நடுரோட்டில் மாணவர்கள் பயங்கர மோதல் - மாணவர்களை 1330 திருக்குறள் எழுத வைத்து போலீசார் தண்டனை !!

நடுரோட்டில் மோதலில் ஈடுபட்ட மாணவர்களை திருக்குறள் எழுத வைத்து தண்டனை !!


நெல்லை பாளையங்கோட்டையில் நடுசாலையில் சண்டையிட்டுக் கொண்ட மாணவர்களை, திருக்குறளின் 1330 குறள்களையும்  எழுதச் சொல்லி போலீசார் தண்டனை வழங்கினர்.

பாளையங்கோட்டையில் உள்ள இரு பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்கள், வ.உ.சி. மைதானம் மற்றும் பேருந்து நிலையம் ஆகிய இடங்களில் அண்மையில் மோதிக் கொண்டனர்.

பிறந்தநாள் கேக் வெட்டிய போது ஏற்பட்ட சண்டை மற்றும் காதல் விவகாரத்தில் ஏற்பட்ட முன்விரோதத்தை வைத்து அவர்கள் பயங்கர   சண்டையிட்டுக் கொண்டதாகக் கூறப்படுகிறது. காதல் விவகாரத்தில் ஒரு மாணவனை பலர் சேர்ந்து கொண்டு தாக்கியதை டிக் டாக் வீடியோவாகவும் வெளியிட்டனர்.

கடந்த வெள்ளிக்கிழமை நடந்த இச்சம்பவம் குறித்து கல்வித்துறை அதிகாரிகள் மூலம் காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதாகச் சொல்லப்படுகிறது.
காவல்நிலையத்தில் மாணவர்கள்
இதை அடுத்து, மோதலில் ஈடுபட்ட 10,11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்கள் பெற்றோர்களுடன் காவல் நிலையம் அழைத்து வரப்பட்டனர். அவர்கள் செய்த தவறுக்காக 1330 திருக்குறளையும் எழுத வேண்டும் என்று பாளையங்கோட்டை காவல் ஆய்வாளர் தில்லை நாகராசன் தண்டனை வழங்கினார். இதனையடுத்து மாணவர்கள் காவல் நிலையத்தின் முன்பு உள்ள தடுப்பு சுவரின் மீது ஏறி அமர்ந்த படி 1330 குறள்களையும் எழுதினர்.

திருக்குறளை எழுதி முடித்த மாணவர்களை அழைத்துக் கண்டித்த போலீசார், அவர்களது பெற்றோர்களுக்கும் அறிவுரை வழங்கினர். பிள்ளைகளை ஒழுக்கமாக வளர்க்க வேண்டும் என்று அறிவுறுத்தினர்.

இதை அடுத்து மாணவர்கள் திருக்குறள் எழுதிய காகிதத்தில் காவல் நிலைய முத்திரையைப் பதித்து பள்ளிக்கு கொண்டு செல்லுமாறு கூறி அனுப்பி வைத்தனர். மாணவர்களை திருத்துவதற்காக அவர்களுக்கு போலீசார் வழங்கிய தண்டனையை பொதுமக்கள் வெகுவாகப் பாராட்டி வருகின்றனர்.