Title of the document
தற்காலிகப் பணியாளர்களாக 2,215 இரண்டாம் நிலை பல்நோக்கு சுகாதார ஆய்வாளர்கள் நியமிக்கப்பட உள்ளதாக சுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு துறையிலிருந்து அரசாணை வெளியாகியுள்ளது

கொரோனா பரவல் உலகம் முழுவதும் பெருமளவு தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. கொரோனாவைக் கட்டுப்படுத்த தனித்துவமான மருந்துகள் எதுவும் கண்டுபிடிக்கப்படாததால் பெரும்பாலான நாடுகள் ஊரடங்கு உத்தரவுகளை அறிவித்துள்ளன. மற்ற நாடுகளுடன் ஒப்பிடும்போது இந்தியா பெருமளவு பாதிப்பை சந்திக்கவில்லை என்றாலும் தொடர்ந்து பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
தமிழ்நாட்டில் இதுவரை 1,323 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் தொடர்ந்து ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது. கொரோனா அதிகம் பாதித்த மாவட்டங்கள் ரெட் அலர்ட் செய்யப்பட்டதோடு, சுகாதாரப் பணியாளர்கள் தினமும் வீடுதோறும் சென்று, ஆய்வு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள். இந்த நிலையில், கடந்த சில தினங்களாக தமிழகத்தில் கொரோனா தொற்று பரவுவது குறைந்துள்ளதோடு, பாதிக்கப்பட்டவர்களில் பலர் குணமாகி வீடு திரும்பத் தொடங்கியுள்ளனர் என சுகாதாரத் துறை சார்பாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்திலிருந்து கொரோனாவை முற்றிலுமாக ஒழிக்க மருத்துவர்கள், செவிலியர்கள், காவலர்கள், சுகாதாரப் பணியாளர்கள் இன்னும் சில வாரங்கள் தீவிரமாகச் செயல்படுவார்கள் என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று தெரிவித்திருந்தார். அதன் ஒரு பகுதியாக அவசர கால நடவடிக்கைகளைக் கருத்தில் கொண்டு, தற்காலிகப் பணியாளர்களாக 2,215 இரண்டாம் நிலை பல்நோக்கு சுகாதார ஆய்வாளர்கள் நியமிக்கப்பட உள்ளதாக சுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு துறையிலிருந்து அரசாணை வெளியாகியுள்ளது.

அந்த அறிக்கையின்படி, 12-ம் வகுப்பில் உயிரியல் அல்லது தாவரவியல் மற்றும் விலங்கியல் படித்த ஆண்கள் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர். மூன்று மாதம் தற்காலிகப் பணியாளர்களாகப் பணியாற்றும் இவர்களுக்கு மாதம் ரூ.30,000 ஊதியம் வழங்கப்பட உள்ளது. இவர்கள் மூலம் பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகளும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்படும்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
ஒவ்வொரு மாவட்டத்திலும் எத்தனை நபர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர் என்ற தகவலும் அரசாணையில் தெரிவிக்கப்பட்டடுள்ளது. இந்தப் பணியில் சேருவதற்கு, எவ்வாறு அணுக வேண்டும், எப்படி விண்ணப்பிக்க வேண்டும் உள்ளிட்ட தகவல்கள் இன்னும் சில தினங்களில் மாவட்ட ஆட்சியர் மூலமாக அறிவிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post