எமிஸ்' இணையதளத்தில் விடுபட்ட தகவல்கள்: ஜூலை 31-க்குள் பதிவு செய்ய உத்தரவு

Join Our KalviNews Telegram Group - Click Here
Add This Number In Your Whatsapp Groups - 9092837307பள்ளிக் கல்வித் துறையின் கல்வியியல் மேலாண்மை தகவல் மையத்தில் (எமிஸ்) மாணவ, மாணவிகளின் விவரங்கள் முழுமையாக பதிவேற்றம் செய்யப்படாததால், அவர்களுக்கான ஸ்மார்ட் அட்டைகள் அச்சிடும் பணியில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

தமிழகத்தில் 2019-2020-ஆம் கல்வி ஆண்டில் ஒன்றாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வகுப்பு வரை அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் 70 லட்சம் மாணவர்களுக்கு ரூ.12 கோடியே 70 லட்சம் மதிப்பீட்டில் மாணவ-மாணவிகளின் சுய விவரங்களைப் பதிவு செய்யும் வசதியுடன் "ஸ்மார்ட் கார்டுகள்' (திறன் அட்டைகள்) வழங்கப்படவுள்ளன.

நவீன தொழில்நுட்பத்துடன் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த அட்டையின் முகப்பில் மாணவ-மாணவிகளின் பெயர், தந்தை பெயர், வரிசை எண், பள்ளியின் பெயர், பிறந்த தேதி, தொடர்பு கொள்ள செல்போன் எண், வீட்டு முகவரி ஆகியவை பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த அட்டையில் "கியூ.ஆர். கோடு' இடம்பெற்றுள்ளது. அதில் மாணவ- மாணவிகளின் அனைத்து வகையான சான்றிதழ்களும் பதிவேற்றம் செய்யப்படும். இதனால் ஒரு மாணவர், ஓர் அரசு பள்ளியில் இருந்து மற்றொரு அரசு பள்ளியில் சேருகிறார் என்றால், அவர் எந்த சான்றிதழையும் எடுத்துச் செல்ல வேண்டிய அவசியம் இல்லை. மாறாக இந்த ஸ்மார்ட் கார்டை கொண்டு சென்று பள்ளியில் காண்பித்தால் போதும்.

ஆவலுடன் காத்திருக்கும் மாணவர்கள்: இதையடுத்து கடந்த ஜூன் 13-ஆம் தேதி சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சில மாணவ, மாணவிகளுக்கு மட்டும் முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி ஸ்மார்ட் அட்டையை வழங்கி திட்டத்தைத் தொடங்கி வைத்தார். இதையடுத்து முதல்கட்டமாக அடுத்த இரு வாரங்களுக்குள் 35 லட்சம் மாணவ-மாணவிகளுக்கு ஸ்மார்ட் அட்டை வழங்கப்பட்டு விடும் என்றும், மீதமுள்ள 35 லட்சம் பேருக்கு ஜூலை 15-ஆம் தேதிக்குள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அரசின் சார்பில் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, விரைவில் தங்களுக்கும் ஸ்மார்ட் அட்டை வழங்கப்பட்டு விடும் என மாணவர்கள் எதிர்பார்த்து காத்திருந்தனர். ஆனால் சென்னை உள்பட பல மாவட்டங்களில் பெரும்பாலான அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்களுக்கு இதுவரை ஸ்மார்ட் அட்டைகள் வழங்கப்படவில்லை.

இதுகுறித்து அதிகாரிகள் கூறியது: மாணவ, மாணவிகள் குறித்த தகவல்கள் "எமிஸ்' தளத்தில் இணைக்கப்பட்டுள்ளன. ஸ்மார்ட் அட்டை அச்சிடும் பணிக்காக அரசு மற்றும் அரசு உதவிபெறும் தொடக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் விவரங்கள் "எமிஸ்' மூலம் பெற்று வழங்கப்பட்டு வருகிறது. அதில் சில மாணவ மாணவிகளின் புகைப்படம் உள்ளிட்ட விவரங்கள் முழுமையாக உள்ளீடு செய்யப்படாதது கண்டறியப்பட்டுள்ளது. இதனால் ஸ்மார்ட் அட்டைகள் அச்சிடும் பணிகள் தொடர்ந்து நடைபெறுவதில் தாமதம் ஏற்படுகிறது.

மாவட்டக் கல்வி அதிகாரிகளுக்கு உத்தரவு: "ஸ்மார்ட் அட்டை' விவகாரத்தில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் தனிக் கவனம் செலுத்தி "எமிஸ்' தளத்தில் விடுபட்ட மாணவ, மாணவிகளின் புகைப்படம் உள்பட அனைத்து விவரங்களையும் வரும் 31-ஆம் தேதிக்குள் முழுமையாக உள்ளீடு செய்ய நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது என்றனர்.


Post a Comment

0 Comments