Title of the document
 தேர்வு நோக்கில் கரோனா விடுமுறையைக் கடப்பது எப்படி?

N எஸ்.எஸ்.லெனின் N

கடந்த வாரத்தில் இந்தியாவில் அறிமுகமானாலும், கரோனா விடுமுறை என்பது பல நாடுகளிலும் ஜனவரி முதலே நடைமுறையில் உள்ளது. சர்வதேச அளவில் மாணவர் உலகம் இதுவரை பார்க்காத நீண்ட விடுமுறையாக இதைக் கணித்துள்ளார்கள். மார்ச் முதல் வாரம் வரை உலகெங்கும் சுமார் 30 கோடி மாணவர்கள் கரோனா பாதிப்பால் வீட்டில் முடங்கியுள்ளதாக யுனெஸ்கோ அறிக்கை ஒன்று தெரிவிக்கிறது.


இந்த மாணவர்களின் அன்றாடக் கல்வி முதல் தேர்வு நடைமுறைகள் வரை அனைத்தும் கேள்விக்குறியாகி உள்ளன. அரசுகள், கல்வி நிலையங்கள், கல்வியாளர்கள் எனப் பல தரப்பிலும் இந்த அனுபவத்திலிருந்து எதிர்காலத்துக்கான கல்வி நடைமுறைகள் திட்டமிடப்பட உள்ளன. இணைய வழிக் கல்விக்கு இனி முக்கியத்துவம் அளிக்கப்படும் எனத் தமிழக அரசு அறிவித்திருக்கிறது. மாணவர்களும் தம் பங்குக்குப் புதிய சவால்களைச் சந்திக்கத் தயாராக வேண்டும்.

வீட்டிலிருந்தே படிக்கலாம்


கரோனா பாதிப்பால் நிறுவனங்கள் தங்களுடைய பணியாளர்களை வீட்டிலிருந்தே அலுவலகப் பணிகளைத் தொடருமாறு பணித்துள்ளன. அப்படிப் பெரியவர்கள் உடனிருக்கும்போது அவர்களுடைய பாணியிலேயே கல்விப் பணிகளை மாணவர்கள் வீட்டிலிருந்தே தொடங்கலாம். வீட்டிலிருந்தபடி பணிபுரிவோர் பலரும் வழக்கமாக அலுவலகம் செல்வது போன்றே புறப்படுவார்கள்.

இந்தப் புறப்பாடு வீட்டின் இன்னொரு மூலை அல்லது அறையிலிருக்கும் ‘அலுவலக’ மேஜையில் நிலைகொள்ளும். மனதளவிலான தயாரிப்பில், சூழலுக்கான ஏற்பாடுகளையும் தீர்மானித்துக்கொண்டு அந்தப் பணியாளர் தனது ‘அலுவலக’க் கடமைகளைத் தொடங்குவார். மாணவர்களும் இதே வகையில் தினசரி கல்வி நிலையங்களுக்குப் புறப்படுவதற்கான தயாரிப்புடன் அன்றாடப் படிப்பு - திருப்புதல் களைத் திட்டமிட்டுத் தொடரலாம்.

சூழலை மாற்றுவோம்

முழு நேரமும் வீட்டிலிருந்தே படிப்பதன் தொடக்கமாக, அதற்கான சூழலை வடிவமைத்துக்கொள்வது முக்கியம். வழக்கமாக அமர்ந்து படிக்கும் மேசை - படிப்பறையை முழு நாளுக்குமான சூழலாக மாற்ற வேண்டும். பொதுத்தேர்வு/செமஸ்டர்களைத் தொடர்ந்து போட்டித் தேர்வு, நுழைவுத் தேர்வுகளும் நெருங்கிவருவதால் இந்த ஏற்பாடு தொடர்ச்சியாக உதவும்.

முன்னதாகத் தமக்கான தேவைகள், இடையூறுகள் தொடர்பாக வீட்டிலிருப்பவர்களுடன் கலந்து பேசுவது கூடுதல் பலன் தரும். தொலைக்காட்சி ஒலி, விருந்தினர் வருகை உள்ளிட்ட கவனச் சிதறல்களைத் தவிர்க்கவும் தடுக்கவும், அவசியமான முன்னெடுப்புகளுக்குப் பெரியவர்கள் பொறுப்பேற்றுக் கொள்வார்கள்.


