பதவி உயர்வு விவகாரம்; ஆசிரியர்கள் மீதான ஒழுங்கு நடவடிக்கையை ரத்து செய்ய வேண்டும்: ஜாக்டோ- ஜியோ

Join Our KalviNews Telegram Group - Click Here
9080019831 - Add This Number In Your Whatsapp Groups - 9080019831

தமிழகத்தில் 4001 ஆசிரியர்களுக்கான பதவி உயர்வு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதில் கடந்த ஜனவரி மாதம் தொடர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட ஆசிரியர்களின் பெயர் பரிந்துரைக்கக் கூடாது என்றும், மீறி அவர்களது பெயர்களை பரிந்துரைந்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பள்ளிக் கல்வித் துறை எச்சரித்துள்ளது.

இந்த அறிவிப்பால் தங்கள் மீதான ஒழுங்கு நடவடிக்கையை அரசு ரத்து செய்யும் என்று எதிர்பார்த்திருந்த ஆசிரியர்கள் பெரும் ஏமாற்றத்தைச் சந்தித்துள்ளனர்.
அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் (ஜாக்டோ- ஜியோ அமைப்பினர்) தங்கள் 9 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த ஜனவரி 22-ம் தேதி முதல் 30-ம் தேதி வரை தொடர் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்
இதில் போராட்டத்தில் ஈடுபட்டு கைது செய்யப்பட்ட 1,900 ஆசிரியர்கள் பின்னர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.

மேலும், கடந்த ஜனவரி 29-ம் தேதி இரவு காலக்கெடுவுக்குப் பின் பணியில் சேர்ந்த ஆசிரியர்களில் 3,000 பேர் பணியிட மாற்றமும் செய்யப்பட்டனர். நீதிமன்றங்களில் தற்காலிகமாகப் பணிபுரிந்தவர்களையும் அரசு நீக்கியுள்ளது.
இந்நிலையில் தமிழகத்தில் 4001 ஆசிரியர்களுக்கான பதவி உயர்வு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதில் ஒழுங்கு நடவடிக்கையின் கீழ் வரும் ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு இல்லாததால், கடந்த ஜனவரியில் போராட்டம் நடத்திய ஆசிரியர்கள் கடுமையாகப் பாதிக்கப்பட உள்ளனர்.
ஒழுங்கு நடவடிக்கையின் கீழ் வரும் ஆசிரியர்களுக்குப் பதவி உயர்வு கிடையாது என அரசு குறிப்பிட்டுள்ளது
அரசின் இந்த அறிவிப்பு குறித்து ஜாக்டோ - ஜியோ ஒருங்கிணைப்பாளர் மற்றும் செய்தித் தொடர்பாளர் தியாகராஜன் கூறும்போது, "போராட்டம் தீவிரமாக நடந்து கொண்டிருந்த சூழலில் மாணவர்களின் நலன் கருதி ஜாக்டோ - ஜியோ போராட்டத்தைக் கைவிட வேண்டும் என்று முதல்வர் வேண்டுகோள் ஒன்றை வைத்தார். தமிழகத் தலைவர்கள் இதே கோரிக்கையை வைத்தனர்.

அதுமட்டுமல்லாது 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு செய்முறைத் தேர்வுகள் வருவதைக் கருத்தில் கொண்டு அரசு எந்த ஒரு கோரிக்கையையும் நிறைவேற்றவில்லை என்றாலும் மாணவர்களின் நலன் கருதி நாங்கள் பணிக்குத் திரும்பினோம்.
பொதுவாக போராட்டக் காலங்களில் கோரிக்கைகளை நிறைவேற்றுவார்கள். அத்துடன் ஆசிரியர்கள் மீதான ஒழுங்கு நடவடிக்கைகளை ரத்து செய்ய வேண்டும் என்று சங்கங்கள் கேட்கும். எனவே ஜனநாயக ரீதியாக நடைபெற்ற போராட்டத்தை அரசு ரத்து செய்யும் என்று எதிர்பார்த்தோம்.
இதற்கான கோரிக்கையும் முதல்வரில் இருந்து பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் வரையும் வலியுறுத்தினோம். ஆனால் தொடர்ந்து கால நீட்டிப்பு செய்து கொண்டே வந்தார்கள்.
இதற்கிடையில் தேர்தல் வந்து. தேர்தலுக்குப் பிறகாவது இந்த நடவடிக்கையை ரத்து செய்வார்கள் என்று எதிர்பார்த்தோம். ஆனால் ரத்து செய்யவில்லை. இதனைத் தொடர்ந்து நடத்தப்பட்ட பதவி உயர்வு கவுன்சிலில் சுற்றறிக்கை இயக்குனர் அனுப்பிய சுற்றறிக்கையில் ஒழுங்கு நடவடிக்கைக்கு உள்ளானவர்கள் பெயர் பதவி உயர்வுப் பட்டியலில் இடப்பெறக் கூடாது என்று குறிப்பிட்டுள்ளனர். இதனால் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர்

நடைபெற்ற போராட்டங்கள் அனைத்தும் தமிழக அரசின் அனுமதி பெற்று முறையாக படிப்படியாக நடத்தப்பட்டது. எங்களது கோரிக்கைகளைத்தான் நிறைவேற்றவில்லை. ஒழுங்கு நடவடிக்கையையாவது ரத்து செய்வார்கள் என்று எதிர்பார்த்தோம்.
எங்களை விரோதியாகப் பார்க்காமல், போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்கள் மீதான நடவடிக்கைகளை ரத்து செய்ய வேண்டும். சுமார் 4,000 பணியிடங்களில் ஜாக்டோ- ஜியோவில் உள்ள 2,000 ஆசிரியர்களும் உள்ளனர். அவர்கள் மீதான நடவடிக்கையை ரத்து செய்யவில்லை என்றால் இது வாழ்நாள் முழுவதுமான வடுவாகிவிடும்.

எனவே பதவி உயர்வு வழங்குவதற்கு முன்னர் ஜாக்டோ -ஜியோ போராட்டத்தில் கலந்து கொண்ட ஆசிரியர்கள் மீதான ஒழுங்கு நடவடிக்கையையும் ரத்து செய்ய வேண்டும்.
இது தொடர்பாக கோரிக்கை வைக்க முதன்மைக் கல்விச் செயலாளர் முதல் முதல்வர் வரை ஜாக்டோ- ஜியோ சந்திக்க உள்ளது.
இதையும் கருத்தில் கொள்ளவில்லை என்றால் அடுத்தகட்ட ஜாக்டோ - ஜியோ ஒருங்கிணைப்பாளர்கள் உயர்மட்டக் குழு கூடி இது சம்பந்தமாக அடுத்தகட்ட நிலைப்பாட்டை எடுக்க உள்ளோம்" என்று தியாகராஜன் தெரிவித்தார்


Post a comment

0 Comments