Title of the document
பொதுத் தேர்வு எழுத உள்ள, 10ம் வகுப்பு மாணவர்கள், வெளியூர்களில் இருந்து திரும்பி வருவதற்கு, 'ஆன்லைன்' வழியாக விண்ணப்பித்து, 'இ - பாஸ்' பெறலாம் என, அரசு தெரிவித்துள்ளது. 'கணினி வசதியே இல்லாதவர்களால், எப்படி பாஸ் வாங்க முடியும்? அப்படியே வாங்கினாலும், தேர்வு எழுதுவதற்காக, வெளியூர் வருபவர்களுக்கு மட்டும், கொரோனா பரவாதா? உத்தரவிடுவதற்கு முன், அரசு யோசிக்க வேண்டாமா?' என, பெற்றோரும், ஆசிரியர்களும் கேள்வி எழுப்புகின்றனர்.

தமிழகத்தில், மார்ச், 27ல் நடத்தப்பட இருந்த, 10ம் வகுப்பு பொது தேர்வு, கொரோனா ஊரடங்கால் தள்ளி வைக்கப்பட்டு இருந்தது. கொரோனா பாதிப்பும், ஊரடங்கு கட்டுப்பாடுகளும், இன்னும் முடியாத நிலையில், 10ம் வகுப்பு தேர்வை, ஜூன், 1 முதல், 12ம் தேதி வரை நடத்த, பள்ளிக் கல்வி அமைச்சர் செங்கோட்டையன் உத்தரவிட்டுள்ளார். இந்நிலையில், சொந்த ஊர்கள் மற்றும் கிராமங்களுக்கு சென்றுள்ள மாணவர்கள், அவர்களின் பெற்றோர் மற்றும் ஆசிரியர்கள், அரசு விதித்த கட்டுப்பாடுகளை மீறி, எப்படி பள்ளிக்கு வருவது என, தெரியாமல் தவிக்கின்றனர்.

வேலைக்கு தடை

சாதாரண மக்களுக்கான, பொது போக்குவரத்து வசதி இல்லை.தினசரி உணவு மற்றும் வாழ்வாதார தேவைகளுக்காக, வேலைக்கும், வியாபாரத்துக்கும் கூட, வெளியூர் செல்லக் கூடாது என, சாதாரண மக்களுக்கு, அரசு கட்டுப்பாடு விதித்துள்ளது. அவர்களுக்கு, இ - பாஸ் என்ற, சலுகை கிடையாது.பல நகராட்சி, ஊராட்சி மற்றும் மாநகராட்சிகளில், தொற்று பரவல் அதிகம் உள்ள, தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகள் ஏராளம் உள்ளன. அவற்றில் வசிப்பவர்கள், அடிப்படை தேவைக்கு கூட, வெளியே வர முடிவதில்லை.வெளியூர் சென்றால், கொரோனா பரவும் என்று, அரசே தடை போட்டு விட்டு, தேர்வு எழுதுவோர் மட்டும், இ - பாஸ் பெற்று கொள்ளலாம் என, அரசு அறிவித்துள்ளது.தேர்வு எழுதும் மாணவர்கள், தங்கள் பெற்றோருடன், குடும்பம் குடும்பமாக இடம் பெயரும் நிலைமை ஏற்படும். அப்போது மட்டும், கொரோனா பரவாதா என்ற, கேள்வி எழுந்துள்ளது.சென்னை, மதுரை, கோவை, திருச்சி, ஈரோடு, சேலம், கிருஷ்ணகிரி, விழுப்புரம் என, பல மாவட்டங்களை சேர்ந்த, லட்சக்கணக்கான மாணவர்கள், வேறு மாவட்டங்களில் தங்கி உள்ளனர். அவர்கள், தங்கள் குடும்பத்தினருடன், இ - பாஸ் பெறுவது சாத்தியமா என்றும், பெற்றோர் தரப்பில் கேட்கப்படுகிறது.பெரும்பாலான ஊரக பகுதிகளில், இணையதள வசதி இல்லை; கணினி மற்றும் ஸ்மார்ட் போன் வசதியும் இல்லை. பல நேரங்களில் மின் வினியோகம் தடைபடுகிறது என்ற நிலையில் உள்ளவர்கள், இ - பாஸ் பெற, விண்ணப்பிக்க முடியுமா என்பதை, அரசு யோசிக்க வேண்டாமா என, பெற்றோர் கொந்தளிக்கின்றனர்.இதற்கிடையில், மாணவர்கள், இ - பாஸ்க்கு விண்ணப்பிக்க உதவுமாறு, பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு, அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது.பல ஆசிரியர்கள், தலைமை ஆசிரியர்கள், தங்களின் பணியிடத்திற்கு அப்பால் உள்ள, சொந்த ஊர்களில் உள்ளனர். பல பள்ளிகளில், கணினியும் வசதி இல்லை. அப்படியே இருந்தாலும், கிராமப் பள்ளிகளில், இணையதள வசதிக்கான, 'சிக்னல்' கிடைப்பது இல்லை.