தொடர்புகளைத் தொடர்வோம்

பள்ளி, கல்லூரி என்பது சக மாணவர்கள், நூலகம், ஆசிரியர் என சகலத்திலும் பாடம் சார்ந்து கலக்கவும், முடிவெடுக்கவும் உதவும் இடம். வீட்டில் படிப்பது என்றானதும் இவற்றிலிருந்து துண்டிக்கப்படாது, தொடர்புகளை உயிர்ப்புடன் வைத்திருப்பது அவசியம். இதற்கு வாட்ஸ் அப், டெலிகிராம் உள்ளிட்ட சமூக ஊடகங்களைத் துணையாகக் கொள்ளலாம். கரோனா விடுமுறையின் பெயரால் சிறப்புக் குழு ஒன்றை உருவாக்கலாம். அல்லது ஏற்கெனவே பயன்பாட்டிலுள்ள மாணவர் குழுக்களைச் சீர்படுத்திக்கொள்ளலாம்.

சக மாணவர்களுடன் ஆசிரியர்களும் இந்தக் குழுக்களில் இருப்பது உதவும். இடையூறாவதற்குச் சாத்தியமுள்ள இதர சமூகக் குழுக்களைச் செயலிகளில் அமைதிப்படுத்திவிடுவதும் நல்லது. இனி, இந்த குழுக்கள் வழி அன்றாடத் திட்டமிடல் - சரிபார்ப்புகளுக்கு நாளின் சில நிமிடங்களை மட்டுமே ஒதுக்கிவிட்டு, இதரப் பெரும்பொழுதுகளைப் படிப்பதிலும் திருப்புதலிலும் மட்டுமே தொடர வேண்டும்.

இணைய உதவி

அவ்வப்போது இதில் காணும் முன்னேற்றத்தைக் குறித்து வைப்பதுடன் அவற்றின் வெற்றிகரமான படிகளை, நட்பு வட்டத்தில் சிலரிடம் செயலிவழி பகிர்ந்துகொள்ளலாம். தேர்ந் தெடுக்கப்பட்ட சக மாணவர்கள் மத்தியில் அவசியமான பாடக்குறிப்புகள், தேர்வு நோக்கிலான தயாரிப்புகள் - திட்டமிடல்களைப் பரிமாறவும் செய்யலாம். குறிப்பிட்ட பாடங்களில் தடுமாற்றம் உள்ள மாணவர்கள், தங்கள் ஆசிரியர்கள், நட்புக்குழுவில் நன்றாகப் படிக்கும் மாணவர்களிடம் மேற்கண்ட தொழில்நுட்பங்களின் உதவியுடன் கலந்தாலோசிக்கலாம். அவசியமென்றால் தற்போது பரவலாகி இருக்கும் இணைய வழி சிறப்பு வகுப்புகளையும் நாடலாம். நேரடி சிறப்பு வகுப்புகளைவிட நேரம், கட்டணம் உள்ளிட்டவற்றில் இவை நெகிழ்வுத்தன்மையைக் கொண்டிருக்கும். நீட், ஐ.ஐ.டி.-ஜே.இ.இ., குடிமைப்பணி சார்ந்த தேர்வுகளுக்குத் தயாராவோருக்கும் ஏராளமான இணைய வழி பயிற்சிகள் கிடைக்கின்றன. அவற்றில் தங்களுக்கு உரியதைப் பெரியவர்கள்/வழிகாட்டிகள் உதவியுடன் ஆலோசித்துப் பெறலாம்.


உதவும் தொழில்நுட்பங்கள்

வீட்டிலிருந்தே படிப்பதற்குத் தற்போதைய தொழில்நுட்பங்கள் உதவக் காத்திருக்கின்றன. இதற்கு வாட்ஸ் அப், டெலிகிராம் உள்ளிட்ட சமூக ஊடக உதவிகள் மட்டுமன்றிச் சில சிறப்பு ஏற்பாடுகளையும் நாடலாம். சாதாரண முறையிலான ‘வீடியோ அழைப்புகள்’, செய்முறை விளக்கங்கள் - ஆய்வகப் பரிசோதனைகள் அடிப்படையிலான பாடத் தயாரிப்புகளுக்கு உதவும். இணைய வழி கருத்தரங்க வசதியான ‘வெபினார்’(Webinar) மூலமும் குழு மாணவர்கள் மத்தியிலான கலந்துரையாடலுக்கும் சந்தேகங்களைத் தீர்த்துக்கொள்வதற்கும் திட்டமிடலாம்.

