Title of the document
1581823198491_images

அண்மையில் தொடக்கக்கல்வித் துறையின் கீழ் இயங்கும் அனைத்துவகை தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் பயின்று வரும் மூன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு முடிய உள்ள ஆதிதிராவிடர் பெண் குழந்தைகளுக்கு வழங்கப்படும் கல்வி ஊக்குவிப்புத் தொகைக்கான கேட்புப் பட்டியலில் சம்பந்தப்பட்ட மாணவியின் பெற்றோர் வங்கிக் கணக்கு எண்ணை ஒருவருக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்று சுற்றறிக்கை விடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
தகுதி வாய்ந்த பயனாளிகள் அரசு வழங்கும் நிதியுதவியை நேரிடையாகப் பெறுவது என்பது வரவேற்கத்தக்க ஒன்றாகும். அதற்கு வங்கிகள் மூலமாகப் பண பரிமாற்றம் முறை உதவியாக இருக்கும். மூன்றாம் தரப்பினரின் குறுக்கீடுகள் நிகழத் துளியும் வாய்ப்பில்லை. ஆனாலும் நடைமுறையில் பள்ளித் தலைமை ஆசிரியர், பெற்றோர் மற்றும் மாணவிகள் அடையும் வங்கிக் கணக்கு எண் சார்ந்த இன்னல்கள் ஏராளம். 
முதலில் ஒற்றை வங்கிக் கணக்கு எண்ணை ஒருவருக்கு மட்டுமே பயன்படுத்த அறிவுறுத்துவது என்பது நல்ல நடைமுறை அல்ல. வயிற்றுக்கும் வாழ்க்கைக்கும் போராடிக் கொண்டிருக்கும் ஏழை, எளிய, பாமர குழந்தைகளின் பெற்றோர் மிஞ்சிய வருமானத்தைப் சேமிக்க தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் சேமிப்புக் கணக்குத் தொடங்கவில்லை என்பதை முதலில் ஆழம் புரிந்து கொள்ள வேண்டும். 
நூறு நாள் திட்டத்தின் ஒரு பகுதியாக ஈட்டும் ஊதியத்தைப் பெறுவதற்காகவே அச்சேமிப்புக் கணக்கு ஆரம்பிக்கப்பட்டது. இதில் இரண்டுக்கு மேற்பட்ட பெண் குழந்தைகளின் பெற்றோர் பிள்ளைகளின் எண்ணிக்கைக்கேற்ப வங்கிகளில் சேமிப்புக் கணக்குக் கட்டாயம் தொடங்குதல் வேண்டும் என்பது அன்றாடக் கூலிகளாகக் காணப்படும் பெற்றோருக்கு இயலாத காரியமாகும். மேலும், வங்கிகள் அனைத்தும் நகரங்களில் அல்லது பெரிய கிராமங்களில் மட்டுமே இருக்கின்றன. 
போதிய போக்குவரத்து வசதிகள் இல்லாத குக்கிராமங்களில் வசிப்போருக்கு இது பெரும் சிரமங்களை உண்டாக்குகிறது. ஏற்கனவே அவர்களிடம் இருக்கும் கிராம அஞ்சலக சேமிப்புக் கணக்கினை கணக்கில் கொள்ள வேண்டாம் என்பது பெரிய அபத்தமான அறிவிப்பாகும். அதுபோலவே, பள்ளி நிர்வாகத்தின் தொடர் கேட்புக்கு இணங்கி, நாள் வருமானத்தைத் துறந்து கால்கடுக்க அலைந்து திரிந்து வங்கிகளுக்குச் செல்லும் பெற்றோர்கள், பாதுகாவலர்கள், சம்பந்தப்பட்ட பெண் குழந்தைகள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் சொல்லிமாளாதவை. வேண்டுமென்றே வங்கிகள் இது போன்றோர் மீது அக்கறைக் துளியுமின்றி அலைக்கழிப்பு செய்வதும் இழுத்தடிப்பு வேலையில் அவர்களைத் தள்ளுவதும் மிகுந்த வேதனைக்குரியது. 
குறிப்பிட்ட காலத்தில் வங்கிக் கணக்கைத் தொடங்கி உரிய சேமிப்புக் கணக்கு எண்ணைத் தர முடியாமல் திண்டாடுவதால் கேட்புப் பட்டியலை உரிய நேரத்தில் வட்டாரக் கல்வி அலுவலகத்தில் வடிவங்களை ஒப்புவிப்புச் செய்வதில் மேலும் காலதாமதம் ஆவதைத் தடுப்பதற்கில்லை.
கிராமத்தில் ஒரு பழமொழி உண்டு.பிள்ளையார் பிடிக்கப் போய் குரங்கு உருவான கதையாக மேற்குறிப்பிட்ட புதிய நடைமுறைகள் உள்ளன. பெற்றோருக்குப் பள்ளி நிர்வாகத்தின் மீதும்    ஆளும் அரசு மீதும்  வீண் வெறுப்பும் எரிச்சலும் உண்டாகும். எனவே, இதுகுறித்து கல்வித்துறை தம் முடிவில் திருத்தமும் மறுபரிசீலனையும் மேற்கொண்டு உரிய மற்றும் உகந்த வழிகாட்டுதல்கள் வழங்குதல் அவசர அவசியமாகும்.
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post