Title of the document


தமிழகத்தில் ஒரே வளாகத்திலும் அருகருகேயும் தனித்தனியாகவும் செயல்பட்டு வரும் அரசுப் பள்ளிகளின் பொறுப்பு, அதே வளாகத்தில் உள்ள மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியரிடம் ஒப்படைக்கப்படுவதாக பள்ளிக் கல்வித் துறை முதன்மை செயலாளர் பிரதீப் யாதவ் அறிவித்துள்ளார்.
தமிழகம் முழுவதும் ஒரே வளாகத்தில் செயல்படும் அரசு ஊராட்சி, நகராட்சி, மாநகராட்சி, தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளின் நிர்வாக பொறுப்பு மாணவர்களின் நலன் கருதியும், நிர்வாக வசதிக்காகவும் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியரிடம் ஒப்படைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அரசு தொடக்கப் பள்ளிகள் பெரும்பாலும், ஈராசிரியர் பள்ளிகளாக செயல்படுவதால், ஒருவர் விடுப்பு எடுத்தாலும் மாணவர்களின் கல்வியைப் பாதிக்கிறது என்பதால் பொறுப்பு மாற்றப்பட்டுள்ளது.

மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியரிடம் பொறுப்பு வழங்கியதன் மூலம் இனி மேல்நிலைப் பள்ளியில் உள்ள கணினி ஆய்வகங்கள், அறிவியல் ஆய்வகங்கள், விளையாட்டு பயிற்சி, ஆங்கில பயிற்சி, ஸ்மார்ட் வகுப்பறை, முதுகலை பட்டதாரி ஆசிரியர்களின் வகுப்புகள் என்று அனைத்தையும் தொடக்கப் பள்ளி மற்றும் நடுநிலைப் பள்ளி மாணவர்களும் பயன்படுத்த முடியும்.
உடனடியாக அமலுக்கு வருகிறது: மேலும், இந்த மாற்றத்தினால் ஈராசிரியர் பள்ளிகளில் ஆசிரியர் பற்றாக்குறை ஏற்பட்டால் உடனடியாக மேல்நிலைப் பள்ளி ஆசிரியரைக் கொண்டு வகுப்புகளை நடத்த நடவடிக்கை எடுக்க முடியும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
புதிய நடைமுறை உடனடியாக அமலுக்கு வருவதாகவும், அதே வேளையில், தொடக்கப் பள்ளி மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் பணியாற்றி வரும் ஆசிரியர்கள் தற்போதைய நிலையிலேயே தங்கள் பணியை தொடரலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆசிரியர்கள் எதிர்ப்பு: அரசின் இந்த உத்தரவுக்கு தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் உள்பட பல்வேறு ஆசிரியர் சங்கங்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இது குறித்து அவர்கள் கூறியது: அரசின் இந்த உத்தரவின் மூலம் தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளி தலைமையாசிரியர்களின் அதிகாரம் பறிக்கப்படுகிறது. அத்துடன் உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களின் பணிச்சுமை கூடுதலாக்கப்படுகிறது. மேலும், ஈராசிரியர் பள்ளிகளாக செயல்படும் தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளை அருகிலுள்ள உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளுடன் இணைப்பதால், கிராமப்புற மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்படுவர்.
கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த...: தொடக்கப் பள்ளிக் குழந்தைகளின் மனநிலை வேறு, உயர்நிலை மேல்நிலைப் பள்ளி மாணவர்களின் மனநிலை வேறு. இவை இரண்டையும் ஒப்பீடு செய்யக் கூடாது.
இதனால் குழந்தைகளின் மன நலம் பாதிக்கும். ஆள்குறைப்பு நடவடிக்கை காரணமாக பள்ளிகளை ஒருங்கிணைக்கிறோம் என்ற பெயரில் தொடக்கக் கல்வித் துறையை நிரந்தரமாக மூடும் முயற்சியைக் கைவிட்டு தொடக்கப் பள்ளிகளுக்கு அடிப்படை வசதி உள்ளிட்ட உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த வேண்டும் என அவர்கள் தெரிவித்தனர்

# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post