Title of the document
 பாதுகாப்புடன் பள்ளிகளை திறக்கலாமே ? - தினமலர்..

குழந்தைகள் துள்ளிக் குதித்து, ஏறி விளையாடிய ஊஞ்சல்கள், பள்ளி மைதானங்களில் துருப்பிடித்து காணப்படுகின்றன. குழந்தைகள் சாப்பிடும் போது, சந்தோஷமாக பங்கிட்டு கொடுக்கும் உணவுகள் கிடைக்காமல், பறவைகள், பள்ளிகளை சுற்றி, ஏக்கமாய் பறந்து திரிகின்றன.

தங்களை சுற்றி சுற்றி வந்து தொட்டு மகிழ்ந்த, உயிரோட்டமுள்ள மலர்களான மழலைச் செல்வங்களைக் காணாமல் மரங்கள் தவிக்கின்றன.பட்டாம் பூச்சிகளாய் சிரித்து, சிறகடித்து வந்த சிறார்களை எதிர்பார்த்து, பள்ளிகள் தவமிருக்கின்றன. கூட்டாக வாய்ப்பாடு ஒப்பிக்கும், அந்த சங்கீதக் குரல்களைக் கேட்காது, வகுப்பறைகள் தவிக்கின்றன. ஆனால், நம் மாநிலத்தில் மட்டும், பள்ளிகள் திறப்பு தேதி இன்னும் முடிவாகவில்லை.ஆனால், பிற மாநிலங்களான உத்தர பிரதேசத்தில், பள்ளி, கல்லுாரிகளை எப்போதோ திறந்து விட்டனர். ஆந்திராவில் கடந்த வாரத்தில் இருந்து, திறந்து நடத்தி வருகின்றனர். அங்குள்ளவர்கள் குழந்தைகள் இல்லையா; அனுப்புவது பெற்றோர் இல்லையா; சொல்லிக் கொடுப்பது ஆசிரியர்கள் இல்லையா? உரிய பாதுகாப்புஅந்த மாநில மக்களை விட, நமக்கு அக்கறை அதிகம் என்றே எடுத்துக் கொள்வோம்.

இந்த அக்கறையை இன்னும் எவ்வளவு காலத்திற்கு எடுத்து செல்லப்போகிறோம்; எத்தனை நாளைக்கு, பிள்ளைகளை வீட்டிற்குள், பொத்தி, பாதுகாக்கப் போகிறோம்?எப்படி எல்லாம் இருந்தால், கொரோனாவை நெருங்கவிடாமல் தவிர்க்கலாம் என்று சொன்ன, உலக சுகாதார நிறுவன தலைவருக்கே கொரோனா எனும் போது, நாமும் நம் பிள்ளைகளும் எம்மாத்திரம்... அதற்காக எல்லாவற்றையும் அலட்சியமாக இருக்கச் சொல்லவில்லை. அரசின் வழிகாட்டுதலுடன், உரிய பாதுகாப்புடன் இருந்தால் போதும். அதுவே நலம்.இரண்டாவது அலை, மூன்றாவது அலை எல்லாம் இன்னும் இரண்டு மாதங்களில் அடித்து முடிந்துவிடும். அந்த அலைகள் எல்லாம் ஒய்வதற்குள், தடுப்பூசியும் வந்துவிடும். ஆகவே, காத்திருங்கள் என்று சொன்னால், இரண்டு மாதம் அல்ல இன்னும் மூன்று மாதம் கூட காத்திருக்கலாம். ஆனால், எதார்த்தம் அதுவல்ல என்பதையும் பார்க்க வேண்டும்.இந்த அலை சமாசாரம் எல்லாம், இப்போதைக்கு ஒய்வது போலவும் இல்லை; தடுப்பூசி வருவது போலவும் இல்லை. இதை அவநம்பிக்கையுடன் சொல்வதாக எடுத்துக் கொள்ளவேண்டாம்.

