Title of the document
செமஸ்டர் தேர்வு விடைத்தாள்கள் சரியான முறையில் மதிப்பீடு செய்யப்பட்டுள்ளதா என்பதை தேர்வு முடிவுகளுக்கு முன்னரே மாணவர்கள் சரிபார்த்துக்கொள்ளும் வசதியை அண்ணா பல்கலைக்கழகம் அறிமுகம் செய்துள்ளது.

விடைத்தாள் மதிப்பீட்டில் வெளிப்படைத்தன்மை, மறுமதிப்பீட்டில் முறைகேடுகள் நடப்பதைத் தவிர்த்தல் போன்றவற்றுக்காக தேர்வு முடிவுகளுக்கு முன்பாகவே மாணவர்கள், தங்கள் விடைத்தாள்கள் சரியான முறையில் மதிப்பீடு செய்யப்பட்டுள்ளதா என்பதை அறிந்துகொள்ளும் வசதியை சென்னை அண்ணா பல்கலைக்கழகம் அறிமுகம் செய்துள்ளது. தேர்வு முடிவுகள் வெளியிடப்படுவதற்கு முன்னதாகவே விடைத்தாள்களை சரிபார்த்துக்கொள்ளும் வசதி உடனடியாக அமலுக்கு வருவதாகவும், கடந்த 2019 நவம்பர், டிசம்பர் மாதங்களில் நடைபெற்ற செமஸ்டர் தேர்வு விடைத்தாள்களை மாணவர்கள் தேர்வு முடிவுகளுக்கு முன்பாகவே சரிபார்த்துக்கொள்ளலாம் என்று அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

துறைத்தலைவர்கள் முன்பாக விடைத்தாள் சரிபார்ப்பு நாள் என்று ஒரு தினம் முடிவு செய்யப்பட்டு அந்நாளில் மாணவர்கள் தங்களது விடைத்தாள்கள் சரியான முறையில் திருத்தப்பட்டுள்ளதா? ஏதேனும் பிழைகள் இருக்கிறதா? என்பதை அறிந்து கொள்ள முடியும். விடைத்தாள்கள் மதிப்பீடு செய்யப்பட்டதில் ஏதேனும் குறைகள் இருப்பதாக மாணவர்கள் கருதினால், மாணவர்கள் முன்னிலையில், துறை வல்லுநர்கள் அடங்கிய குழு விடைத்தாள்கள் மதிப்பீடு செய்யும் என்றும் அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

விடைத்தாள் மதிப்பீடை தேர்வு முடிவுகளுக்கு முன்பாகவே மாணவர்கள் அறிந்துகொள்ளும் வசதி முதற்கட்டமாக அண்ணா பல்கலைக்கழகத்தின் வளாகக் கல்லூரிகளான கிண்டி பொறியியல் கல்லூரி, அழகப்பா தொழில்நுட்பக் கல்லூரி, மெட்ராஸ் இன்ஸ்ட்டியூட் ஆப் டெக்னாலஜி, ஸ்கூல் ஆப் ஆர்க்கிடெக்சர் & பிளானிங் ஆகிய 4 கல்லூரிகளில் மட்டும் அமல்படுத்தப்பட்டுள்ளதாக பல்கலைக் கழக நிர்வாகம் தெரிவித்துள்ளது. தற்போதைய நடைமுறையில் B.E., B.Tech., B.Arch., M.E., M.Tech., M.Arch., ஆகிய படிப்புகளில் பயிலும் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு டிஜிட்டல் முறையிலும், பிற மாணவர்களுக்கு சாதாரண முறையிலும் விடைத்தாள்கள் மதிப்பீடு செய்யப்பட்டு வருகிறது.

அண்ணா பல்கலைக்கழகத்தின் 4 வளாகக் கல்லூரிகளில் பயிலும் 30,000 மாணவர்களில் 3,000 மாணவர்கள் ஒவ்வொரு செமஸ்டரும் மறுமதிப்பீடு கோரி விண்ணப்பித்து வருவதாகவும், புதிய நடைமுறை மூலம் மறுமதிப்பீடு கோருவது முற்றிலும் குறையும் என்றும் பல்கலை. நிர்வாகம் தெரிவித்துள்ளது. வெளிப்படைத்தன்மை பின்பற்றப்படுவதால் முறைகேடு நடைபெறுவதற்கான வாய்ப்புகள் முற்றிலும் ரத்தாகும் சூழல் ஏற்பட்டுள்ளதாகவும், மறுமதிப்பீட்டுக்கு மாணவர்கள் செலவிடும் தொகையும் குறையும் என்றும் பல்கலை. நிர்வாகம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post