Title of the document
ஊரடங்கு முழுமையாக விலக்கிக் கொள்ளப்பட்டாலும் தற்போது கொரோனா வேகமெடுத்து வருவதால் தங்கள் குழந்தைகள் பள்ளிக்கு செல்ல மாட்டார்கள் என்று 92 சதவீத பெற்றோர் நாடு முழுவதும் கருத்து தெரிவித்துள்ளனர்.

சென்னையில் 54 சதவீத பெற்றோர் அதில் உறுதியாக உள்ளனர். கொரோனா வைரஸ் தொற்று பரவலை தடுக்கும் வகையில் நாடு முழுவதும் ஊரடங்கு அமல் படுத்தப்படுள்ளதால் பொதுமக்களின் வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. 
இது எந்த அளவுக்கு பள்ளிக் குழந்தைகளின் பெற்றோர் மனநிலையில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என்பது குறித்து பேரண்ட் சர்க்கிள் என்ற தனியார் அமைப்பு ஒன்று இந்தியாவில் பெரிய நகரங்களில் ஆய்வு நடத்தியுள்ளது. அது தொடர்பான முடிவுகளை அந்த அமைப்பு வெளியிட்டுள்ளது.
இதன்படி நாடு முழுவதும் 92 சதவீத பெற்றோர் தங்கள் குழந்தைகளை திரும்பவும் பள்ளிக்கு அனுப்ப தயக்கம் காட்டுவதாக தெரியவருகிறது. அதேபோல சென்னையில் நடத்திய ஆய்வில் 54 சதவீத பெற்றோர் தங்கள் குழந்தைகளை பள்ளிக்கு  அனுப்ப மாட்டோம் என்று தெரிவித்துள்ளனர்.

மேற்கண்ட தனியார் அமைப்பு நடத்திய ஆய்வில் மொத்தம் 12 ஆயிரம் பேர் பங்கேற்றுள்ளனர். இந்த  ஆய்வில் பள்ளிகள், மற்ற குழந்தைகளுடனான விளையாட்டு, பிறந்தநாள் விருந்து, மால்கள், சினிமா, உணவகங்களுக்கு செல்வது, சிறப்பு வகுப்புகளுக்கு செல்வது, விளையாட்டு தொடர்புடைய உடற்பயிற்சி, பொதுப்போக்குவரத்து, கோடை விடுமுறை, ஆகியவற்றை உள்ளடக்கிய ஒரு ஒட்டுமொத்த சர்வே நடத்தப்பட்டது.
இந்த சர்வேயில் பங்கேற்றவர்களின் பதில்களில் கொரோனா அச்சம் பெற்றோர் மத்தியில் இன்னும் இருக்கிறது என்று தெரிகிறது. இது உடனடியாக நீங்க வாய்ப்பில்லை.  கற்பித்தலில் பெரும் பாதிப்பு ஏற்பட்டபோதிலும் தங்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப பெற்றோர் தயாராக இல்லை. 
வைரஸ் தாக்கம் முற்றிலும் கட்டுக்குள் வந்த பிறகே பள்ளிக்கு அனுப்புவது சரியாக இருக்கும் என்று பெற்றோர் கூறுகின்றனர். பள்ளிகள் திறந்த பிறகு ஒரு மாத  சூழ்நிலையை நன்கு ஆய்வு செய்த பிறகே பள்ளிக்கு அனுப்புவதா வேண்டாமா என்பது குறித்து முடிவு எடுக்கப்படும் என்று 56 சதவீத பெற்றோர் தெரிவித்துள்ளனர். ஆனால் 8 சதவீத பெற்றோர் தங்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப தயாராக இருக்கின்றனர்.

வீட்டில் இருந்து படிக்கும் ஹோம் ஸ்கூல் முறைக்கு 15 சதவீத பெற்றோர் ஆதரவு தெரிவித்துள்ளனர். சமூக இடைவெளி சரியாக கடைபிடிக்கப்பட்டால் தங்கள் குழந்தைகளை விளையாட அனுமதிப்போம் என்று 35 சதவீதம் பேர் தெரிவித்துள்ளனர்.  
தேசிய அளவில் எடுக்கப்பட்ட இந்த சர்வேயில் சென்னை, பெங்களூரு, மும்பை, ஹைதராபாத், கொல்கத்தா, டெல்லி, நகரங்கள் இடம் பெற்றுள்ளன. சென்னையை பொறுத்தவரையில், பள்ளிகள் திறக்கப்பட்டாலும் ஒரு மாதம் உற்றுநோக்கிய பிறகே அனுப்புவதா என்று முடிவு எடுக்கப்படும் என்று 54 சதவீதம் பேர் தெரிவித்துள்ளனர்.
அடுத்த 6 மாதங்களுக்கு குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புவதை தவிர்க்க வேண்டும் என்று 22 சதவீதம் பேரும், ஹோம் ஸ்கூல் முறைக்கு 11 சதவீதம் பேரும் தங்கள் ஆதரவை தெரிவித்துள்ளனர். இந்த சர்வே தகவல்கள் இந்த கல்வியாண்டு துவக்கத்தில் கல்வி நிறுவனங்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post