தேர்தல், தேர்வு பணிகளால் ஆசிரியர்களுக்கு நெருக்கடி! அக்கறை காட்டுமா பள்ளிக் கல்வித் துறை?

Join Our KalviNews Telegram Group - Click Here
9092837307 - Add This Number In Your Whatsapp Groups - 9092837307
உள்ளாட்சி தேர்தல் பயிற்சி வகுப்பும், மாணவர்களுக்கான தேர்வும், ஒரே நாளில் நடத்தப்படுவதால், தேர்வுப் பணியா; தேர்தல் பணியா என்ற குழப்பமும், நெருக்கடியும், பள்ளி ஆசிரியர்களுக்கு ஏற்பட்டுள்ளது. எதை புறக்கணித்தாலும் சிக்கல் என்பதால், முடிவெடுக்க முடியாமல் திணறி தவிக்கின்றனர். இப்பிரச்னைக்கு தீர்வு காண்பதில், பள்ளிக் கல்வித்துறை அக்கறை செலுத்துமா என்ற எதிர்பார்ப்பு, ஆசிரியர்கள் வட்டாரத்தில் எழுந்துள்ளது. தமிழகத்தில், 27 மாவட்டங்களில், ஊரக உள்ளாட்சி பதவிகளுக்கு, இரண்டு கட்டங்களாக, தேர்தல் நடத்தப்படுகிறது. முதல் கட்ட தேர்த லில், 1.30 கோடி வாக்காளர்கள், இரண்டாம் கட்ட தேர்தலில், 1.28 கோடி வாக்காளர்கள், ஓட்டளிக்க உள்ளனர்.தேர்தல் பணியில், 702 தேர்தல் நடத்தும் அலுவலர்கள்; 13 ஆயிரத்து, 60 உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் உள்ளிட்ட, 4.02 லட்சம் பேர் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.இவர்களில், அரசு ஊழியர்கள், அரசு பள்ளி மற்றும் தனியார் பள்ளி ஆசிரியர்கள் அடங்குவர். தேர்தல் பணியில் ஈடுபடும் ஊழியர்களுக்கு, நேற்று முதல் கட்ட பயிற்சி வகுப்பு துவங்கியது; இன்றும் பயிற்சி வகுப்பு நடக்க உள்ளது.

இதில், 'தேர்தல் பணியில் ஈடுபட உள்ள ஊழியர்கள் அனைவரும், கட்டாயம் பங்கேற்க வேண்டும்' என, மாநில தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.தேர்தல் பயிற்சி வகுப்புகள் குறித்த விபரம், மாநில தேர்தல் ஆணையம் சார்பில், பள்ளிக் கல்வித்துறைக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்விபரத்தை, பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள், அரசு தேர்வுத் துறைக்கு தெரியப்படுத்தி உள்ளனர். ஆனால், அரசு தேர்வுத் துறை, உள்ளாட்சி தேர்தல் பயிற்சி வகுப்பை கவனத்தில் கொள்ளாமல், எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு, இன்று திறனறி தேர்வை நடத்துவதாக அறிவித்துள்ளது. அதற்கான பணிகளில் ஈடுபடுமாறு ஆசிரியர்களுக்கு, இயக்குனரகம் உத்தரவிட்டுள்ளது.

'மெமோ' தரப்படும் இன்று, 534 மையங்களில், திறனறி தேர்வு நடக்க உள்ளது. இதில், 1.51 லட்சம் மாணவ - மாணவியர் பங்கேற்க உள்ளனர். தேர்வு பணியில், 8,000 ஆசிரியர்கள் வரை ஈடுபட உள்ளனர். அவர்கள் அனைவரும், இன்று தேர்வு பணிக்கு வர வேண்டும் என, தேர்வுத் துறை இயக்குனரகம் உத்தரவிட்டுள்ளது.

இதற்கு செல்லாவிட்டால், 'மெமோ' வழங்கப்படும். அதேபோல், மாநில தேர்தல் ஆணையம், தேர்தல் பயிற்சி வகுப்புக்கு, இன்று கட்டாயம் வர வேண்டும் என, உத்தரவிட்டுள்ளது. அதற்கு செல்லாவிட்டாலும், 'மெமோ' கொடுக்கப்படும். இதனால், திறனறி தேர்வுப் பணிக்கு செல்ல வேண்டிய ஆசிரியர்களுக்கு, 'தேர்வுப் பணியா, தேர்தல் பணியா' என்ற நெருக்கடியும், குழப்பமும்ஏற்பட்டுள்ளது.

அரசு தேர்வுத்துறை இயக்குனரகம், பள்ளி கல்வி துறையிடம் கலந்து ஆலோசிக்காமல், தன்னிச்சையான முடிவுகளை எடுப்பதால், இந்த குழப்பம் ஏற்படுவதாக, ஆசிரியர்கள் குற்றம் சாட்டினர். ஏற்கனவே, கன மழை பெய்த, டிச., 1ம் தேதி, திறனறி தேர்வை நடத்துவதாக, தேர்வு துறை அறிவித்தது. பின், தமிழக அரசின் அறிவுறுத்தல் காரணமாக, தேர்வு தள்ளி வைக்கப்பட்டது. அதே தேர்வை, உள்ளாட்சி தேர்தலுக்கான பயிற்சி வகுப்பு நடக்கும் நாளில் அறிவித்து, மற்றொரு குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

உள்ளாட்சி தேர்தல் பணிகளை கூட தெரிந்து கொள்ளாமல், அரசு தேர்வு துறை செயல்படுவது, பள்ளி கல்வி அதிகாரிகளுக்கு, தேவையற்ற நெருக்கடியை ஏற்படுத்தி உள்ளது.தீர்வு காண வேண்டும்இரண்டாம் கட்ட தேர்தல் பயிற்சி வகுப்பு, வரும், 21 மற்றும் 22ம் தேதி நடக்க உள்ளது. மழை காரணமாக, பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்ட மாவட்டங்களில், 21ம் தேதி, வேலை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே, பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் தலையிட்டு, இப்பிரச்னைகளுக்கு தீர்வு காண வேண்டும். திறனறி தேர்வில் பங்கேற்றதால், தேர்தல் பயிற்சி வகுப்புக்கு செல்ல முடியாத ஆசிரியர்கள் மீது, நடவடிக்கை எடுப்பதை கைவிட வேண்டும். அடுத்த வாரம், தேர்தல் பயிற்சி வகுப்பு நடப்பதால், அன்று பள்ளி நடப்பதை தவிர்க்க வேண்டும்என, ஆசிரியர்கள்வலியுறுத்தி உள்ளனர். - நமது நிருபர் -

Post a Comment

0 Comments