பாரம்பரியமான நெல் ரகங்களில், அதிக மழை நீர் தேங்கும் பள்ளமான நிலங்களில்
சாகுபடி செய்யக்கூடிய ஒரே ரகம் ‘கார்’ நெல். இந்த ரகம் 120 நாள்
சாகுபடிக்காலம் கொண்டது.
சிவப்பு நெல், வெள்ளை அரிசி, நடவு செய்ய மட்டுமே ஏற்ற ரகம். பயிர் வளர்ந்து
பச்சை பிடித்துவிட்டால் அதன்பிறகு பதினைந்து நாட்களில் நீர்
அதிகரித்தால்கூட கவலைப்பட வேண்டியதில்லை.
காரணம் இந்த நெல் ரகம் தண்ணீருக்கு உள்ளேயே பூத்து, பால் பிடித்து, கதிர்
முற்றி முழு வளர்ச்சியும் அடைந்து விளையக்கூடியது. இதன் வைக்கோல்
அடர்த்தியாகவும் கம்பீரமாகவும் இருப்பதால் தண்ணீரில் வாரக் கணக்கில்
இருந்தால் கூட அழுகிப்போகாது.
இடுப்பளவு தண்ணீர் இருந்தால்கூட இந்த நெல் ரகத்தை அறுவடை செய்து, கதிர்களை
கயிறு கட்டி களத்துக்கு எடுத்துவருவார்கள். சூழ்நிலைக்கு ஏற்ப ஈரமாக
இருந்தால்கூட, அது காயும்வரை களத்து மேட்டில் மூடிவைத்திருப்பார்கள்.
ஆனால், ஈரத்திலும்கூட நெல் முளைக்காது. இந்த நெல் மறு ஆண்டு ஆடிப்
பட்டத்தில் மட்டுமே முளைக்கும் தன்மை கொண்டது. பாரம்பரிய நெல்லில் நடுத்தர
ரகமாகவும் மத்திய கால பயிராகவும் இது உள்ளது.
குறைந்தது ஏக்கருக்கு 24 மூடைவரை மகசூல் கிடைக்கும். ரசாயன உரங்களும்
பூச்சிக்கொல்லிகளும் இதற்கு தேவையில்லை. இயற்கையில் கிடைக்கும் சத்துகளை
கிரகித்துக்கொண்டு விளைந்து மகசூல் கொடுக்கக்கூடியது.
இந்த கார்நெல் ரகம் சாப்பாட்டுக்கும் பலகாரங்களுக்கும் ஏற்றது. குறிப்பாக, கார் அவல் சிறப்பு வாய்ந்த ஒன்றாக கருதப்படுகிறது. சிவப்பு அரிசியாக இருப்பதால் நீரிழிவு நோய், வாதம் தொடர்பான நோய்கள், கரப்பான் போன்ற நோய்களுக்கு மருந்தாக பயன்படுவதாக சித்த மருத்துவத்தில் கூறப்பட்டுள்ளது
Post a Comment