இன்று குரூப் 4 தேர்வு: தேர்வர்களுக்கு கடும் கட்டுப்பாடுகள்

Join Our KalviNews Telegram Group - Click Here
Add This Number In Your Whatsapp Groups - 9092837307

தமிழகம் முழுவதும் குரூப் 4 எழுத்துத் தேர்வு ஞாயிற்றுக்கிழமை (செப். 1) நடைபெறுகிறது. இத்தேர்வை 17 லட்சம் பேர் எழுதவுள்ளனர். இத்தேர்வை எழுதுவோருக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
குரூப் 4 தொகுதியில் கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர், வரித் தண்டலர், நில அளவர், வரைவாளர், தட்டச்சர் உள்ளிட்ட பதவிகள் வருகின்றன. இவற்றில், மொத்தம் 6 ஆயிரத்து 491 காலியிடங்கள் உள்ளன. அதில், கிராம நிர்வாக அலுவலர் பணியிடங்கள் 397, இளநிலை உதவியாளர் பணியிடங்கள் 2 ஆயிரத்து 688, தட்டச்சர் பணியிடங்கள் 1,901, சுருக்கெழுத்து தட்டச்சர் 784 என மொத்தம் 6 ஆயிரத்து 491 பணியிடங்களுக்கு எழுத்துத் தேர்வு ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது.

இத்தேர்வுக்கான அறிவிக்கை கடந்த ஜூன் 14-இல் வெளியிடப்பட்டது. தேர்வுக்கு விண்ணப்பிக்க ஒரு மாதம் அவகாசம் அளிக்கப்பட்டிருந்தது. விண்ணப்பித்தோருக்கு தேர்வுக்கூட நுழைவுச் சீட்டுகள் கடந்த 22-ஆம் தேதி வெளியிடப்பட்டன. டி.என்.பி.எஸ்.சி., இணையதளத்தில் தேர்வுக்கூட நுழைவுச் சீட்டுகள் பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தன. 301 தாலுகா மையங்களிலும் தேர்வுக் கூடங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
கடும் கட்டுப்பாடுகள்: எழுத்துத் தேர்வை எழுதுவோருக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. செல்லிடப்பேசி மற்றும் இதர மின்னணு சாதனங்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இத்தகைய பொருள்களை வைத்திருப்போர் என அறியப்பட்டால் சம்பந்தப்பட்டவர்கள் தொடர்ந்து தேர்வு எழுத அனுமதிக்கப்பட மாட்டார்கள். மேலும் அவர்களின் விடைத்தாள் செல்லாததாக்கப்படும். தேர்வுக்கூடத்துக்குள் பேனா மட்டுமே கொண்டு வர வேண்டும். வண்ண எழுதுகோல், பென்சில், புத்தகங்கள், குறிப்புகள், வரைபட கருவிகள், பாடப்புத்தகங்கள் ஆகியவற்றைக் கொண்டு வரக்கூடாது.
விண்ணப்பதாரர்கள் செல்லிடப்பேசி உள்ளிட்ட தடை செய்யப்பட்ட பொருள்களை தேர்வுக் கூடத்துக்குக் கொண்டு வரக்கூடாது. அவ்வாறு கொண்டு வந்தால் அவற்றின் பாதுகாப்புக்கு உத்தரவாதம் தர இயலாது என்று தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் எச்சரித்துள்ளது.
தேர்வுக்கூட நுழைவுச் சீட்டினை பதிவிறக்கம் செய்து தவறவிட்டவர்களும், இதுவரை பதிவிறக்கம் செய்யாதவர்களும் தேர்வாணைய இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்யலாம் என தேர்வாணைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
எழுத்துத் தேர்வு காலை 10 முதல் பிற்பகல் 1 மணி வரை நடைபெறவுள்ளது. தேர்வில் கேட்கப்படும் வினாக்களுக்கான உத்தேச விடைகள் ஒரு வார காலத்துக்குள் வெளியிடப்படும் எனத் தெரிகிறது. இந்த விடைகளில் ஏதேனும் சந்தேகங்கள் அல்லது தவறுகள் இருந்தால் அதனை ஆதாரப்பூர்வமாக தேர்வாணையத்தின் இணையதளத்தில் தெரிவிக்கலாம் என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது

Post a Comment

0 Comments