Title of the document
தன்னுடைய வளர்ச்சிக்கும் தனது தற்போதைய நிலைக்கும் காரணமாக இருந்த ஆசிரியை, 20 வருடங்களுக்குப் பின்பு பெயர் சொல்லி அழைத்தபோது பழைய மாணவர் நெகிழ்ச்சியடைந்தார்.

கொரோனா பாதிப்பைத் தடுக்கும் வகையில் நாடு முழுவதும் பிறப்பிக்கப்பட்டிருக்கும் ஊரடங்கு உத்தரவு பலருக்கும் புதிய அனுபவங்களையும் படிப்பினைகளையும் கற்றுக் கொடுக்கிறது. இந்த நிலையில், சப்-இன்ஸ்பெக்டர் ஒருவர் தன்னுடைய பள்ளி ஆசிரியையை 20 வருடங்களுக்குப் பின்பு சந்தித்துள்ளார். 
கேரளாவின் ஆலப்புழா காவல்நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக இருப்பவர் டோல்சன் ஜோசப். அவரது காவல்நிலையத்துக்கு வந்த தொலைபேசி அழைப்பில் பேசிய பெண்மணி, `எனக்கு இருக்கும் நோய்க்கு நான் தினமும் இரு மாத்திரைகளை எடுத்துக்கொள்ள வேண்டும். அவை கிடைப்பதில் சிரமம் இருக்கிறது. நீங்கள் வாங்கிக்கொடுக்க முடியுமா?’ எனக் கேட்டார்.

ஊரடங்கு காலத்தில், பொதுமக்களுக்குத் தேவையான மருந்துகள் உள்ளிட்டவற்றை கேரள காவல்துறையினரே முன்னின்று பெற்றுக் கொடுத்து வருகிறார்கள். அதனால் தொலைபேசி வாயிலாக உதவி கேட்டவருக்கான மாத்திரைகளை திருவனந்தபுரத்தில் இருந்து வரவழைத்தனர்.
அந்த மாத்திரைகளை எடுத்துக்கொண்டு சப்-இன்ஸ்பெக்டர் டோல்சன் ஜோசப் சென்றார். குறிப்பிட்ட வீட்டின் கதவைத் தட்டியதும் வயதான பெண்மணி கதவைத் திறந்து வெளியே வந்தார். அவரைப் பார்த்ததுமே டோல்சன் ஜோசப்புக்கு, தன் ஆசிரியை ஹம்சகுமாரி என்பது தெரிந்துவிட்டது.

தன் வாழ்வு உயர்வதற்குக் காரணமாக இருந்த ஆசிரியையை 20 வருடங்களுக்குப் பின்னர் பார்த்ததும் மகிழ்ச்சியடைந்த டோல்சன், தன் முகக் கவசத்தை அகற்றினார். உடனே அவரை அடையாளம் கண்டுகொண்ட ஆசிரியை, `ஏய்.. டோல்சன்’ என அழைத்தார். அருகில் நின்றுகொண்டிருந்த ஆசிரியையின் கணவருக்கு எதுவுமே புரியவில்லை. 
பின்னர் எஸ்.ஐ டோல்சன் ஜோசப்பை தன் கணவருக்கு ஆசிரியை ஹம்சகுமாரி அறிமுகப்படுத்தி வைத்தார். ``நான் காட்டூரில் உள்ள ஹோலி ஃபேமிலி பள்ளியில் உடற்கல்வி ஆசிரியையாகப் பணியாற்றியபோது டோல்சன் அங்கு படித்தார். விளையாட்டுப் போட்டிகளில் மிகுந்த ஈடுபாடு கொண்டவராக டோல்சன் இருந்தார்.

பள்ளியில் நடக்கும் போட்டிகளில் மட்டுமல்லாமல் வெளியிடங்களில் நடக்கும் போட்டிகளிலும் டோல்சன் பங்கேற்று பரிசுகளை வெல்வதுடன் பாடங்களையும் நன்றாகப் படிப்பதால் பள்ளியில் உள்ள ஆசிரியர்கள் அனைவருக்குமே பிடிக்கும். 
நான் ஐந்து வருடங்களுக்கு முன்பு ஓய்வு பெற்றுவிட்டேன். எனக்குக் குழந்தைகள் இல்லை என்றாலும் நான் வெளியில் செல்லும் இடங்களில் எல்லாம் என் மாணவர்கள் என்னைத் தங்களின் தாயாக நினைத்து பாசம் காட்டுகிறார்கள். மருத்துவமனை, கருவூலம் என எங்கு சென்றாலும் பழைய மாணவர்களைப் பார்க்க முடிவது எனக்கு மன நிறைவாக இருக்கிறது” என்று மகிழ்ந்தார். 

சப்-இன்ஸ்பெக்டர் டோல்சன் ஜோசப், ``நான் வாழ்வில் உயரவும் இந்த நிலையை அடையவும் காரணமாக இருந்த மிக முக்கியமான சிலரில் ஆசிரியை ஹம்சகுமாரியும் ஒருவர். அவரை இன்று சந்தித்தது மிகுந்த மகிழ்ச்சியாக இருக்கிறது” என்று நெகிழ்ந்தார்.
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post