கொரோனாவிற்கு எதிரான அறிவியல் யுத்தம் போகிற போக்கை கணித்து சொல்கிறேன். 'கொரோனாவை விட கொடிய, பொருளாதார சீரழிவில் இருந்து, மக்கள் மீண்டெழ வேண்டும் என்றால், கொரோனாவுடன் வாழ பழகிக் கொள்ளுங்கள்' என்று, உலகம் முழுவதும் உள்ள தலைவர்கள் எப்போதோ சொல்லி விட்டனர்.அதைத் தான் நாம் அரசு அலுவலகங்களை திறத்தல்; ரயில் விமான போக்குவரத்தை நடத்துதல்; வழக்கம் போல கடைகளில் வியாபாரம் செய்ய அனுமதித்தல் என்பதன் மூலம், வாழப் பழகிக் கொண்டு வருகிறோம். பள்ளிகளுக்கு சென்றால், குழந்தைகளுக்கு தொற்று வராதா என்று அடுத்த கேள்வியை பீதியுடன் எழுப்புவர்.தி.நகர் ரங்கநாதன் தெருவில் இருந்து, பெற்றோர்களால் வீட்டிற்குள் வராத தொற்றை, அரசு பஸ்சில் நெருக்கியடித்து பயணம் செய்யும் போது வராத தொற்றை, மற்றவர்கள் மடியில் உட்காராத குறையாக, ஷேர் ஆட்டோவில் பயணம் செய்யும் போது வராத தொற்றை, குழந்தைகள் மட்டும் பள்ளியில் இருந்து அழைத்து வந்து விடுவர் என்பது எந்த வகையில் நியாயம்?

கற்பிப்போர், கற்போரும் கூடும் இடம் பள்ளிக்கூடங்கள். பாதுகாப்பு நடவடிக்கைகளை எந்த அளவிற்கு அங்கு எடுக்க வேண்டும்; எந்த அளவு சமூக இடைவெளிவிட்டு உட்கார வைக்க வேண்டும் என்பதை அங்கிருப்போர் நன்கு அறிவர்.கொரோனா தொற்றுக்கண்டுபிடிப்பு, டி.பி.ஆர்., 3 சதவீதமும், அதாவது, எடுத்துள்ள மொத்த டெஸ்ட்களில், 3 சதவீதம் மட்டுமே தொற்று பாதிப்பு இருந்தால், புதிய தொற்றுகள், லட்சத்தில், 20 பேருக்கு மேல் இல்லாமல் இருந்தால், அந்த பகுதியில் பள்ளிகள் திறக்கப் படலாம்.தமிழகத்தின் நிலை என்ன... நவம்பர் ஆரம்பித்தது முதல், இந்த, டி.பி.ஆர்., 3 சதவீதம் உள்ளதால், இரண்டு வாரங்களில் பள்ளிகளை திறப்பதற்கான சூழ்நிலைகள் சாதகமாக இருக்கலாம் என்று அரசு அறிவித்துள்ளது.ஆகவே, பள்ளிகளை திறக்கலாம் என்று, அறிவுபூர்வமாக நல்லதொரு முடிவு எடுத்துள்ளனர்.பள்ளிகள் திறக்கப்படும் போது என்ன செய்ய வேண்டும் என்பதை மட்டும் தான் இப்போது பார்க்க வேண்டும்.பள்ளிக்கல்வித் துறையும் ஒரு மாபெரும் மாற்றத்திற்கு தயாராக வேண்டும். மாணவர்கள் கட்டாயம் முக கவசம் அணிந்து வரச் செய்ய, அறிவுறுத்த வேண்டும்.

பள்ளியில் மாணவர்கள் நுழையும் இடத்தில், உடல் வெப்பநிலை பரிசோதிக்கப்பட வேண்டும். குழந்தைகளுக்கு கொரோனா அறிகுறிகளான காய்ச்சல், இருமல், சளி முதலிய ஏதேனும் தொந்தரவுகள் இருக்கிறதா என்பதை கேட்டு, பள்ளிக்கு உள்ளே அனுமதிக்க வேண்டும்.வகுப்பறைகள் நல்ல காற்றோட்டத்தோடு இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும். சமூக இடைவெளியை கடைபிடிக்கும் அளவுக்கு, ஒரு பெஞ்சுக்கு இருவர் என்ற அளவில் மாணவர்களை அனுமதிக்கலாம்.மாணவர்கள் பரவலாக உட்காருவதற்கு ஏதுவாக, 'ஷிப்ட்' முறை கொண்டு வரலாம். பள்ளி பாட நேரத்தை பாதியாக குறைக்கலாம். உணவு உண்பதை, வீட்டிலேயே முடித்துக் கொள்ளுமாறு, நேரத்தை சீர் செய்யலாம். குழந்தைகளுக்கு சோப்பு போட்டு, கை கழுவும் வசதியை அமைத்து கொடுக்க வேண்டும்.

