Title of the document
 ஜன., 15,  ஒரே நாடு, ஒரே ரேஷன் கார்டு, அமல், மறு டெண்டர், கூட்டுறவு துறை

நாட்டின் எந்தப் பகுதியிலும், ரேஷன் பொருட்களை வாங்கும்,'ஒரே நாடு; ஒரே ரேஷன் கார்டு' திட்டத்தை, 2020, ஜன., 15ல்அமல்படுத்த, மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. முதல்கட்டமாக, ஆந்திரா உட்பட, 12 மாநிலங்களில் இது அறிமுகம் செய்யப்படுகிறது. எதிர்ப்பைச் சமாளிப்பதற்காக, மத்திய அரசு புதிய வியூகத்தைவகுத்துள்ளது.
நாட்டின் எந்தப் பகுதி யில் இருந்தாலும், ரேஷன் பொருட்களை பெற்றுக் கொள்ளும் வகையில், ஒரே இந்தியா; ஒரே ரேஷன் கார்டு திட்டத்தை, மத்திய அரசு அறிவித்தது.இந்த திட்டத்தின்படி, ஒரு குறிப்பிட்ட மாநிலத்தில் ரேஷன் அட்டை வைத்துள்ளோர், மற்றொரு மாநிலத்திலும் தங்களுக்கான ரேஷன் பொருட்களை வாங்கிக் கொள்ளலாம்.
வேலைக்காக மாநிலம் விட்டு மாநிலம் செல்வோருக்கும், ரேஷன் பொருட்கள் கிடைக்கும் வகையில், உணவு பாதுகாப்பு சட்டத்தை நிறைவேற்றும் வகையில், இந்த திட்டம் அறிமுகம் செய்யப்படுவதாக, அறிவிக்கப்பட்டிருந்தது.பல்வேறு மாநிலங்களில், ரேஷன் பொருட்கள், 'பாயின்ட் ஆப் சேல்' எனப்படும், கருவி மூலம் வழங்கப்படுகிறது. தங்களுடைய ஆதார் உறுதி பார்த்தல் அல்லது கைரேகை பதிவு மூலம், நாட்டின் எந்தப் பகுதியிலும் பொருட்கள் வாங்கும் வசதி கிடைக்கும்.
உணவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ், அரிசி, கோதுமை போன்ற தானியங்கள், 1 கிலோ, 1 ரூபாய் முதல், 3 ரூபாய் வரை வழங்கப்படுகின்றன.தற்போது நாடு முழுவதும், 79 கோடி ரேஷன் கார்டுகள் புழக்கத்தில் உள்ளன. ஒரே நாடு, ஒரே ரேஷன் கார்டு திட்டம் மூலம், 3.5 கோடி பேர் பயன் பெறுவர் என, கணக்கிடப்பட்டுள்ளது.
வரும், 2020, ஜூன் முதல் இந்த திட்டத்தை அமல்படுத்த மத்திய அரசு திட்டமிட்டிருந்தது. ஆனால், பல மாநிலங்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இந்த எதிர்ப்பை முறியடிக்கும் வகையில், இந்த புதிய திட்டம், முதல்கட்டமாக, 2020, ஜன., 15ல் அமல்படுத்த, மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.ஆந்திரா, தெலுங்கானா, குஜராத், மஹாராஷ்டிரா, ஹரியானா, ராஜஸ்தான், கர்நாடகா, கேரளா, கோவா, மத்தியப் பிரதேசம், திரிபுரா, ஜார்க்கண்ட் ஆகிய, 12 மாநிலங்களில் இது அறிமுகம் செய்யப்பட உள்ளது.
அதைத் தொடர்ந்து, படிப்படியாக அனைத்து மாநிலங்களுக்கும் விரிவுபடுத்த, மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதன் மூலம், எதிர்ப்புகளை முறியடித்து, திட்டத்தை வெற்றிகரமாக செயல் படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
தமிழகத்தில் செயல்படுத்த தாமதமாகும்
ரேஷன் கடைகளில், கார்டுதாரர்களின் கைரேகை பதியும் முறை செயல்பாட்டிற்கு வராததால், மத்திய அரசின், 'ஒரே நாடு; ஒரே ரேஷன் கார்டு' திட்டத்தை, தமிழகத்தில் அமல்படுத்துவதில் தாமதமாகும் சூழல் உருவாகியுள்ளது.மத்திய அரசின், 'ஒரே நாடு; ஒரே ரேஷன் கார்டு' திட்டத்தின் கீழ், எந்த மாநிலத்தில் உள்ள, ரேஷன் கார்டுதாரர்களும், எந்த மாநிலத்திலும், ரேஷன் பொருட்களை வாங்கலாம். 
தமிழகத்தில், கட்டுமானம், ஓட்டல், பெட்ரோல் பங்க் என, பல தொழில்களில், வட மாநிலங்களை சேர்ந்தவர்கள் அதிகளவில் பணிபுரிகின்றனர்.ஒரே ரேஷன் கார்டு திட்டத்தால், அவர்கள், தமிழக ரேஷன் கடைகளில் பொருட்கள் வாங்க முடியும். இதனால், அத்திட்டத்தை அமல்படுத்த, தமிழக எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன. இருப்பினும், 'ஒரே ரேஷன் கார்டு திட்டம், தமிழகத்தில் அமல்படுத்தப்படும்; பிற மாநிலத்தவருக்கு, அரிசி, கோதுமை தரப்படும்; அதற்கு, அவர்களின் மாநிலங்களில், என்ன விலை உள்ளதோ, அந்தப் பணம் வசூலிக்கப்படும்' என, கூட்டுறவு துறை, உணவு துறை அமைச்சர்கள் தெரிவித்தனர்.
தற்போது, அனைத்து மாநிலங்களிலும், 'ஆதார்' எண் அடிப்படையில், 'ஸ்மார்ட்' ரேஷன் கார்டுகள் வழங்கப்பட்டு உள்ளன. இதனால், ஒரே நபர், வெவ்வேறு இடங்களில், பொருட்கள் வாங்க முடியாது. இருப்பினும், ரேஷன் கார்டுதாரர்களுக்கு மட்டும் பொருட்கள் வழங்க வேண்டும் என, மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இதனால், ஒரே ரேஷன் கார்டு திட்டத்தை தமிழகத்தில் செயல்படுத்த, 'பயோமெட்ரிக்' எனப்படும் கைரேகையை பதியும் திட்டத்தை செயல்படுத்த வேண்டியுள்ளது. அதன்படி, தமிழகத்தில், கார்டுதாரர்களின் கைரேகையை பதிய, 34 ஆயிரத்து, 773 ரேஷன் கடைகளுக்கு, பயோமெட்ரிக் கருவிகள் வாங்க, 2018ல், உணவு துறை, 'டெண்டர்' கோரியது.அதில், நான்கு நிறுவனங்கள் பங்கேற்ற நிலையில், அவை வழங்கிய, தொழில்நுட்ப விபரம் சரியில்லாததால், அந்த டெண்டர், நடப்பாண்டில் ரத்து செய்யப்பட்டது.
இதுவரை, மறு டெண்டர் கோரவில்லை. இதனால், மத்திய அரசு, ஜனவரியில், ஒரே நாடு; ஒரே ரேஷன் கார்டு திட்டத்தை செயல்படுத்தினாலும், அதை, தமிழகத்தில் செயல்படுத்த முடியாத நிலை உள்ளது.
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post