Title of the document
பல தனியார் பள்ளிகளில் இடைநிற்றல் என்ற பெயரில் வலுக்கட்டாயமாக 8 மற்றும் 9-ஆம் வகுப்புகளில் இருந்து மாணவர்கள் வெளியேற்றப்படுவதை அரசு தடுக்க வேண்டும் என தமிழ்நாடு ஆசிரியர்கள் சங்க நிர்வாகிகள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

தமிழ்நாடு ஆசிரியர்கள் சங்க மாநில நிர்வாகிகள் அவசரக் கூட்டம் சென்னை எழும்பூரில் சனிக்கிழமை நடைபெற்றது. இதைத் தொடர்ந்து சங்கத்தின் தலைவர் பி.கே.இளமாறன் செய்தியாளர்களிடம் கூறியது: மாநில நிர்வாகிகள் அவசரக் கூட்டத்தில் முக்கியத் தீர்மானங்களை நிறைவேற்றியுள்ளோம். 5, 8-ஆம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வுகளை ரத்து செய்ததற்காக அரசுக்கு நன்றி தெரிவிக்கிறோம்.

புதிதாக உருவாக்கப்பட்ட ஐந்து மாவட்டங்களுக்கு முதன்மைக் கல்வி அதிகாரிகளை விரைவில் நியமிக்க வேண்டும். பள்ளிக் கல்வித் துறையில் 2014-2015- ஆம் ஆண்டு நியமிக்கப்பட்ட கணக்காளர், கணினி உதவியாளர் உள்ளிட்ட பணியிடங்களில் 1,512 பேருக்கு தொகுப்பூதியம் மட்டுமே வழங்கப்பட்டு வருகிறது. 
அவர்களை பணி நிரந்தரப்
படுத்த வேண்டும்.
 
இவர்களுக்கு மத்திய அரசால் ஒதுக்கப்பட்ட நிதியை வழங்காமல் தமிழக அரசு இழுத்தடிக்கிறது. அதனை உடனடியாக வழங்க வேண்டும்.
 பள்ளிக் கல்வித் துறையின் அறிவுரைகளை அரசுப் பள்ளிகளைத் தவிர, பிறப் பள்ளிகள் கடைப்பிடிப்பதில்லை என்பதால் தனியார் பள்ளிகளை அரசின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர வேண்டும். 

அரசுப்பள்ளி ஆசிரியர்களில் உயர் கல்வி பயின்றவர்களுக்கு ஊக்கத்தொகை உடனடியாக வழங்கப்பட வேண்டும். கட்டாயக் கல்வித் திட்டத்தின் கீழ் 25 சதவிகித மாணவர்களை சேர்க்க வேண்டும் என்கிற விதியை தனியார் பள்ளிகள் நடைமுறைப்படுத்துகிறதா என அரசு கண்காணிக்க வேண்டும்.

கடந்த பத்து ஆண்டுகளாக பல தனியார் பள்ளிகளில் இடைநிற்றல் என்ற பெயரில் வலுக்கட்டாயமாக 8 மற்றும் 9-ஆம் வகுப்புகளில் இருந்து மாணவர்கள் வெளியேற்றப்படுவதை அரசு தடுக்க வேண்டும். கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிட்டால் பள்ளிக் கல்வித் துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபடுவோம் என்றார்.
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post