முன்னுக்கு பின் முரண்

முக்கிய சாலைகளில், யாரும் செல்ல முடியாத அளவுக்கு, போலீசார், தடுப்புகள் வைத்துள்ளனர். இதை சமாளித்து, பணிபுரியும் ஊருக்குள் நுழைவது எப்படி?பள்ளிகளுக்கு செல்ல போக்குவரத்து வசதி கிடைக்குமா? நகரங்களில், ஆட்டோ, கால் டாக்சி போன்ற வாடகை வாகனங்கள் இயக்கப்படுமா?இதுபோன்று, அடுக்கடுக்கான பிரச்னைகள் எழுகின்றன.இவற்றை எல்லாம் விட, 'கொரோனாவை கட்டுப்படுத்த வேண்டுமென்றால், வீட்டை விட்டு வெளியே வராதீர்கள்' என, அரசே எச்சரித்து விட்டு, பொது சுகாதாரம் பற்றிய போதிய விழிப்புணர்வு இல்லாத, பள்ளி மாணவர்களை மட்டும், தேர்வுஎழுத வெளியே வருமாறு அழைப்பது, எந்த விதத்தில் நியாயம் என தெரியவில்லை.

மாணவர்களுக்கு 14 நாள் தனிமை?

தமிழக தலைமை செயலர் தரப்பில், மாவட்ட கலெக்டர்களுக்கு எழுதப்பட்ட கடிதத்தில், 'வேறு மாவட்டங்களில் இருந்து, இ - பாஸ் பெற்று வருபவர்களுக்கு, கொரோனா அறிகுறிகள் இருந்தால், மருத்துவமனைக்கு அனுப்பி பரிசோதனை நடத்த வேண்டும். அறிகுறி இல்லாதவர்களை, 14 நாட்கள் கட்டாயம் தனிமைப்படுத்த வேண்டும்' என, கூறப்பட்டுள்ளது.இந்த உத்தரவுப்படி, 10ம் வகுப்பு தேர்வுக்கு, மாவட்டம் விட்டு மாவட்டம் வரும் மாணவர்களும், அவர்களின் குடும்பத்தினரும் தனிமைப் படுத்தப்படுவரா? அவ்வாறு செய்தால், தேர்வை எங்கோ, எப்படி எழுதுவர்? மாணவர்கள் மனதளவில் பாதிக்கப்பட மாட்டார்களா?அவர்களுக்கு மட்டும் விலக்கு அளிக்கப்படும் என்றால், அவர்களில் சிலரால் மற்றவர்களுக்கோ, மற்றவர்களால் மாணவர்களுக்கோ, கொரோனா பரவாமல் தடுக்க முடியுமா என்பதை,அதிகாரிகளும், அரசும் யோசிக்க வேண்டும்.

'மூன்று நாளுக்கு முன் மாணவர்கள் மையம் அழைத்து வரப்படுவர்!'

