அரசு பள்ளிகளில் கல்வி தரம் உயர்த்த அடுத்த அதிரடி தயார் : பள்ளி கல்வித்துறை அதிகாரிகள் தீவிரம்

Join Our KalviNews Telegram Group - Click Here


அரசுப் பள்ளிகளின் கல்வித் தரத்தை அதிகரிக்கும் வகையில் வட்டார வள மையங்களை இணைக்கும் பணியை பள்ளிக் கல்வித்துறை அதிரடி முடிவை எடுத்துள்ளது. தமிழகத்தில் உள்ள தனியார் பள்ளிகளில் எல்கேஜி முதல் பிளஸ் 2 வரை ஆண்டுதோறும் மாணவர்களின் சேர்க்கை அதிகரித்து வருகிறது. அதே சமயம் கல்வியின் தரம், கற்பிப்பு முறை, பள்ளிகளின் உள்கட்டமைப்பு காரணமாக அரசுப் பள்ளிகள் சேர்க்கை குறைந்து வருகிறது. இதை தடுக்கும் நோக்கில், அரசுப் பள்ளிகளில் தற்போது எல்கேஜி, யுகேஜி வகுப்புகளும் தொடங்கப்பட்டும், எதிர்பார்த்த அளவுக்கு சேர்க்கை இல்லை. இதனால் பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் பெரிதும் கவலை அடைந்துள்ளனர். இந்நிலையில், பள்ளிகளின் தரத்தை உயர்த்தவும், கல்வியின் தரத்தை உயர்த்தவும் பள்ளிக் கல்வி முதன்மைச் செயலாளர் பிரதீப் யாதவ் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். முக்கியமாக பள்ளிக் கல்வித்துறையில் உள்ள முக்கிய அதிகாரிகளை மாற்றி அமைத்துள்ளார்.

இதையடுத்து பள்ளிகளில் அதிக அளவில் மாணவர்கள் அதிக அளவில் சேர்க்கப்பட வேண்டும் என்ற நோக்கில் பல புதிய திட்டங்களையும் கொண்டு வந்துள்ளார். அதற்காக அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களும் மாணவர் சேர்க்கையில் அதிக அக்கறை எடுத்துக் கொள்ள வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், வரும் 20ம் தேதி முதல் 22ம் தேதி வரை அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள், மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கான சிறப்பு பயிற்சி மாமல்லபுரத்தில் நடக்க உள்ளது. இந்நிலையில், தமிழகத்தில் இதுவரையில் அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் கீழ் செயல்பட்டு வந்த வட்டார வள மையங்களை சமக்ர சிக் ஷா திட்டத்தின் கீழ் கொண்டு வருவதற்காக 400 வட்டார வள மையங்களை மாற்றி அமைக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே 15 பள்ளிகளை ஒன்றிணைத்து குறுவள மையங்கள் ஏற்படுத்தப்பட்டன. இவற்றுக்கு நடுநிலைப் பள்ளிகள்தான் தலைமையிடமாக இருந்தன.

தற்போது, அந்த குறுவள மையங்கள் மேனிலைப் பள்ளிகளை மையமாக கொண்டு செயல்பட உள்ளன. இதுபோன்ற பணிகள் முடிந்த பிறகு, அரசுப் பள்ளிகளில் கற்பித்தலில் மாற்றங்கள் செய்யவும் பள்ளிக் கல்வித்துறை செயலாளர் முடிவு செய்துள்ளார். இதன்படி அரசுப் பள்ளிகளில் கல்வி தரம் உயர்த்த, பள்ளிகள் மற்றும் ஆசிரியர்களை நேரடியாக கண்காணிக்க முடியும். அதற்காக புதிய செயலியை உருவாக்கவும் உள்ளனர். இதனால் ஒவ்வொரு மணி நேரமும் பள்ளிகளின் நிலையை நேரடியாக கண்காணிக்க முடியும். தமிழகத்தின் எந்த மூலையில் இருந்தாலும் தனிப்பட்ட வகுப்பில் மாணவர்கள் வருகை, ஆசிரியர்கள் வருகையை கண்காணிக்க முடியும். அதனால் ஆசிரியர்களோ, மாணவர்களோ ஏமாற்ற முடியாது.

🔴🔴 இந்த பயனுள்ள தகவலை அனைத்து Whatsapp குழுக்களிலும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்