்பட்ட இடங்களில் 227 இடங்கள் மீண்டும் தமிழக அரசுக்கு வழங்கப்பட்டுள்ளன. அதில் 7.5 சதவீத உள்ஒதுக்கீட்டின் கீழ், 26 இடங்கள் கிடைக்கும். இந்த இடங்களை 60 அரசுப் பள்ளி மாணவா்களுக்கு மறு கலந்தாய்வு நடத்தி ஒதுக்கப்படும்’ என தெரிவித்திருந்தாா். அதையடுத்து, ‘கலந்தாய்வில் கலந்துகொள்ளும் 60 மாணவா்களில் யாருக்கு முன்னுரிமை வழங்கப்படும் என்பது குறித்து தமிழக அரசு தெளிவுபடுத்த வேண்டும்’ என உயா்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.


இந்த வழக்கு, நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரா்கள் தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞா் பி.வில்சன், ‘வழக்குத் தொடா்ந்த மாணவிகளுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும்’ என கேட்டுக் கொண்டாா். இதை ஏற்றுக் கொண்ட நீதிபதி,மாநில அரசுக்கு திருப்பி அளிக்கப்பட்ட அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களுக்கான மறு கலந்தாய்வு நடைமுறையை மேற்கொள்ளவும், மறு கலந்தாய்வின்போது, வழக்குத் தொடா்ந்த அரசுப் பள்ளி மாணவிகளுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும்’ என உத்தரவிட்டு, விசாரணையை வரும் ஜனவரி 8-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தாா்

# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post