முக்கியமாக, கழிப்பறையை நன்கு பராமரிக்கலாம். நிலைமை சீராகும் வரை பிரார்த்தனை கூட்டத்திற்காக கூடுவதையும், சேர்ந்து விளையாடுவதையும் தவிர்க்கலாம். முழுப் பயிற்சி பெற்ற செவிலியரை பள்ளியில் பணி அமர்த்தலாம். பாதுகாப்பு நெறிமுறைகளையும், வழிமுறைகளையும் பின்பற்றி, பள்ளிகளை வெற்றிகரமாக நடத்தும் மாநிலங்களையும், நாடுகளையும், உதாரணமாக எடுத்து செயல்படலாம்.அதே போல, குழந்தை கள் வீட்டிற்கு திரும்பியதும், வீட்டின் வாசலிலேயே கைகளை சோப்பு போட்டு கழுவி, உடைகளை மாற்றிய பின், வீட்டினுள் பெற்றோர் அனுமதிக்கலாம். பள்ளியில் உபயோகப் படுத்திய பொருட்களை, கிருமி நாசினியால் சுத்தம் செய்து, பிறகு வீட்டில் உபயோகப்படுத்த வேண்டும். சத்துள்ள ஆகாரங்களை உண்பதற்கும் சரியான அளவு துாங்குவதற்கும் வழிகாட்டலாம்'பள்ளிகளை திறக்க வேண்டாம்' என்று, எந்த மனசாட்சி உள்ள பெற்றோரும் சொல்ல மாட்டார்கள். காரணம், இணையத்தில் படிக்கிறோம் எனச் சொல்லி, தங்கள், எல்.கே.ஜி., பிள்ளைகள் கூட, கண் கண்ணாடி மாட்டிக் கொண்டது தான் கைமேல் கண்ட பலன் என்பது அவர்களுக்கு நன்றாகவே தெரியும்.பள்ளிக்கு சென்று வந்த குழந்தை பகிரும், அனுபவமும், அன்பும் தான் பெரும்பாலான குடும்பங்களை இனிதாக இயக்கிக் கொண்டிருந்தது.

இப்போது அது அத்தனையும், முடிவிற்கு வந்தது போல பெற்றோர்களும், பெற்றோர்களை விட குழந்தைகளும், அதிக மன உளைச்சலில் இருக்கின்றனர் என்பது தான் வாழ்வியல் நிஜம்.பாதுகாப்பு அம்சம்அடுத்தடுத்த அலைகளால் அதிகம் பாதிக்கப்படுவதாக கூறப்படும், அமெரிக்க தேர்தல் களத்தில், மக்கள் முன் எப்போதும் இல்லாத அளவிற்கு ஒட்டுப்போட்டுள்ளனர் என்றால், சகஜமாக வாழ விரும்புகின்றனர் என்றே அர்த்தம்.'மாஸ்க் எனப்படுவது யாதெனில், அது இரு காதுகளுக்கு இடையே நாடிப்பகுதியில் தொங்கவிடப்படும் ஒரு துண்டு துணி' என்ற நிலையில் தான், பீஹார் மாநிலத்தில் மேடையில் தோன்றிய அரசியல்வாதிகளும், திரளாக கூடிய தொண்டர்களும், தங்களது கொரோனா பாதுகாப்பு அம்சத்தை வெளிப்படுத்தினர்.

நிச்சயம், அந்த அளவிற்கு நமது மாநிலம் இருக்காது. மாணவர்களும் இருக்க மாட்டார்கள். பெற்றோர்களே உங்கள் பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்ப தயராகுங்கள். நான் ஒரு பெற்றோராக இருந்து, என் இரண்டு பிள்ளைகளை இப்போதே தயார் செய்துவிட்டேன். உயிர் இருந்தால் தான் உடலுக்கு மரியாதை. அது போல கல்வி இருந்தால் தான் மாணவர்களுக்கு மரியாதை.

தொடர்புக்கு:

இ-மெயில்: doctorjsharma@gmail.com # இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post