Title of the document



அரசுப் பள்ளிகள் மீதான புதிய அடையாளங்களையும் நம்பிக்கைகளையும் விதைத்து வரும் மாற்றங்களை விரும்பும் ஆசிரியப் பெருமக்களை வெளியுலகிற்கு எடுத்துக் காட்டும் புதிய தேடல் இந்த ஒளிரும் ஆசிரியர் நெடுந்தொடர்... கடந்த இதழில் நம்மால் அடையாளப்படுத்தப்பட்ட தலைமை ஆசிரியை மாலா அவர்கள் பலராலும் அறியப்பட்டு அவரது கல்விச் சேவையைப் பாராட்டி திருவண்ணாமலையில் இயங்கி வரும் ஓர் அமைப்பு புகழ்பெற்ற ஒரு விருதுக்குப் பரிந்துரை செய்துள்ளது வரவேற்கத்தக்க ஒன்றாகும். தமிழகமெங்கும் இதுபோல் மாணவர் நலனை முதன்மையாகக் கொண்டு செயல்பட்டு வரும் பல்வேறு ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் சார்ந்த குழுக்கள் அறிமுகமும் கருத்துப் பகிர்வும் நிகழ்வதற்கு இத்தொடர் பேருதவியாக அமையும். அதுபோல், இந்த இதழை வாசிக்கும் வாசகர்கள், கல்வி ஆர்வலர்கள், சமுதாய சிந்தனையாளர்கள் மற்றும் பொதுமக்கள் போன்றோருக்கு ஆசிரியர்கள் மீதான பார்வைகள் புதிதாகும். மேலும், அரசுப் பள்ளிகள் மீதான கண்ணோட்டம் மாற்றம் பெறுவதோடு மட்டுமல்லாமல் நேயம் வளர வாய்ப்பு ஏற்படும்.
அதேவேளையில் இந்தத் தேடல் என்பது அவ்வளவு எளிதல்ல. ஏனெனில், ஓர் ஒன்றியத்தில் ஐநூற்றுக்கும் மேற்பட்ட ஆசிரிய, ஆசிரியைகளில் செம்மையாகப் பணியாற்றி வரும் அடையாளப்படுத்தப்படாத ஆளுமைகளைத் தேர்வு செய்து, அவர்களிடமிருந்து உண்மைத் தரவுகளைப் பெறுவதென்பது மிகக் கடினமான செயலாக இருக்கிறது. பல பேர் எந்தவித ஆதாரங்களும் வைத்துக்கொள்ள விரும்பாமல் அயராது உழைத்து வருவது வேதனையளிப்பதாக அமைகிறது. தரவுகளின் முக்கியத்துவத்தை நிச்சயம் அத்தகையோர் இதன்வழி அறிவர்.
அந்தவகையில், இந்தப் பகுதியில் நாம் அறிய இருப்பவர் சுவர் சித்திரங்கள் மூலமாக மாணவர்களைக் கவரும் திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி ஒன்றியம் கோரையாற்றங்கரை ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் இடைநிலை ஆசிரியையாகப் பணிபுரிந்து வரும் திருமதி. ச. ஜாஸ்மின் ஹில்டா ஆவார். இவர் இப்பள்ளிக்குப் பொதுமாறுதல் மூலம் வந்து சேர்ந்து மூன்றாண்டுகள்தாம் ஆகின்றன. தலைமை ஆசிரியரின் ஒத்துழைப்புடன் இவர் செய்து வரும் குழந்தை நேயப் பணிகள் அளப்பரியவை. 
நல்ல கற்றலுக்கு அடிப்படை நல்ல வகுப்பறை சூழல் என்பதை உணர்ந்து கொண்டவராய், தம்மிடம் உள்ள ஓவியத் திறனால் குழந்தைகளைக் கவரும் பல்வேறு வண்ணக் கேலிச் சித்திரங்களை நேர்த்தியாக வரைந்து மாணவர் உள்ளங்களைக் கொள்ளைக் கொண்டார். மேலும், முதல் மூன்று வகுப்புகளுக்கு உரிய பாடப்பொருள் சார்ந்த அடிப்படைத் திறன்கள் வளர்ச்சிக்குதவும் எழுத்துக்கள், எண்கள், படங்கள் போன்றவற்றையும் இடம்பெறச் செய்து வகுப்பறையை வண்ணங்களாலும் எண்ணங்களாலும் அலங்கரித்துள்ளது அழகு.
