சென்னை: போலியாக, பிஎச்.டி., சான்றிதழ் அளித்துள்ள பேராசிரியர்களை
கண்டுபிடிக்க, வரும், 16ம் தேதிக்குள், உண்மை தன்மை சான்றிதழ் தாக்கல்
செய்யும்படி, அண்ணா பல்கலை உத்தரவிட்டுள்ளது.
நாடு முழுவதும் உள்ள கல்லுாரிகள் மற்றும் பல்கலைகளில், பேராசிரியர்களின்
கல்வி சான்றிதழ்கள் மற்றும், பிஎச்.டி., ஆராய்ச்சி படிப்பு சான்றிதழ்களை
ஆய்வு செய்யும்படி, பல்கலை மானிய குழுவான, யு.ஜி.சி.,யும், அகில இந்திய
தொழில்நுட்ப கல்வி கவுன்சிலான, ஏ.ஐ.சி.டி.இ.,யும் உத்தரவிட்டன. இதையடுத்து,
அண்ணா பல்கலை சார்பில், இன்ஜினியரிங் கல்லுாரிகளின் பேராசிரியர்கள்
குறித்த சான்றிதழ்கள் சரிபார்க்கப்பட்டன. அதில், ஆராய்ச்சி படிப்பில், பல
போலி சான்றிதழ்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இது குறித்து,
கல்லுாரிகளின் முதல்வர்களுக்கு, அண்ணா பல்கலை பதிவாளர் கருணாமூர்த்தி
அனுப்பியுள்ள சுற்றறிக்கை:இன்ஜினியரிங் கல்லுாரிகளில் பணியாற்றும்
பேராசிரியர்கள் சிலர், பல கல்லுாரிகளில், தங்கள் பெயர்களை பதிவு
செய்துள்ளனர்.
அதேபோல, தாங்கள், பிஎச்.டி., ஆராய்ச்சி படிப்பு முடித்த, பல்கலைகளின்
பெயர்களை, பல விதமாக குறிப்பிட்டுள்ளனர்.இது குறித்து, ஆய்வு செய்ததில்,
பலர் பிஎச்.டி., தொடர்பாக, போலி சான்றிதழ்களை அளித்துள்ளதாக சந்தேகம்
எழுந்துள்ளது. எனவே, அனைத்து கல்லுாரிகளும், தங்கள் பேராசிரியர்களின்,
பிஎச்.டி., சான்றிதழ்களுக்கு உண்மை தன்மை சான்றிதழ்களை வாங்கி, வரும், 16ம்
தேதிக்குள், அண்ணா பல்கலையில் சமர்ப்பிக்க வேண்டும். இவ்வாறு
சுற்றறிக்கையில் கூறியுள்ளார்.
Post a Comment