இரட்டைத்தேர்வு முறை அமலுக்கு வந்தால் எம்பிபிஎஸ் சேரும் அரசுப்பள்ளி மாணவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்: அதிகாரிகள் கருத்து

தமிழகத்தில் மருத்துவம்/ இன்ஜினியரிங் படிக்க தமிழ்நாடு புரோபெசன் கோர்சஸ் என்டரன்ஸ் எக்சாமினேசன் (டிஎன்பிசிஇஇ) என்ற நுழைவுத்தேர்வை அண்ணா பல்கலைக்கழகம் நடத்தியது. அதில் 1991ம் ஆண்டு முதல் 1993ம் ஆண்டு வரை பிளஸ்2வில் குறிப்பிட்ட 3 பாடங்களில் எடுத்த மதிப்பெண்ணில் 4ல் 3 பங்கும், டிஎன்பிசிஇஇ தேர்வில் எடுத்த மதிப்ெபண்ணில் 4ல் ஒரு பங்கும் சேர்த்து கட் ஆப் மதிப்பெண் கணக்கிடப்பட்டது. இது 1993ம் ஆண்டுக்கு பின் பிளஸ் 2வில் குறிப்பிட்ட 3 பாடங்களில் மதிப்பெண்ணில் 3ல் 2 பங்கும், டிஎன்பிசிஇஇ நுழைவுத்தேர்வில் 2ல் ஒரு பங்கு மதிப்ெபண்ணை கூட்டி கட்ஆப் மதிப்பெண் கணக்கிடப்பட்டது. 1991ம் ஆண்டு முதல் 2006ம் ஆண்டு வரை தமிழக அரசு மருத்துவக்கல்லூரிகளில் மருத்துவம் சேரும் அரசுப்பள்ளி மாணவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்தது. 

2006ம் ஆண்டு முதல் ஒற்றை சாளர முறையில் கலந்தாய்வை நடத்த சட்டம் நிறைவேற்றப்பட்டது. 2007-16ம் ஆண்டுகளில் பிளஸ்2 மதிப்பெண் அடிப்படையில் ஒற்றை சாளர முறையில் கலந்தாய்வு நடத்தப்பட்டது. அந்த காலகட்டத்தில் குறைந்த எண்ணிக்கையிலேயே அரசுப்பள்ளி மாணவர்கள் மருத்துவம் படிக்க சேர்ந்தனர். 2017ம் ஆண்டு நீட் மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கை ஒற்றை இலக்கமானது. அதனால் 1991ம் ஆண்டு முதல் 2006ம் ஆண்டு வரை பின்பற்றப்பட்ட இரட்டை தேர்வு நடைமுறை அமலுக்கு வரும்பட்சத்தில், எம்பிபிஎஸ் சேரும் அரசுப்பள்ளி மாணவர்களின் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளது. இவ்வாறு சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறினர்.

என்ன காரணம்?
ஒரே பாடத்திட்டத்தில் இரு முறை தேர்வு நடத்தப்படுகிறது. ஏதேனும் ஒரு தேர்வை சரிவர எழுதாமல் விட்ட மாணவர், புரிந்து படித்திருந்தால் மற்றொரு தேர்வில் சிறப்பான மதிப்பெண் பெற வாய்ப்புள்ளது. அதனால் எம்பிபிஎஸ் சேர்ந்த அரசுப்பள்ளி மாணவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. தற்போது மாநில பாடத்திட்டத்துக்கு சம்பந்தம் இல்லாத சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் இருந்து நீட் தேர்வுக்கு அதிக கேள்விகள் கேட்கப்படுகிறது. அதனால் சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் படித்த மாணவர்கள், மாநில பாடத்திட்டத்தில் அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் படித்த மாணவர்களை விட கூடுதல் மதிப்பெண் பெற்று அரசுக்கல்லூரி எம்பிபிஎஸ் இடங்களை தேர்வு செய்து விடுகின்றனர்.