5, 8-ம் வகுப்பு பொதுத்தேர்வு - மூன்று ஆண்டுகள் விலக்கு அளிக்கப்படுமா, இல்லையா? நீடிக்கும் குழப்பங்கள்

Join Our KalviNews Telegram Group - Click Here
Add This Number In Your Whatsapp Groups - 8608844408


மத்திய அரசின் கட்டாய கல்வி உரிமை சட்டப்படி, எட்டாம் வகுப்பு வரை, மாணவர்கள் அனைவரும், 'ஆல் பாஸ்' செய்யப்படுகின்றனர். இந்த சட்டத்தை பயன்படுத்தி, பல மாநிலங்களில், எட்டாம் வகுப்பு வரை, எந்த தேர்வும் நடத்துவதில்லை.தேர்வு இல்லை என்பதால், பாடங்களையும் சரியாக நடத்துவதில்லை.

அதனால், எட்டாம் வகுப்பு முடிக்கும் மாணவர்களுக்கு, தாய்மொழியில் எழுத, படிக்கவே தெரியாத நிலை உள்ளது. இது குறித்து, மத்திய மனிதவள அமைச்சகம், நிபுணர் குழு அமைத்து, ஆய்வு செய்தது. அதில், அனைத்து மாநிலங்களிலும், ஐந்து மற்றும் எட்டாம் வகுப்புகளுக்கு, பொதுவான தேர்வை நடத்தினால், கல்வி தரத்தை உயர்த்தலாம். இதுதொடர்பாக, அந்தந்த மாநிலங்களே முடிவு செய்யலாம் என, அறிவிக்கப்பட்டது.இந்த உத்தரவை தொடர்ந்து, ஐந்து மற்றும் எட்டாம் வகுப்புகளுக்கு, நடப்பாண்டிலேயே பொது தேர்வு நடத்தப்படும் என, தமிழக பள்ளி கல்வித் துறை அறிவித்துள்ளது.

இது குறித்து, பள்ளி கல்வி முதன்மை செயலர் பிரதீப் யாதவ், அரசாணையும் பிறப்பித்துள்ளார். பொது தேர்வை நடத்தும் முறை குறித்து, தொடக்க கல்வி இயக்குனர் சேதுராம வர்மா, அனைத்து பள்ளிகளுக்கும் சுற்றறிக்கையும் அனுப்பியுள்ளார். இந்நிலையில், தேர்வு நடத்துவதில், மூன்று ஆண்டுகள் விலக்கு அளிக்கப்படும் என, பள்ளி கல்வி அமைச்சர் செங்கோட்டையன், பல முறை பேட்டி அளித்துள்ளார்.

ஆனால், 'தேர்வு கட்டாயம் நடத்தப்படும்' என, பள்ளி கல்வி அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இந்த முரண்பாடான அறிவிப்புகளால், தேர்வு உண்டா, இல்லையா என்ற, குழப்பம் ஏற்பட்டுஉள்ளது. இந்நிலையில், புதிய குழப்பமாக, ஐந்து மற்றும் எட்டாம் வகுப்புகளுக்கு, மூன்று பாடங்களுக்கு மட்டும், பொது தேர்வு நடத்தப்பட உள்ளதாக, தகவல்கள் வெளியாகியுள்ளன.

இது குறித்து, திருச்சி மாவட்டத்தில் நிகழ்ச்சியில் பங்கேற்ற, பள்ளி கல்வி அமைச்சர் செங்கோட்டையன் கூறுகையில், ''ஐந்து மற்றும் எட்டாம் வகுப்புகளுக்கு, நடப்பு கல்வி ஆண்டில், தமிழ், ஆங்கிலம் மற்றும் கணிதம் பாடங்களுக்கு மட்டுமே, பொது தேர்வு நடத்தப்படும்,'' என தெரிவித்துள்ளார். இந்த அறிவிப்பு குறித்து, பள்ளி கல்வி அதிகாரிகள் தரப்பில், எழுத்துப்பூர்வமாக சுற்றறிக்கையோ, அரசாணையோ வெளியாகவில்லை. அதனால், தேர்வு எப்படி நடக்கும் என்பது, புரியாத புதிராகவும், குழப்பமாகவும் உள்ளதாக, ஆசிரியர்கள் தெரிவித்தனர்.

Post a Comment

0 Comments