Title of the document


முதுநிலை பட்டதாரி ஆசிரியர் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்று கடைசிநாள் என்ற நிலையில், காலநீட்டிப்பு செய்யப்படுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. அரசு மேல்நிலைப் பள்ளிகளில், முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் 50 சதவீதம் பதவி உயர்வு மூலமும் மீதமுள்ள 50 சதவீதம் ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தும் போட்டித்தேர்வு மூலமும் நிரப்பப்பட்டு வருகிறது. இப்போட்டித் தேர்வுகளை ஆசிரியர் தேர்வு வாரியம் 2 அல்லது 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தி வருகிறது. கடந்த 2014, 2017ம் ஆண்டுகளில் இத்தேர்வுகள் நடந்த நிலையில் அரசு மேல்நிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள 2,144 முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள், உடற்கல்வி இயக்குநர் நிலை 1 பணியிடங்களை போட்டித்தேர்வு மூலம் நிரப்ப தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் கடந்த ஜூன் 12ம் தேதி அறிக்கை வெளியிட்டிருந்தது. இதில் இணையதளம் மூலம் விண்ணப்பிக்க இன்று (15ம் தேதி) கடைசிநாளாகும். இதையொட்டி தகுதியான பல்லாயிரக்கணக்கானோர் இணைய தளம் மூலம் தங்களது விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்து வருகின்றனர்.

அரசு கல்வியியல் கல்லூரிகள், அரசு நிதியுதவி பெறும் தனியார் கல்வியியல் கல்லூரிகள், சுயநிதி கல்வியியல் கல்லூரிகளில் கடந்த மே, ஜூன் மாதங்களில் பிஎட் தேர்வு எழுதிய பல்லாயிரக்கணக்கானோர் தேர்வு முடிவுக்காக காத்திருக்கின்றனர். இவர்களுக்கான தேர்வுத்தாள்களை திருத்தி முடிவுகளை வெளியிடும் பணியை தமிழ்நாடு கல்வியியல் பல்கலைக்கழகம் மேற்கொண்டுள்ளது. மேலும் மாநிலம் முழுவதும் கல்லூரிகள் மற்றும் பல்கலைக் கழகங்களில் கடந்த ஏப்ரல், மே மாதங்களில் முதுகலைப் பட்டங்களுக்கான தேர்வு நடந்து முடிந்த நிலையில், பல்வேறு பல்கலைக்கழகங்கள் தேர்வு முடிவுகளை வெளியிட்டுள்ள போதும் மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் வெளியிடவில்லை. இதனிடையே தமிழ்நாடு கல்வியியல் பல்கலைக்கழக பிஎட் தேர்வு முடிவுக்காக காத்திருக்கும் மாணவர்களும், இளங்கலைப் பட்டப்படிப்பை தொடர்ந்து பிஎட் முடித்து, தற்போது முதுகலைப்பட்ட தேர்வு எழுதி, தேர்வு முடிவுக்காக காத்திருக்கும் மாணவர்களும், இந்த ஆண்டு நடைபெறும் முதுநிலை பட்டதாரி ஆசிரியர் தேர்வில் தாங்களும் கலந்துகொள்ளும் வாய்ப்புக்காக, முதுநிலை பட்டதாரி ஆசிரியர் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் காலம் நீட்டிக்கப்படுமா? என்ற எதிர்பார்ப்புடன் இருந்து வருகின்றனர்.

# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post