அனைத்து பள்ளிகளிலும் இணையதளத்தின் மூலமே மாற்றுச்சான்றிதழ் தர வேண்டும் : பள்ளிக்கல்வி இயக்குனர் உத்தரவு

Join Our KalviNews Telegram Group - Click Here
9080019831 - Add This Number In Your Whatsapp Groups - 9080019831

அனைத்து பள்ளிகளிலும் இஎம்ஐஎஸ் இணையதளத்தின் வாயிலாக மட்டுமே மாற்றுச்சான்றிதழ் வழங்க வேண்டும் என்று பள்ளிக்கல்வி இயக்குனர் உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து பள்ளிக்கல்வி இயக்குனர் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை: மாணவர்களின் விவரம் மற்றும் கல்வி பயில்வது தொடர்பான விவரங்கள் அனைத்தும், அனைத்து வகை பள்ளிகளிலும் கல்வித்தகவல் மேலாண்மை இணையதளத்தில் (இஎம்ஐஎஸ்) அந்தந்த தலைமை ஆசிரியர்களுக்கு உள்ளீடு செய்யப்பட்டுள்ளது. அதில் புதிய மாணவர் சேர்க்கை, தேர்ச்சி, வேறு பள்ளிக்கு மாற்றம், நீக்கம் மற்றும் பள்ளி மாணவர்கள் சார்ந்த அன்றாட பணிகள் அனைத்தும் இந்த இணையதளத்தின் மூலமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மேலும் அரசு தேர்வு எழுதும் மாணவர்களின் விவரங்கள் இணையதளத்தில் பராமரிக்கப்பட்டு, தேர்வு பணிகள் அனைத்தும் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது. தொடக்க, இடைநிலை, மேல்நிலைக்கல்வி மாணவர்கள் இடமாறுதல் மற்றும் கல்வி நிறைவின்போது மாணவர்கள் பள்ளியை விட்டு வெளியே செல்லும்போது வழங்கப்படும் மாற்றுச் சான்றிதழ் இந்த ஆண்டு முதல் இஎம்ஐஎஸ் இணையதளத்தின் மூலம் மட்டுமே வழங்கப்பட வேண்டும். 

அனைத்து வகை பள்ளிகளிலும் இந்த நடைமுறையினை பின்பற்ற உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். மாணவர்களது மாற்றுச் சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்து தலைமையாசிரியர் கையொப்பம் மற்றும் அலுவலக முத்திரையிட்டு வழங்க இணையதளத்தில் வசதி செய்யப்பட்டுள்ளது. பதிவிறக்கமாகும் மாணவர்களது மாற்றுச்சான்றிதழ் மென்நகலில் அலுவலக முத்திரை மற்றும் தலைமை ஆசிரியர் கையொப்பமிட்டு அசலாக வழங்க வேண்டும். 

எக்காரணம் கொண்டும் மென்நகலில் தலைமையாசிரியரின் கையொப்பமின்றி மாணவர்களுக்கு வழங்கக்கூடாது. இந்த நடைமுறைகளை நடப்பு கல்வியாண்டில் மாவட்டத்தில் செயல்படும் அனைத்து வகையான பள்ளிகளிலும் மாற்றுச் சான்றிதழ் இஎம்ஐஎஸ் இணையதளத்தில் மட்டுமே வழங்கப்பட வேண்டும். இதற்கான நடவடிக்கையை சுற்றறிக்கை மூலம் முதன்மைக்கல்வி அலுவலர்கள் மேற்கொள்ள வேண்டும்.இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Post a comment

0 Comments