Title of the document
 பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு, வினாத்தாள் முறையில் மாற்றம் செய்ய வேண்டும்' என, அரசு தேர்வுத் துறைக்கு, ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அரசு தேர்வுத்துறை இயக்குனர் உஷாராணியை, தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு சார்பில், அதன் தலைவர் செல்லையா மற்றும் பொதுச்செயலர் பேட்ரிக் ரைமண்ட் ஆகியோர் சந்தித்தனர். அப்போது, அவர்கள் அளித்த மனு:

பத்தாம் வகுப்பு கணித பாடத்தில், புதிய வினாத்தாளில், செய்முறை வடிவியலுக்கும், வரைபடத்துக்கும், தலா, எட்டு மதிப்பெண் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த வகை கேள்விகளுக்கு முந்தைய ஆண்டுகளை போல, தலா, 10 மதிப்பெண் வழங்க வேண்டும்.

வினாத்தாளில் பகுதி, 'ஈ'யில், செய்முறை வடிவியல் மற்றும் வரைபட பகுதி கேள்விகள் மட்டுமே இருக்குமாறு அமைக்க வேண்டும். அறிவியல் வினாத்தாளில், மனப்பாடம் செய்து எழுதக்கூடிய பகுதிகளுக்கு, அதிக மதிப்பெண்களுடன் அதிக கேள்விகளும்; ஒரு மதிப்பெண் மற்றும் இரண்டு மதிப்பெண்களுக்கு, குறைவான கேள்விகளும் இடம் பெற்றுள்ளன.

இதனால், மெல்ல கற்கும் மாணவர்களுக்கு வினாத்தாள் வடிவமைப்பு கடினமாக இருப்பதுடன், தேர்ச்சி விகிதம் குறையும் வாய்ப்பு உள்ளது. புதிய பாடத்திட்டத்தில் தேர்வு எழுத இருப்பதால், மெல்ல கற்கும் மாணவர்களை படிப்படியாக மேம்படுத்த வேண்டியுள்ளது.

அவர்களின் நலனையும் கருத்தில் கொண்டு, நான்கு மதிப்பெண்களுக்கு பதில், மூன்று மதிப்பெண்களுக்கும்; ஏழு மதிப்பெண்களுக்கு பதில், ஐந்து மதிப்பெண்களுக்கும் வினாத்தாள் அமைக்க வேண்டும். இரண்டு மதிப்பெண் பிரிவில், அதிகமான கேள்விகளை அமைக்க வேண்டும்.

பிளஸ் 1, பிளஸ் 2 பொது தேர்வில் வழங்கப்படுவதை போல, 10ம் வகுப்பில், அறிவியல் அல்லாத மற்ற பாடங்களுக்கும், 10 மதிப்பெண்கள், அக மதிப்பீடு முறையில் வழங்க வேண்டும்.

காலாண்டு மற்றும் அரையாண்டு தேர்வுகள், மாநில அளவில், ஒரே வினாத்தாள் முறையில் நடப்பதால், கல்வி ஆண்டின் துவக்கத்திலேயே, மாதவாரியான பாடத்திட்டத்தை முன்கூட்டியே வழங்க வேண்டும். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post