உபரிப் பணியிடம் மற்றும் பணியிட நிரவல் – ஒரு தீர்வு!

Join Our KalviNews Telegram Group - Click Here
9092837307 - Add This Number In Your Whatsapp Groups - 9092837307

அன்பார்ந்த ஆசிரியர்களுக்கு வணக்கம்,

ஒருவரை ஒருவர் சந்தித்துக்கொள்ளும்போது “நலமா? வீட்டில் அனைவரும் நலமா?” என வினவிய காலங்கள் மாறி, ஆசிரியர்கள் சந்திந்தித்துக் கொள்ளும்போது,

“உங்களுக்கு பணிநிரவல் பாதிப்பு உள்ளதா?” எனக் கேட்பதும்,

“இல்லை” எனில்,

“கொடுத்து வைத்தவர்.” என்றும்

“ஆம்” எனில்

“எனக்கும் அவ்வாறே!” என்று சிறிது ஆசுவாசப் படுத்திக் கொள்வது இயல்பாகிவிட்டது.

பணிநிரவல் ஏன் ஏற்பட்டது? பணிநிரவலுக்கு யார் காரணம்? . . . என பல வகையில், பலர் ஆக்கபூர்வமாகவும், எதிர்மறையாகவும், பல தளங்களில், ஆசிரியர்களாலும், கல்வியாளர்களாலும், அரசியல்வாதிகளாலும், மக்களாலும், ஆர்வலர்களாலும், சமூக செயற்பாட்டார்களாலும் தொடர்ந்து பல நிலைகளில் விவாதங்கள் நடத்தப்பட்டன. பணிநிரவல் என்ற விவாதப்பொருள் மேற்கண்ட எல்லா நிலைகளிலும், சில சமயங்களைத் தவிர பெரும்பாலான சமயங்களில், ஒருவரையொருவர் குற்றஞ்சாட்ட ஒரு வாய்ப்பாகவே எடுத்துக்கொள்ளப்பட்டது.

விவாதிப்பதை விட்டுவிட்டு ஆக்கபூர்வமாக சிந்திக்கலாம். சென்றது சென்றவையாகவே இருக்கட்டும். நடந்தவை நடந்தவையாகவே இருக்கட்டும். நடந்தவற்றை விவாதித்த அளவில் நாம் கற்றுக்கொண்டது என்ன? நாம் பெற வேண்டியது என்ன? விவாதங்கள், படிப்பினைகள், வரலாறுகள் ஒரு புரிதலை, வழிகாட்டுதலை நோக்கி நம்மை அழைத்துச் செல்ல வேண்டும். இல்லையெனில் விவாதங்களால் விளைவதென்ன? என்ன லாபம்?

தீர்வை நோக்கி பயணிப்போம். அவ்வகையில் ஆக்கபூர்வமாக எண்ணியதன் விளைவே இக்கட்டுரை. பணி நிரவலுக்குக் காரணம் என்ன? பணி நிரவலால் பாதிக்கப்படுபவர் யார் யார்? பணிநிரவல் இல்லாமல் இருக்க என்ன செய்யலாம்?

அரசுப் பள்ளிகளில் மாணவர் எண்ணிக்கை குறைந்ததே பணிநிரவலுக்கு முதன்மையான காரணம். அதற்குக் காரணம், தொடக்கப் பள்ளிகளில் ஒரு வகுப்பிற்கு ஒரு ஆசிரியர் இல்லாததே என்பது கவனத்தில் கொள்ளப்பட வேண்டிய காரணம்.

அதே சமயத்தில் பல கோரிக்கைகளை வென்றெடுத்துள்ள ஆசிரியர் சங்கங்கள் இது பற்றிய தாக்கத்தை கணிக்கவும், முன்னறிவிக்கவும் தவறிவிட்டன. மேலும் இவை ஒரு தொடக்கப்பள்ளியில் எத்தனை ஆசிரியர் பணியாற்ற வேண்டும் என நிர்ணயம் செய்வதில் பின்பற்றப்படும் மாணவர்:ஆசிரியர் முறையை மறுதலித்து, ஒரு வகுப்பிற்கு ஒரு ஆசிரியர் என பின்பற்ற வேண்டும் என ஆணித்தரமாக எடுத்துரைத்திருக்க வேண்டும் (அரசு சார்பு மற்றும் அரசு எதிர்ப்பு) ஆசிரிய சங்கங்கள். இது குறித்த விழிப்புணர்வை ஆசிரிய சங்கங்கள் பொது மக்களிடையே ஏற்படுத்துவதில் முனைப்பு காட்டியிருக்கவேண்டும்.