வீட்டிலிருந்தபடியே பணிபுரிவோருக்கான எளிய தொழில்நுட்ப வசதிகளையும் உயர்கல்வி பயில்வோர் விசாரித்துப் பெறலாம். அந்த வகையில் தகவல்தொடர்புக்கான மின்னஞ்சல் முறைக்கு மாற்றாகப் பயன்படும் ஸ்லாக் (Slack) எனப்படும் ‘சாட்டிங் செயலி’ ஒட்டுமொத்த வகுப்பறை மாணவர்களுக்கும் உதவும்.

இந்த வரிசையில் Chanty, Fleep, Flock, Glip, Hangouts Chat உள்ளிட்ட உபாயங்களும் வழக்கில் உள்ளன. My Class Schedule, Time table போன்ற செயலிகள் திட்டமிடலுக்கும், StudyBlue, GoConqr உள்ளிட்டவை திருப்புதலுக்கும், MyStudyLife, Quizlet, ExamCountdown போன்றவை சுயமான தேர்வெழுதுதலுக்கும் உதவும். புதிய தொழில்நுட்பம் வாயிலாகப் புழங்குவது இளம் வயதினருக்குப் புத்துணர்வு தருவதாக அமையும். அலுப்பு அகற்றும் உத்திகள் வீட்டிலிருந்தபடியே முழு நேரமும் படிப்பது நாள்போக்கில் அலுப்பூட்டுவதாக மாறலாம்.

எனவே, தேர்வு நோக்கிலான தயாரிப்புகளில் அவ்வப்போது சில மாற்றங்களையும் செய்யலாம். இணையத் தொடர்பு மூலம் குழுவாகக் கூடிப் பாடங்களை விவாதிப்பது, விநாடி வினா பாணியில் திருப்புதல் மேற்கொள்வது, நெடிய பாடங்களை ஆளுக்கொரு பகுதியாகப் பிரித்துப் படிப்பதுடன் அவற்றை மற்ற மாணவர்களுடன் பகிர்ந்துகொள்வது போன்றவை உதவும்.

கல்வி நிலையங்களுக்குச் சென்று திரும்புவதால் கிடைத்துவந்த, உடல் - மனதளவிலான ஆரோக்கிய நன்மைகள் தற்போது வீட்டில் முடங்கியதில் கிடைக்க வாய்ப்பில்லை. எனவே, தொடர்ச்சியான பாடச் செயல்பாடுகளின் மத்தியில் சிறு இளைப்பாறல் அல்லது அலுப்பு அகற்றும் உத்திகளைப் பின்பற்றுவதும் அவசியம்.


கரோனா முற்றுகையின் மத்தியில், உடலின் நோய் எதிர்ப்பாற்றல் என்பது முன்னெப்போதையும்விட தற்போது முக்கியம் என்பதை மாணவர்கள் மறந்துவிடக் கூடாது. அலட்சியமின்றி நேரத்துக்கு உண்பதுடன், வீட்டிலிருந்தபடியே சிறு நடை, உடற்பயிற்சி, எளிய விளையாட்டுகள் போன்றவற்றுக்கும் நேரம் ஒதுக்கலாம்.

புதிய மாற்றங்களுக்குத் தயாராவோம்

கரோனோ தொற்று பேரிடராக அச்சுறுத்தினாலும், அதை நேர்மறையாக அணுகும் போக்கு மக்கள் மத்தியில் அதிகரித்துவருகிறது. தனிப்பட்ட சுகாதாரம், நோய்ப் பாதுகாப்பு, சூழலியல் விழிப்புணர்வு, பேதங்களைக் கடந்த சமூக ஊடாடல் எனப் பல கொடைகளை மக்கள் மத்தியில் கரோனா தந்துசெல்ல வாய்ப்புள்ளது.

அந்த வகையில் வீட்டிலிருந்தே படிப்பதும், தேர்வுக்குத் தயாராவதும் தொலைநோக்கிலான பல மாற்றங்களுக்கு மாணவர்களைத் தயார்படுத்தும். அடுத்துவரும் சில ஆண்டுகளில் அலுவலகங்கள் பலவும் அவற்றின் அமைவிடம் சார்ந்து பெரும் மாற்றங்களுக்கு ஆளாக உள்ளன.

கரோனா சவால்கள் மத்தியிலும், அதற்கான வெள்ளோட்ட மாற்றங்களை அவசியமான தொழில்நுட்ப உதவிகளுடன் பெருநிறுவனங்கள் பரிசோதித்துவருகின்றன. எனவே, நாளைய மாற்றங்களுக்கு ஈடுகொடுக்கவும், இந்த கரோனா விடுமுறை நமக்கு உதவக் காத்துள்ளது.
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post