கட்டாய இலவச கல்வி சட்டப்படி முழுமையான நிதி ஒதுக்க வழக்கு: மத்திய அரசு பதிலளிக்க உத்தரவுகட்டாய கல்வி சட்டப்படி முழுமையான நிதியை ஒதுக்கக் கோரிய வழக்கில், மத்திய அரசு பதிலளிக்க ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது.மதுரை கே.கே.நகரை சேர்ந்த வெரோணிக்கா மேரி, ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு:
கட்டாய இலவச கல்வி உரிமைச்சட்டம் தமிழகத்தில் 2011-12ம் கல்வி ஆண்டில் அமலானது. இதன்படி, அரசு பள்ளிகளில் சேரும் மாணவர்களுக்கு இலவச கல்வி, புத்தகம், சீருடை மற்றும் காலணி வழங்கப்படும். தனியார் பள்ளிகளில் 25 சதவீத ஒதுக்கீட்டில் சேரும் மாணவர்களுக்கு புத்தகம், சீருடை, காலணி ஆகியவை இலவசமாக வழங்கப்படுவதில்லை.இச்சட்டப்படி, தனியார் பள்ளிகளில் எல்கேஜி முதல் 8ம் வகுப்பு வரை இலவச கல்வி வழங்க வேண்டும். இதை மீறி ஆண்டுதோறும் புத்தகம், சீருடை உள்ளிட்டவைக்காக ரூ.8 ஆயிரம் முதல் ரூ.10 ஆயிரம் வரை கட்டணம் வசூலிக்கின்றனர். இதனால் ஏழை பெற்றோர் பாதிக்கின்றனர். கல்வி அதிகாரிகளுக்கு புகார் அளித்தாலும் நடவடிக்கை எடுப்பதில்லை.

இச்சட்டப்படி தமிழகத்தில் கல்வி வழங்குவதற்காக 2012 முதல் 2020 வரையிலான காலத்திற்கு,  தமிழக அரசு ரூ.368.49 கோடி, மத்திய அரசு ரூ.27.88 கோடி நிதி தனியார் பள்ளிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. மாநில அரசின் நிதிக்கு இணையாக மத்திய அரசும் ஒதுக்கீடு செய்ய வேண்டும். எனவே, மத்திய அரசுத் தரப்பில் தமிழகத்திற்கு வழங்க வேண்டிய நிதியை, உடனடியாக ஒதுக்கீடு செய்ய உத்தரவிட வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், எம்.தண்டபாணி ஆகியோர், மனு குறித்து மத்திய அரசு தரப்பில் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை தள்ளி வைத்தனர்.