Title of the document
சாருமதி, என் சட்டைப் பையில வெச்சிருந்த ஐம்பது ரூபாய் எங்கே?'
'நான் எடுக்கலையே, யோசிச்சிப் பாருங்க, நீங்களே எதற்காவது எடுத்துக் கொடுத்துருப்பீங்க'
'இல்லை சாருமதி, எனக்கு நல்லா நினைவு இருக்கு, நான் எடுக்கல'
'அப்போ அந்த பணம் எப்படி காணாம போய் இருக்கும்னு தெரியலையே'
'ஒருவேளை நம்ம பையன் தருண் எடுத்து இருப்பானான்னு கேப்போம்'
தருணிடம் கேட்ட போது 'நான் எடுக்கல பா' என்று கூறினான்.
சரி, நான் தான் மறந்து போய் இருப்பேன்' என்று தருணின் அப்பா சொன்னார்.
இரண்டு நாட்களுக்குப் பிறகு மீண்டும் அவரது சட்டைப் பையில் இருந்த இருபது ரூபாய் மாயமாகி விட்டது.
இப்படி அடிக்கடி பணம் காணாமல் போயிற்று. தருண் மேல்தான் சந்தேகமாக இருந்தது. ஆனால் தருணிடம் இதுவரை எந்த தவறான பழக்கமும் இருந்தது இல்லை. ஒன்பதாவது படிக்கும் தருண் வகுப்பில் முதல் ரேங்க் வாங்கும் மாணவன். நல்ல திறமைசாலி. யாருக்கும் தெரியாமல் அவன் பணத்தை திருடுவானா என்பது சந்தேகமாகத் தான் இருந்தது. ஒருவேளை தவறான நட்பால் தருண் இப்படி செய்கிறானா என்பது புரியவில்லை. தருணிடம் நேரடியாக இதைக் கேட்கவும் முடியவில்லை.
இரண்டு நாட்களுக்கு பிறகு தருண் பள்ளியிலிருந்து வந்ததும் வேகமாக அம்மாவிடம் வந்து, 'அம்மா, என் தமிழ் கைடு காணாமல் போயிடுச்சி, ஸ்கூல்ல தேடிப் பார்த்திட்டேன். யார்கிட்டயும் இல்ல, வீட்டுல விட்டு போயிட்டனான்னு தெரில, நீங்க எங்கயாவது பார்த்தீங்களா?'
'இல்லையேப்பா, நான் பார்க்கல'
'அய்யோ, நாளைக்கு தமிழ் பரீட்சையாச்சே, இப்போ என்ன செய்யறதுன்னு தெரியலையே' என்று புலம்பினான்.
'சரி, வருத்தப்படாத, தேடிப் பார்ப்போம்' என்று அம்மா கூறினாள்.
தருணுக்கு மனசே சரியில்லை. தேர்வு நேரத்தில் கைடு காணாமல் போய் விட்டதே என்று வருத்தப்பட்டான். இரண்டு நாட்களுக்கு பிறகு மீண்டும் அறிவியல் பரிட்சைக்கு முன் தினமும் இதே போல் அறிவியல் கைடு காணாமல் போய் விட்டது.
வீட்டிலும் இல்லை. பள்ளியிலும் இல்லை. அப்படியெனில் எப்படி மாயமாகிறது எனப் புரியாமல் குழப்பத்தில் தருணுக்கு அழுகையே வருவது போல் இருந்தது.
தருணின் நோட், கைடு என ஒவ்வொன்றாக அடிக்கடி காணாமல் போய்க் கொண்டிருந்தன.
ஒன்றாம் வகுப்பில் இருந்து ஒன்பதாம் வகுப்பு வரை எப்போழுதும் முதல் மதிப்பெண் மட்டுமே எடுப்பது தருணின் வழக்கம். ஆனால் இந்த முறை கைடு, நோட் எல்லாம் காணாமல் போய்விட்டதால் முதல் மதிப்பெண் எடுக்க இயலாது என்பது நன்கு புரிந்தது. ஆனாலும் தருணால் இந்த உண்மையை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. காணாமல் போனதைவிட, யார் எடுத்தார்கள் என்பது தெரியாமல் இருப்பது இன்னும் மன வருத்தத்தை அதிகமாக்கியது.
அன்று மாலை வீட்டுக்கு வந்தவுடன், 'அப்பா, என்னை மன்னிச்சிடுங்க, சில நாட்களாக நம்ம வீட்ல காணாமப் போற பணத்தை எடுத்தது நான்தான். என் ஃப்ரண்ட்ஸ் அடிக்கடி ஹோட்டல் போலாம்னு பணம் கேப்பாங்க. யாருக்கும் தெரியாம எடுக்கறது ரொம்ப தப்புன்னு தோணிக்கிட்டுதான் இருந்துது. ஆனா ஃப்ரண்ட்ஸ் ரொம்ப தொந்தரவு பண்ணதால தப்பு பண்ணிட்டேன், என்னை மன்னிசிடுங்கப்பா' என்று கூறினான் தருண்.
'அது சரி, திடீர்ன்னு இப்போ உண்மையை சொல்லனும்னு நினைச்சயே, அது ஏன்?' என்று கேட்டாள் அம்மா.
'நான் அப்பாவிற்கு தெரியாம பணம் எடுத்த மாதிரி என்னோட நோட், கைடு எல்லாம் யாரோ எடுத்த போதுதான் அந்த கஷ்டம் புரியுது. அதான் அப்பா கிட்ட மன்னிப்பு கேட்டேன்'
'நானே உனக்கு ஒரு மகிழ்ச்சியான விஷயம் சொல்லலாம்னுதான் வேகமா வந்தேன். இப்போதான் நம்ம பக்கத்துத் தெரு குப்பைத்தொட்டி பக்கத்தில உன் நோட், கைடு எல்லாம் கிடைச்சுது, உன் மேல பொறாமை புடிச்சவன் எவனோ இதை எடுத்து வீசிட்டான்னு நினைக்கறேன். சரி, இதையெல்லாம் எடுத்துக்கோ' என்று அப்பா சொன்னவுடன் தருண் கண்களில் ஆனந்தக் கண்ணீருடன் ' நன்றி அப்பா' என்று கூறி அவற்றை வாங்கி வைத்து விட்டு நண்பனின் வீட்டிற்கு சென்றான்.
அவன் சென்ற பிறகு ' இதெல்லாம் உங்க வேலை தானா?' என்று கேட்ட அம்மாவிடம் 'ஆமாம், அவனை திருத்த வேற வழி தெரியாததால நான்தான் எடுத்து ஒளிச்சி வெச்சிருந்தேன்' என்றார் அப்பா. ' சரி, எப்படியோ அவன் மாறினானே, அதுவே போதும்' என்று அம்மா கூறினார்.
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post