குறிப்பாக, கிராமப்புற மக்களிடையேயும் அண்மைக்காலமாக உருவாகிவரும் ஆங்கில மோகம் குறித்த தவறான புரிதல்களைப் போக்கும் வகையில் இவ் ஆசிரியை ஆங்கிலத்தை முதல் வகுப்பு மாணவர்கள் பிழையின்றி சரியான உச்சரிப்புடன் சரளமாக வாசிக்கவும், இரண்டாம் வகுப்பு முதற்கொண்டு ஆங்கில மொழிக்குரிய அழகிய சாய்வெழுத்துக் கையெழுத்துப் பயிற்சியையும் மாணவரிடையே இயல்பாகப் பழக்கி வருவதை வழக்கமாகக் கொண்டுள்ளதைப் பலரும் பாராட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது. சான்றாக, இரண்டாம் வகுப்பு மாணவி ஒருவர் ஐந்தாம் வகுப்பு ஆங்கில பாடப்புத்தகத்தில் உள்ள வாக்கியங்களைச் சரியான ஆங்கில உச்சரிப்பு முறையில் சரளமாகப் படிப்பதைக் கூறலாம். 
அதுபோல், தனியார் பள்ளிக்குஇணையாக வாரமொருமுறை மாற்றுச் சீருடையில் மாணவர்களை வருகைபுரியச் செய்து எளிய உடற்பயிற்சியுடன் ஆசன முறைகளும் கற்றுத் தந்து உடல் வளத்துடன் மன வளத்தையும் மேம்படுத்தும் பயிற்சிகள் இவரால் வழங்கப்பட்டு வருகின்றன. மேலும், கிராமப்புற சிறுமிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் பொருட்டு நல்ல தொடுதல் மற்றும் தீய தொடுதல் முறைகளையும் கை கழுவுதல் வழிமுறைகளையும் உள்ளாடைகள் உடுத்துவதன் அவசியம் குறித்தும் தொடர்ந்து எடுத்துரைத்து வருவது சிறப்பு.
இவர் கற்றலை மேலும் மெருகூட்டிட தம் நண்பர்களின் உதவியுடன் ரூ.20000/= மதிப்புள்ள நவீன வண்ணத் தொலைக்காட்சி ஒன்றை வேண்டிப் பெற்று அண்மையில் கல்வியில் கொண்டு வரப்பட்டுள்ள விரைவுக் கோட்டுக் கற்றல் முறை (Pedagogy with QR Code)யில் உருவாக்கப்பட்டிருக்கும் பாடம் சார்ந்த காணொலிகள் யாவும் மாணவர்கள் கண்டு மகிழ கற்பித்தலின்போது போதிய வாய்ப்புகளை உருவாக்கி வருகிறார். 
இதுதவிர, அண்மையில் பேரிடரைத் தோற்றுவித்த கஜா கோரப்புயலின்போது தலைமையாசிரியருடன் இணைந்து ரூ.40000/= மதிப்பிலான நிவாரண உதவிகளைப் பெற்று வழங்கியது குறிப்பிடத்தக்க நிகழ்வாகும். ஆக, பள்ளி வளர்ச்சி, மாணவர் நலன், சமுதாய முன்னேற்றம் ஆகியவற்றிற்கு ஓர் ஆசிரியர் பாடுபடுதல் இன்றியமையாதது என்பதற்கு திருமதி.ஜாஸ்மின் ஆசிரியையும் ஓர் எடுத்துக்காட்டாகக் கொள்ள முடியும். இவரின் கைவண்ணங்களால் அறியாமை இருளிலும் வறுமைப் பிடியிலும் அகப்பட்டுத் தவிக்கும் பிஞ்சுக் குழந்தைகளின் வாழ்க்கை நிச்சயம் வண்ணமயமாகும்! ஏனெனில் இவரே ஒரு வெளிச்சம்.
                                                          தொடர்வார்கள்...
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...
Previous Post Next Post