மாணவர்களுக்குத் தொழில் பயிற்சி அளிக்க நடவடிக்கை: பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன்


பின்லாந்து நாட் டைப்போல தமிழகத்தில் மாணவர்களுக்குத் தொழில் பயிற்சி அளிப்பது குறித்து ஆராயப்படும் என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்தார். 
ஈரோட்டில் செய்தியாளர்களுக்கு வெள்ளிக்கிழமை அவர் அளித்த பேட்டி:
பள்ளிக் கல்வித் துறையில் 12 ஆண்டுகளாக மாற்றப்படாத பாடத்திட்டம், தற்போது மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. பாடத் திட்டத்தில் கியூ ஆர் கோடு முறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம், கியூ ஆர் கோடினை ஸ்கேன் செய்து ஆடியோ மூலம் மாணவர்கள் பாடங்களைக் கற்க முடியும். 

ஐசிடி திட்டத்தின் மூலம் 9 முதல் 12-ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களின் வகுப்பறைகள், செப்டம்பர் மாத இறுதிக்குள் இணைய வசதியுடன் கணினிமயமாக்கப்படும். மத்திய அரசின் நிதி உதவியோடு 70 ஆயிரம் பள்ளிகளுக்கு கரும்பலகைக்கு மாற்றாக ஸ்மார்ட் போர்டு வழங்கப்படும்.
நீட் தேர்வுப் பயிற்சியைப் பொருத்தவரை தனியார் நிறுவனங்கள் நாள்தோறும் முழுமையான பயிற்சியை அளிக்கின்றன. ஆனால், அரசுப் பள்ளி மாணவர்கள் வாரத்துக்கு இரு நாள்கள், மாலை நேரங்களில் நீட் தேர்வு பயிற்சி பெறுகின்றனர். அவர்களுக்கு குறைவான நேரமே பயிற்சி அளிக்கப்படுகிறது. 
அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகளில் இதுவரை 76 மாணவர்கள் நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளனர். கடந்த ஆண்டு 38.49 சதவீத மாணவர்கள் நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றனர். இந்த ஆண்டு 48.57 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். ஆண்டுக்காண்டு தேர்ச்சி விகிதம் உயரும் அளவுக்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

தற்போது பிளஸ் 2 பாடத் திட்டத்தில் நீட், ஐஐடி, ஜெஇஇ போன்ற தேர்வுகளுக்குத் தேவையான விடைத்தாள்கள் உள்ளன. மாணவர்கள் இதைப் படித்தாலே போதுமானது. 
எனவே, இதன் மூலம் கூடுதலான மாணவர்கள் மருத்துவக் கல்லூரிக்குச் செல்லும் நிலை உருவாகும். இதற்கென 412 நீட் தேர்வு பயிற்சி மையங்களில் ஒரு வார காலத்தில் பயிற்சி தொடங்கவுள்ளது. கடந்த ஆண்டு 2,742 மாணவர்களும், அதற்கு முந்தைய ஆண்டு 3,119 மாணவர்களும் அத்தகைய பயிற்சியைப் பெற்றுள்ளனர். 
பின்லாந்து உள்ளிட்ட வெளிநாடுகளில் தொழில் சார்ந்த கல்வி கற்பிக்கப்படுகிறது. இரண்டு வயதிலேயே பள்ளிக்கு அனுப்புகின்றனர். 6 வயது ஆன பின்னரே கல்வி கற்றுத் தருகின்றனர். அதுவரை அந்த மாணவர்களுக்கு உடற்பயிற்சி, நல்ல பழக்க வழக்கங்கள், நல்ல நெறிமுறைகளைக் கற்றுத் தருகின்றனர். 

பள்ளிக்கு வர வேண்டும் என சிறு குழந்தைகள்கூட விரும்பும் சூழ்நிலை அங்கு உள்ளது. அங்கு அரசே பள்ளிகளை முழுமையாக நடத்துகிறது. 9 ஆம் வகுப்பு படிக்கும்போது மாணவர்களுக்கு தொழில் திறன் சார்ந்த பயிற்சி அளிக்கப்படுகிறது. 
அதற்கான வசதிகள் பள்ளிகளில் ஏற்படுத்தப்பட்டுள்ளன. 18 வயதுக்குப் பிறகு தங்கள் பெற்றோர் உதவி இல்லாமல் வாழ்க்கை நடத்தும் அளவுக்கு அங்கு கல்வி முறைகள் நடைமுறையில் உள்ளன. இதேபோல மாற்றங்களைக் கொண்டு வர முயற்சி மேற்கொள்ளப்படும். 

தமிழக அரசின் பாடத்திட்டம், பல்வேறு துறை சார்ந்த தொழிற்பயிற்சி அளிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதைப் பயன்படுத்தி எத்தகைய பயிற்சி அளிக்கலாம் என ஆய்வு செய்யப்படும் என்றார்.