Title of the document

  4 கோடி மாணவர்களுக்கு உதவித்தொகை: மோடி அரசு திட்டம்!

5 ஆண்டுகளில் 4 கோடி எஸ்சி மாணவர்களுக்கு போஸ்ட் மெட்ரிக்  கல்வி உதவித்தொகை வழங்க மோடி அரசு திட்டமிட்டுள்ளதாக, சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை அமைச்சர் தவார்சந்த் கெலாட்  தெரிவித்துள்ளார்.,

பட்டியல் பிரிவைச் சேர்ந்த மாணவர்கள் பத்தாம் வகுப்புக்கு பிறகு கல்வியைத் தொடர்வதை ஊக்கப்படுத்துவதற்காக PMS-SC என்னும் பள்ளிக்கு பிறகான (போஸ்ட் மெட்ரிக்) கல்வி உதவித்தொகைத் திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது.


இந்த உதவித் தொகையின்கீழ், 4 கோடி பட்டியலின மாணவர்கள் 10-ம் வகுப்பிற்குப் பிறகு கல்வியைத் தொடரும் வகையில் அடுத்த 5 ஆண்டுகளில் ரூ.59,000 கோடியை கல்வி உதவித் தொகையாக வழங்க மத்திய அரசு சார்பில் ஒப்புதல் அளிக்கப்பட்டது. இதில் ரூ.35,534 கோடி (60%) மத்திய அரசு நிதியில் இருந்தும் மீதமுள்ள தொகை மாநில அரசு நிதியிலிருந்தும் வழங்கப்படும்.

இதுதொடர்பாக சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை அமைச்சரும் பாஜகவின் தலித் தலைவருமான தவார்சந்த் கெலாட் இன்று செய்தியாளர்களிடம் கூறும்போது, ’’முந்தைய காலங்களில் இருந்த திட்டத்தைப் பின்பற்றிக் கடந்த 2 வருடங்களாக ஆண்டுக்கு ரூ.1,100 கோடி மட்டுமே போஸ்ட் மெட்ரிக்  உதவித்தொகைக்குச் செலவிடப்பட்டது. இதனால் மாநில அரசுகளுக்குக் கூடுதல் நிதிச்சுமை ஏற்பட்டது. சரியான நேரத்துக்கு மாநிலங்களால் உதவித்தொகையை அளிக்க முடியவில்லை. இதனால் பட்டியலின மாணவர்களின் இடைநிற்றல் அதிகரித்தது.

ஆனால் மோடி அரசு இதைத் தற்போது மாற்றியுள்ளது. இத்திட்டத்தின் மூலம் உதவித்தொகை, மாணவர்களின் வங்கிக் கணக்குக்கு நேரடியாக அனுப்பப்படும்.

இது ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க முடிவு. இதனால் கல்வித்தரம் உயரும். இந்த முடிவுக்கு எந்த மாநிலமும் எதிர்ப்புத் தெரிவிக்கவில்லை.

போஸ்ட் மெட்ரிக் உதவித் தொகைத் திட்டத்தின் மூலம் 2014- 15 ஆம் ஆண்டில் 17 சதவீத மாணவர்கள் பயன்பெற்ற நிலையில், தற்போது 23 சதவீத மாணவர்கள் பலனடைந்து வருகின்றனர். இதை 27 சதவீதமாக உயர்த்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது’’ என்று அமைச்சர் தவார்சந்த் கெலாட்  தெரிவித்தார்.

# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post