உயர்நிலைப் பள்ளிகளில், 6 முதல் 10 வகுப்புகள் வரை ஐந்து வகுப்புகள் உள்ளன. ஒவ்வொரு வகுப்பிற்கும் 5 பாடங்கள் என மொத்தம் 25 பாடங்கள் உள்ளன. ஒரு வகுப்பிற்கு ஒரு நாளைக்கு 8 பாடவேளைகள் என ஒரு வாரத்திற்கு மொத்தம் 40 பாடவேளைகள். 200 க்கும் குறைவான மாணவ, மாணவியர் பயிலும் (பெரும்பாலும் கிராமப்புறத்தில் அல்லது நகர்புறத்தை ஒட்டி இருக்கும்) அரசு உயர்நிலைப் பள்ளிக்கு 5 ஆசிரியர்கள் மற்றும் ஒரு தலைமையாசிரியர் பணியிடங்களே நிர்ணயம் செய்யப்பட்டு வழங்கப்படுகின்றன.

அரசு நிலைப்பாட்டின் படி, ஒரு ஆசிரியருக்கு அதிகபட்சம் 28 பாடவேளைகள் (நான்கு பாடங்கள்) ஒதுக்கப்படலாம். ஆக உயர்நிலைப் பள்ளியில் பணியாற்றும் ஐந்து பாட ஆசிரியர்களுக்கு 20 பாடங்களும், தலைமையாசிரியர் ஒரு பாடம் என ஒதுக்கீடு செய்தால், மீதமுள்ள நான்கு பாடங்களை யார் கற்பிப்பது? எனவே ஒரு உயர்நிலைப் பள்ளிக்கு ஆறு பட்டதாரி ஆசிரியர்கள் பணியிடங்கள் ஒதுக்கப்பட வேண்டும். பணிநிரவல் பணியிடங்கள் வெகுவாகக் குறையும்.

இன்றுள்ள நிலையில், மேற்கூறிய பெரும்பாலான உயர்நிலைப் பள்ளிகளில் 25 பாடவேளைகளுக்கு (ஒரு வகுப்பிற்கு விளையாட்டு – 2, நூலக படிப்பு – 1, கலை – 2) எந்த ஆசிரியர்களும் இல்லை என்பதே உண்மை. சிலபல பள்ளிகளில், இதன் காரணமாக, பலவகை காரணங்களில் ஒன்றாக ஒழுக்கமும், கட்டுப்பாடும் குறையத் தொடங்கின. இதற்குத் தீர்வு என்ன? யார் இதற்கு தீர்வு காண்பது? யார் தீர்வு சொல்வது? இதற்கு யார் போராடுவது?

எல்லோரும் ஒதுங்கிய நிலையில், தயங்கிய நிலையில், பெற்றோர் தன் பிள்ளைகளின்பால் கொண்ட அக்கறையின் காரணத்தால் சுயநிதி தனியார் பள்ளிகளை நோக்கி நகரத்தொடங்கினர். தனியார் பள்ளிகள் இருகரம் நீட்டி அழைத்துச் சென்றனர். சில பலர் செயல்பாடுகள் அதற்குத் தீனி போடுவதாக அமைந்தது. இதன் கண்கண்ட பலன் உபரிப் பணியிடங்களின் அசுர வளர்ச்சி.

தீர்வுகள்:

100 மாணவ, மாணவியர் படிக்கும் தொடக்கப் பள்ளிக்கு ஐந்து ஆசிரியர் பணியிடங்களை வழங்கலாம்.

100 க்கும் குறைவான மாணவ, மாணவியர் படிக்கும் தொடக்கப் பள்ளிக்கு மூன்று ஆசிரியர் பணியிடங்களை வழங்கலாம். பத்து கி.மீ. தொலைவுக்குள் உள்ள இரு பள்ளிகளுக்கு ஒரு ஆசிரியரை 2 அல்லது 3 நாட்கள் மாற்றுப்பணியில் செல்வது போல நான்காவது பணியிடம் வழங்கலாம். பத்து கி.மீ. தொலைவுக்குள் உள்ள ஐந்து பள்ளிகளுக்கு ஒரு கணினி இயக்கும், நிர்வகிக்கும் வல்லமை பெற்ற (அல்லது பயிற்சி அளிக்கப்பட்ட) ஆசிரியரை ஒரு பள்ளிக்கு ஒரு நாள் என்ற அளவில் மாற்றுப்பணியில் செல்வது போல ஐந்தாவது பணியிடம் வழங்கலாம்.

