Title of the document

அனைத்து அரசுப் பள்ளிகளிலும் தானியங்கி நாப்கின் இயந்திரங்கள் மற்றும் பயன்படுத்திய நாப்கின்களை மறுசுழற்சி செய்வதற்கான இயந்திரங்களை வைக்கக் கோரிய வழக்கில், தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை புதன்கிழமை உத்தரவிட்டது.
மதுரையைச் சேர்ந்த ஆனந்தவள்ளி தாக்கல் செய்த மனு:  தமிழகத்தில் கிராமங்கள் முதல் நகரங்கள் வரை அனைத்துப் பகுதிகளிலும் அரசுப் பள்ளிகள் உள்ளன. இதனால் பள்ளிக்குச் செல்லும் மாணவிகளின் சதவீதம் அதிகரித்துள்ளது. மேலும் தமிழகத்தில் ஒட்டுமொத்தமாக படிப்பறிவு சதவீதம் அதிகரித்துள்ளது.
 இதற்கிடையே,  பருவம் எய்திய  பள்ளி மாணவிகள்,  மாதவிடாய் காலங்களில் சிரமங்களுக்கு உள்ளாகின்றனர். இதைத் தவிர்க்கும் வகையில், அனைத்து அரசுப் பள்ளிகளிலும், தானியங்கி நாப்கின் வழங்கும் இயந்திரங்களை வைக்க வேண்டும்.
மேலும் பயன்படுத்திய நாப்கின்களை மறுசுழற்சி செய்வதற்கான இயந்திரங்களை வைக்க அரசுக்கு உத்தரவிட வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தார்.
இந்த மனு, நீதிபதிகள் எம். சத்தியநாராயணன், பி. புகழேந்தி ஆகியோர் கொண்ட அமர்வில் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், இந்த மனு குறித்து தமிழக அரசு பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தனர்
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...
Previous Post Next Post