80 சதவீதத்திற்கு மேல் வருகைப்பதிவு இருந்தால் பள்ளி மாணவர்களுக்கு கூடுதலாக 2 மதிப்பெண்: அரசு தேர்வுத்துறை இயக்குனர் உத்தரவு

Add This Number In Your Whatsapp Groups - 9786053272
📲👉 👉 Join Our KalviNews Telegram Group - Click Here

பள்ளி மாணவ, மாணவிகள் 80 சதவீதத்திற்கு மேல் வருகைப்பதிவு இருந்தால் அவர்களுக்கு கூடுதலாக 2 மதிப்பெண்கள் வழங்கலாம் என்று முதன்மைக்கல்வி அலுவலர்களுக்கு அரசு தேர்வுத்துறை இயக்குனர் உத்தரவிட்டுள்ளார்.

இதுகுறித்து தமிழ்நாடு அரசு தேர்வுத்துறை இயக்குனர் உஷாராணி அனைத்து மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது: மாணவர்கள் வருகை பதிவிற்கு அதிகபட்சமாக 2 மதிப்பெண்கள் வழங்க வேண்டும். 80 சதவீதத்திற்கு மேல் வருகை புரிந்த மாணவ, மாணவிகளுக்கு 2 மதிப்பெண்களும், 75 சதவீதம் முதல் 80 சதவீதம் வருகை தந்த மாணவர்களுக்கு ஒரு மதிப்பெண்ணும் வழங்க வேண்டும் அதேபோல் மாணவர்கள் படித்தவற்றை புரிந்து கொள்ளும் திறனை அறிவதற்காக உள்நிலை தேர்வுகள் நடத்தப்பட்டு 4 மதிப்பெண்கள் அளிக்க வேண்டும். இந்த தேர்விற்கு அந்த பாடத்தினை கற்பிக்கும் ஆசிரியர்கள் வினாத்தாள் வடிவமைத்து தேர்வு நடத்த வேண்டும்.

பாடங்களுக்கு ஏற்ப ஒப்படைவு, செயல் திட்டம், அல்லது களப்பயன் அறிக்கை இவற்றில் ஏதாவது ஒன்றினை சம்பந்தப்பட்ட ஆசிரியர்கள் தேர்வு செய்து ஒரு வகுப்பில் உள்ள அனைத்து மாணவர்களுக்கும் சீராக ஒதுக்கீடு செய்து நடத்த வேண்டும். இந்த பணிகளுக்கு அதிகபட்சமாக 2 மதிப்பெண்கள் அளிக்கலாம். மரம் வளர்த்தல், இலக்கியம், கணிதம், இயற்பியல், வேதியியல், உயிரியல், வணிகவியல், பொருளியல், தேசியம், இசை மன்றம் போன்ற 33 தலைப்புகள் அளிக்கப்பட்டுள்ளன.

இந்த தலைப்புகளில் உள்ளவற்றில் மூன்று செயல்பாடுகளில் மாணவர்கள் பங்கு பெற்றால் அதிகபட்சமாக 2 மதிப்பெண்கள் அளிக்கலாம். மாணவர்களுக்கு வழங்கப்பட்ட அகமதிப்பீடு மதிப்பெண்கள் குறித்து விவர அறிவிப்பு பலகை வாயிலாக மாணவர்களுக்கு தெரிவிக்க வேண்டும். வகுப்பாசிரியர் ஒப்படைக்கும் பதிவேடுகளை தலைமை ஆசிரியர் பொதுத்தேர்வு நடைபெற்று முடிந்த நாளில் இருந்து 6 மாதங்கள் வரை பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும். நீதிமன்ற வழக்குகள் குறித்த பதிவேடுகளையும் தலைமையாசிரியர்கள் கேட்கும்போது ஒப்படைக்க வேண்டும். மாணவர்களுக்கு அக மதிப்பீட்டிற்கான மதிப்பெண்கள் வழங்கப்படும்போது ஆசிரியர்கள் நடுநிலையாக செயல்பட வேண்டும்.

இதை தலைமையாசிரியர்கள் மிகவும் கவனத்துடன் கண்காணிக்க வேண்டும். தொழிற்கல்வி பாடத்திட்டத்தில் பயிலும் மாணவர்களுக்கு அதிகபட்சமாக 25 அக மதிப்பீடு மதிப்பெண்கள் வழங்க வேண்டும். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.


📲👉 👉 Join Our KalviNews Telegram Group - Click Here

Post a Comment

0 Comments