உயர்நிலைப் பள்ளிகளுக்கு ஆறு பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் வழங்க அரசு கொள்கை முடிவு எடுக்கலாம். கிட்டத்தட்ட பத்தாண்டுகளாக, இதுவரை கலை ஆசிரியர், ஓவிய ஆசிரியர், உடற்கல்வி ஆசிரியர், கணினி ஆசிரியர் என்பவர்களைப் பார்த்தேயிராத உயர்நிலைப் பள்ளிகளுக்கு வாரம் ஒரு நாள் மாற்றுப்பணியில் ஒரு நாளைக்கு ஒருவர் என்ற அளவில் பணியாற்றும் நடைமுறையை உருவாக்கலாம்.

எல்லா வகையிலும், எல்லோரும் மகிழ்வர். இடைநிற்றல் குறையும். மாணவர் சேர்க்கை அதிகரிக்கும். உபரிப்பணியிடம் என்ற வார்த்தையே இல்லாமல் போய்விடும். 

அரசு சார்பில் தமிழகம் முழுவதும் சுமார் 500 நீட் போன்ற போட்டித் தேர்வுகளுக்கான பயிற்சி மையங்கள் செயல்படுகின்றன. அவை பெரும்பாலும் அரசுப் பள்ளி வளாகங்களில் நடைபெறுகின்றன. அம்மையங்களுக்கு உபரியாக உள்ள 5 பணியிடங்களை (கணக்கு, இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல்) வழங்கலாம். அவர்கள் முதுகலை ஆசிரியர்களாகவோ, முதுகலைப் பட்டம் பெற்ற பட்டதாரி ஆசிரியர்களாகவோ இருக்கலாம். ஆனால், அவர்கள் திறமைசாலிகளாகவும், சிறந்த பயிற்சியாளர்களாகவும், பொறுப்புள்ளவர்களாகவும், ஆர்வமிக்கவர்களாகவும், செயல்திறன் மிக்கவர்களாகவும், அர்ப்பணிப்பு உள்ளவர்களாகவும், விருப்பம் உள்ளவர்களாகவும் இருக்க வேண்டியது மிகவும் அவசியம். அவர்கள் பயிற்சி மையம் அமைந்துள்ள பள்ளியின் கீழ் பணியாற்ற வேண்டும். ஐவரில் பணியில் மூத்தோர் அந்த மையத்தின் பொறுப்பாளராக இருக்க வேண்டும். பயிற்சி அளிக்கப்படும் நேரம், வார நாட்களில் காலை ஒரு மணி நேரம், மாலை இரண்டு மணி நேரம் எனவும், சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை முழு நாளாகவும் அமைத்துக் கொள்ளலாம்.

வாரநாட்களில், முற்பகலில் பயிற்சியைத் திட்டமிடல், பயிற்சிக்குத் தேவையான பாடப்பொருள் தயாரித்தல், பணிதாள்கள் தயாரித்தல், ஒளிஒலி கோப்புகள் தயாரிப்பில் ஈடுபடல் அல்லது ஒத்துழைத்தல், . . . போன்ற பணிகளைச் செய்யலாம்.

போட்டித்தேர்வில் மாணவ, மாணவர்களை தேர்ச்சியடையச் செய்யும் ஆசிரியர்களுக்கு, மாநில அளவில் பாராட்டு விழா நடத்தி, பாராட்டு சான்றிதழ் வழங்கலாம். நீட் தேர்வில் வெற்றி பெற்று அரசு மருத்துவக் கல்லூரியில் இடம் பிடிக்கும் மாணவர்களை உருவாக்கிய ஆசிரியர்களுக்கு ஒரு சவரன் தங்க நாணயம் வழங்கலாம். பதவி உயர்வில், பணி மாறுதலில் நடைபெறும் கலந்தாய்வில் முன்னுரிமை வழங்கலாம்.

தேவைப்படின் இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை ஆசிரியர்களை மாற்றம் செய்துகொள்ளலாம்.

Post a Comment

0 Comments