Title of the document

கடலுார் மாவட்டத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் மாணவ, மாணவியரின் கற்றல் அடைவுத் திறனை கண்டறிய குழு அமைக்கப்பட்டு, ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது. தமிழகத்தில் அரசு, அரசு உதவி பெறும் துவக்க, நடுநிலை, மேல்நிலை, உயர்நிலை பள்ளிகளில் மாணவ, மாணவியரின் கற்றல் திறனை மேம்படுத்த பள்ளிக் கல்வித் துறை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

இதற்காக, மாவட்டம் வாரியாக குழுக்களை ஏற்படுத்தி, பள்ளிகளில் ஆய்வு மேற்கொள்ளும் பணியை துவக்கியுள்ளது. ஒவ்வொரு பள்ளிக்கும் ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுவில் வட்டாரக் கல்வி அலுவலர், வட்டார வள மைய மேற்பார்வையாளர் அல்லது ஆசிரியர், தலைமை ஆசிரியர் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். கடலுார், சிதம்பரம், விருத்தாசலம், வடலுார் என, நான்கு கல்வி மாவட்டங்களை உள்ளடக்கிய கடலுார் மாவட்டத்தில் அரசு, அரசு உதவி பெறும் துவக்கம், நடுநிலை, மேல்நிலை, உயர்நிலைப் பள்ளிகள் 1,712 உள்ளது. கடலுார், பண்ருட்டி, அண்ணாகிராமம், குறிஞ்சிப்பாடி, நெய்வேலி, சிதம்பரம், காட்டுமன்னார்கோவில், பரங்கிப்பேட்டை, நல்லுார், விருத்தாசலம் உட்பட 14 ஒன்றியங்கள் உள்ளன. இதில், கடலுார், குறிஞ்சிப்பாடி, நெய்வேலி, காட்டுமன்னார்கோவில் உள்ளிட்ட 4 வட்டாரங்களில் உள்ள, துவக்கம், நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பு முதல், 8ம் வகுப்பு வரை ஆய்வு பணி நடந்தது.

பெரும்பாலான மாணவ, மாணவியர் கற்றல் அடைவுத் திறனில் சிறப்பாக இருப்பதும், குறைவான மாணவ, மாணவியர் மட்டுமே கற்றல் அடைவுத் திறனில் குறைபாடு இருப்பதும் தெரிந்தது. இதேபோல், மீதமுள்ள வட்டாரங்களில் உள்ள பள்ளிகளிலும் ஆய்வு பணி படிப்படியாக துவங்க உள்ளது.

இதுகுறித்து முதன்மை கல்வி அதிகாரி ஆறுமுகம் கூறுகையில், 'கடலுார் மாவட்டத்தில் அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் மாணவ, மாணவியரின் கற்றல் அடைவுத் திறன் குறித்து ஆய்வு செய்யப்படுகிறது. இதனை மூன்று மாதத்திற்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. ஆய்வு முடிந்ததும், கற்றல் அடைவுத் திறன் குறைவாக உள்ள மாணவ, மாணவியரை கண்டறிந்து எளிய முறையில் ஆங்கிலத்தில், தமிழில் பேசுவது, எழுதுவது, எளிய முறையில் கணக்கு சொல்லிக் கொடுப்பது என கற்றல் அடைவுத் திறனை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.2019-2020ம் கல்வியாண்டில் அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் எல்.கே.ஜி., வகுப்பில் 732 பேரும், முதல் வகுப்பில் 12, 367 பேரும் புதிதாக சேர்ந்துள்ளனர்' என்றார்.

# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post