ஈரோடு மாவட்டம், கோபியில், அமைச்சர் செங்கோட்டையன் அளித்த பேட்டி:

பத்தாம் வகுப்புக்கு, 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தேர்வு மையங்களில், பொதுத்தேர்வு நடக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தேர்வர்கள் வசதிக்காக, 5 கி.மீ., சுற்றளவுக்கு உட்பட்ட பகுதியிலேயே, மையங்கள் அமைக்கப்படும்.முன்பு ஒரு தேர்வறைக்கு, 20 தேர்வர்கள் மட்டுமே தேர்வு எழுதுவர். தற்போது கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கையாக, ஒரு அறைக்கு, 10 பேர் மட்டுமே தேர்வு எழுத உள்ளனர். விடுதியில் தங்கி பயின்ற, தனியார் பள்ளி மாணவ - மாணவியர், அவரவர் வீடுகளுக்கு சென்றிருப்பர். இவர்கள் தேர்வு துவங்கும் மூன்று நாட்களுக்கு முன் அழைத்து வரப்பட்டு, தேர்வு முடியும் வரை, உணவு வசதி செய்யப்படும். இப்பணிகள் அனைத்தும், வரும், 29ம் தேதிக்கு முன்நிறைவேற்றப்படும்.பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத வேண்டும் என்ற நிலை, அனைத்து மாநிலங்களிலும், ஒருமித்த கருத்தாக உள்ளது. வரும், 21ம்தேதி, அனைத்து ஆசிரியர்களும், அவரவர் பள்ளிக்கு வர வேண்டும். இவர்கள் வாயிலாக, எந்தெந்த மாணவர்கள், எங்கிருந்து வருகின்றனர் என்ற விபரம் அடங்கிய பட்டியல்பெறப்படும். ஹால் டிக்கெட், 'ஆன்லைன்' மூலமாக வழங்கப்படும். இவ்வாறு, அவர் கூறினார்.

இப்படியும் செய்யலாமே...!

* மாணவர்களுக்கு, பள்ளிகளில் அடையாள அட்டை தரப்பட்டுள்ளது. அந்த அடையாள அட்டையை ஆவணமாக பயன்படுத்த, வழி வகை செய்யலாம்

* தலைமை ஆசிரியர் வழியாக, தேர்வு மையம், தேர்வு தேதி, ஹால் டிக்கெட் உள்ளிட்ட விபரங்களை, மொபைல் போனில்,எஸ்.எம்.எஸ்., ஆக மாணவர்களுக்கு அனுப்பி வைக்கலாம். இந்த விபரங்களை வைத்து, மாணவர்கள் எந்த இடையூறும் இன்றி பள்ளிகளுக்கு வர, வழி வகை செய்யலாம்.

படிக்கும் பள்ளியிலேயே மையம்

'பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு, படிக்கும் பள்ளிகளிலேயே, தேர்வு மையம் அமைக்கப்படும்' என, பள்ளி கல்வித் துறை தெரிவித்துள்ளது.பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு, ஜூன், 1ல் நடக்கிறது. இந்த தேர்வுக்கான ஏற்பாடுகள் குறித்து, தலைமை ஆசிரியர்களுக்கு, முதன்மை கல்வி அதிகாரிகள் அனுப்பியுள்ள சுற்றறிக்கை:தேர்வு எழுதும் அனைத்து மாணவர்களுக்கும், அவர்கள் படிக்கும் பள்ளியிலேயே, தேர்வு மையம் அமைக்கப்படும்.ஒவ்வொரு தேர்வறையிலும், 10 மாணவர்கள் மட்டும், சமூக இடைவெளியுடன் அமர வைக்கப்படுவர்.அனைத்து தொடக்கப் பள்ளி ஆசிரியர்களும், 10ம் வகுப்பு பொதுத் தேர்வு பணிகளில் ஈடுபடுத்தப்படுவர்.தனிமைப்படுத்தப்பட்ட பகுதி மாணவர்களுக்கு, சிறப்பு தேர்வு மையங்கள் அமைக்கப்படும். தேர்வு மையங்களில் கிருமி நாசினி தெளித்து, அறைகளை துாய்மையாக வைக்க வேண்டும். அனைத்து மாணவர்களும், முக கவசம் அணிந்திருக்க வேண்டும். இதற்கு, பள்ளிகளில் ஏற்பாடுகள் செய்ய வேண்டும்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post