Title of the document

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய (டி.என்.பி.எஸ்.சி.) குரூப்-2 தேர்வு பாடத் திட்ட மாற்றம் தமிழ் வழி மாணவர்களுக்குத்தான் சாதகமாக இருக்கும்.

இந்த புதிய நடைமுறை மூலம், இனி தமிழ் படிக்க, எழுதத் தெரியாதவர்கள் குரூப்-2 தேர்வில் தேர்ச்சி பெற முடியாத நிலை உருவாக்கப்பட்டிருக்கிறது என டி.என்.பி.எஸ்.சி. செயலர் நந்தகுமார் கூறினார்.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் சார்பில் நடத்தப்படும் குரூப்-2 பணிகளுக்கானத் தேர்வு முதல்நிலை, முதன்மை மற்றும் நேர்முகத் தேர்வு என 3 கட்டங்களாக நடத்தப்படும். இதில் முதல்நிலைத் தேர்வில் பொது அறிவு, பொதுத் தமிழ் அல்லது பொது ஆங்கிலம் ஆகியவை இடம்பெறும். இந்த நிலையில், முதல்நிலைத் தேர்வில் இனி மொழிப் பாடங்கள் இடம்பெறாது என டி.என்.பி.எஸ்.சி. அறிவிப்பு வெளியிட்டது.

இதற்கு தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர். "மொழிப் பாடங்களை நீக்கியது, மற்ற மாநிலத்தவர்களுக்கு வாய்ப்பு வழங்கும் நடவடிக்கை' என்றும் அவர்கள் குற்றம்சாட்டினர்.

இதற்கு விளக்கம் அளிக்கும் வகையில் சென்னையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் டி.என்.பி.எஸ்.சி. செயலர் நந்தகுமார் அளித்த பேட்டி:

மொழி அறிவை எழுத்துத் தேர்வில் பரிசோதிப்பதால், முதல்நிலைத் தேர்வில் பொதுத் தமிழ் மற்றும் பொது ஆங்கிலம் இருக்கத் தேவையில்லை. எப்போதெல்லாம் முதன்மை எழுத்துத் தேர்வு இருந்து வந்துள்ளதோ, அப்போதெல்லாம் பொதுத் தமிழ் மற்றும் பொது ஆங்கிலம் ஆகியவை முதல்நிலைத் தேர்வில் இருந்ததில்லை. எனவே இந்த உத்தரவு புதிது கிடையாது.

மேலும், கிராமப்புறங்களில் படித்த மற்றும் தமிழ் வழியில் படித்த மாணவர்களுக்கு இதனால் நன்மைதான் ஏற்படும். யாருமே பாதிக்கப்பட மாட்டார்கள். தமிழ் வழியில் படித்த மாணவர்களுக்கு இந்த முறையால் நிச்சயம் நன்மைதான் ஏற்பட இருக்கிறது. ஏனெனில், புதிய முறையால் தமிழ் படிக்க, எழுத தெரியாதவர் தேர்ச்சி பெற முடியாது என்ற நிலை கொண்டுவரப்பட்டுள்ளது.

பழைய முறையில் முதன்மை தேர்வில் பொதுத் தமிழ் அல்லது பொது ஆங்கிலம் மொழிப் பாடம் இடம் பெற்றிருக்கும். இதனால், தமிழ் தெரியாத ஒரு மாணவர் கூட பொது ஆங்கிலம் பாடத்தை, எடுத்துக் கொண்டு இறுதிவரை தேர்ந்தெடுக்கப்படும் வாய்ப்பு இருந்தது. ஆனால், இப்போது கட்டாயம் தமிழ் எழுத, படிக்க தெரிந்திருக்க வேண்டும். தமிழ் தெரியாத மாணவர்கள் இறுதித் தேர்வு வரை செல்ல வாய்ப்பே இல்லாத சூழ்நிலை உருவாகியுள்ளது.

முதல்நிலைத் தேர்வில் 2 பாடங்கள் புதிதாகச் சேர்க்கப்பட்டுள்ளன. குறிப்பாக, தமிழக வரலாறு, பண்பாடு, இலக்கியம் (சங்க இலக்கியம் முதல் இக்கால இலக்கியம் வரை) ஆகியவை சேர்க்கப்பட்டிருப்பதோடு, திருக்குறளுக்கு மிகுந்த முக்கியத்துவம் தரப்பட்டுள்ளது.

ஆங்கிலத்தில் படித்தவர்களும் இனி கட்டாயமாக இதைப் படித்து விட்டுதான் தேர்ச்சி பெற்று வர முடியும் என்ற சூழ்நிலை இப்போது உருவாகியுள்ளது. எனவே தமிழ் வழி மாணவர்களுக்கு இதனால் பலன் அதிகம் என்றார் அவர்.
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...
Previous Post Next Post