10 ஆயிரம் விதைப்பந்துகளை தயாரித்து நடவு செய்த அரசுப் பள்ளி மாணவர்கள்

தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணியை அடுத்த குருவிக்கரம்பை அரசு மேல்நிலைப் பள்ளியில் மகாத்மா காந்தியின் பிறந்த தினத்தை முன்னிட்டு, நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்கள் 10 ஆயிரம் விதைப்பந்துகளை தயாரித்து நடவு செய்தனர். கடந்த ஆண்டு நவம்பர் மாதம் வீசிய கஜா புயலால் இப்பகுதியில் ஆயிரக்கணக்கான மரங்கள் வேரோடு சாய்ந்து விழுந்தன. இதையடுத்து இழந்த பசுமையை மீட்டெடுக்கும் விதமாகவும், மகாத்மா காந்தியின் பிறந்த தினத்தை முன்னிட்டும் விதைப்பந்துகளை தயாரித்து இப்பகுதியில் நடவு செய்யவேண்டும் என இப்பள்ளி மாணவர்களிடம், பள்ளித் தலைமை ஆசிரியர் வீ.மனோகரன் ஆலோசனை வழங்கினார். இதையடுத்து, தேசிய பசுமைப் படை ஒருங்கிணைப்பாளர் பி.பாலசுப்பிரமணியன் முன்னிலையில், நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் என்.கோபிகிருஷ்ணா மேற்பார்வையில், நாட்டு நலப்பணித் திட்ட மாணவர் தலைவர் காவியச்செல்வன் தலைமையில், 10 ஆயிரம் விதைப்பந்துகளை மாணவர்கள் தயாரித்து, அப்பகுதி முழுவதும் நடவு செய்தனர். சமூக அக்கறையுடன் செயல்பட்ட மாணவர்களை அப்பகுதி மக்கள் பெரிதும் பாராட்டினர்.