தென் மாவட்டங்களில் 3 ஆயிரம் பட்டதாரி ஆசிரியர் உபரி பணியிடங்கள்!

Join Our KalviNews Telegram Group - Click Here
Add This Number In Your Whatsapp Groups - 8608844408

தமிழகத்தின் தென் மாவட்டங்களிலுள்ள அரசு உயர்நிலைப் பள்ளிகளில் 3 ஆயிரம் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் உபரியாக உள்ள நிலையில், அரசுக்கு ஏற்படும் வருவாய் இழப்பைத் தவிர்க்கும் வகையில் வட மாவட்டங்களிலுள்ள காலிப் பணியிடங்களுக்கு பணி நிரவல் செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

தமிழகத்திலுள்ள அரசுப் பள்ளிகளில் 10 மற்றும் 9 வகுப்புகளில் 40 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர், 6 முதல் 8 வரையிலான வகுப்புகளில் 35 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர், தொடக்க நிலையிலுள்ள 1 முதல் 5-ஆம் வகுப்பு வரையிலான வகுப்புகளில் 30 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் பணியிடம் உருவாக்க வேண்டும் என்ற விதிமுறை உள்ளது. ஆனால், தமிழகம் முழுவதுமுள்ள பல அரசுப் பள்ளிகளில் மாணவர் எண்ணிக்கை குறைவது ஒவ்வொரு ஆண்டும் தொடர்ந்து கொண்டிருக்கிறது. 

இதனால், குறைவான மாணவர் எண்ணிக்கை உள்ள பள்ளிகளில், மாணவர் ஆசிரியர் விகிதாசாரத்திற்கு தொடர்பில்லாத வகையில் அதிக எண்ணிக்கையிலான ஆசிரியர்கள் பணிபுரிந்து வருவதும் பள்ளிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதும் கண்டறியப்பட்டுள்ளது. குறிப்பாக, திண்டுக்கல், திருநெல்வேலி, தூத்துக்குடி, புதுக்கோட்டை போன்ற மாவட்டங்களில் 6 முதல் 10-ஆம் வகுப்பு வரையிலான உயர்நிலைப் பள்ளிகளில், மாவட்டத்திற்கு 300 முதல் 600 பணியிடங்கள் வரை மொத்தம் 1500-க்கும் மேற்பட்ட உபரி பணியிடங்கள் உள்ளதாக தெரிய வந்துள்ளது. அதே நேரத்தில், வட மாவட்டங்களான கிருஷ்ணகிரி, தர்மபுரி, வேலூர், திருவண்ணாமலை போன்ற மாவட்டங்களிலுள்ள உயர்நிலைப் பள்ளிகளில் ஏற்படும் காலிப் பணியிடங்களின் எண்ணிக்கை ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்துக் கொண்டே இருப்பதாக கூறப்படுகிறது.
சிக்கலை ஏற்படுத்திய கல்வி அலுவலர்கள், சங்கங்கள்: தென் மாவட்டங்களில் உபரி பணியிடங்கள் ஏற்படுவதற்கும், வட மாவட்டங்களில் காலியி டங்கள் தொடர்வதற்கும் சில கல்வித்துறை அலுவலர்களும், அரசு அங்கீகாரம் பெற்ற ஆசிரியர் மற்றும் அலுவலர் சங்க நிர்வாகிகளுமே முக்கிய காரணம் என்கின்றனர்.

வட மாவட்டங்களில் பணி நியமனம் செய்யப்படும் ஆசிரியர்கள், அலுவலர்கள் மற்றும் சங்க நிர்வாகிகளின் துணையுடன் ஓராண்டிற்குள் தென் மாவட்டங்களுக்கு பணி மாறுதல் பெற்று விடுகின்றனர். குறிப்பாக கடந்த 2012 முதல் 2014-ஆம் ஆண்டு வரை மட்டும், ஒரு பள்ளியிலுள்ள ஒரு காலிப் பணிடத்திற்கு 7 ஆசிரியர்கள் வரையிலும் பணி மாறுதல் பெற்ற சம்பவங்களும் உள்ளன. இதுபோன்ற காரணங்களால், தென் மாவட்டங்களிலுள்ள அரசு உயர்நிலைப் பள்ளிகளில் மட்டும் ஆசிரியர் உபரி பணியிடங்களின் எண்ணிக்கை 3 ஆயிரத்திற்கும் கூடுதலாக இருப்பதாக தெரிகிறது.
தொடக்கப் பள்ளிகளின் நிலை மேலும் மோசம்:உயர்நிலைப் பள்ளிகளின் நிலையைவிட, தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் ஆசிரியர்களின் உபரி பணியிடங்களின் நிலை மேலும் மோசமாக உள்ளது. 100-க்கும் குறைவான மாணவர்களுடன் பல உயர்நிலைப் பள்ளிகள் செயல்பட்டு வரும் நிலையில், 50-க்கும் குறைவான மாணவர்களுடன் நடுநிலைப் பள்ளிகளும், 20-க்கும் குறைவான மாணவர்களுடன் தொடக்கப் பள்ளிகளும் தென் மாவட்டங்களில் அதிக எண்ணிக்கையில் செயல்பட்டு வருகின்றன.

பணி நிரவல் செய்ய வேண்டிய கட்டாயத்தில் உபரி பணியிடங்கள்: இதுதொடர்பாக கல்வித் துறை அலுவலர் ஒருவர் கூறுகையில், மாணவர் எண்ணிக்கை குறைவாக உள்ள பள்ளிகளில், அங்குள்ள தலைமையாசிரியர்கள் மாணவர் சேர்க்கைக்கு முக்கியத்துவம் அளிப்பதில்லை. தொடக்க, நடுநிலை மற்றும் உயர்நிலைப் பள்ளிகள் அந்தந்த கிராமத்திலேயே இருந்தாலும், மாணவர்களின் பெற்றோர்களுடன், தலைமையாசிரியர்கள் நல்லுறவை மேம்படுத்த தவறி விடுகின்றனர். இதனால், பள்ளிக்கும் பொதுமக்களுக்குமான தொடர்பு துண்டிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் மாற்றம் ஏற்படுத்துவதற்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும். மாநிலத்தின் ஒரு பகுதியில் மிகுதியான உபரி பணியிடங்கள் மூலம் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுத்திக் கொண்டு, மற்றொரு பகுதியிலுள்ள காலிப் பணியிடங்களுக்கு புதிதாக ஆசிரியர்களை நியமனம் செய்யும் நிலை மீண்டும் தொடரக் கூடாது. அதற்கு பதிலாக, உபரியாக உள்ள ஆசிரியர்களை, காலிப் பணியிடங்கள் உள்ள பள்ளிக்கு பணி நிரவல் செய்வதற்கான நடவடிக்கைகளை பள்ளிக் கல்வித்துறை மேற்கொள்ள வேண்டும் என்றார்.
- ஆ.நங்கையார் மணி


Post a Comment

0 Comments