சுண்டி இழுக்கும் அரசுப் பள்ளி!- புதிதாக 600 மாணவர்களை சேர்த்து சாதனை

Join Our KalviNews Telegram Group - Click Here

தனியார் பள்ளிகளின் மீதான மோகம் அதிகரித்துவரும் சூழலில், மாணவர்களை சுண்டி இழுக்கச் செய்து, புதிதாக 600 மாணவர்களை சேர்த்துள்ளார்  ஆர்.புதுப்பாளையம் அரசு மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் மு.ஆ.உதயகுமார்.

மாணவர் சேர்க்கையை அதிகரித்தது மட்டுமன்றி,  உயர் கல்விக்கான பயிற்சி வகுப்புகள், வாசிப்பு பழக்கத்தை அதிகரிப்பது என முன்மாதிரிப் பள்ளியாக இப்பள்ளியை மாற்றிக் கொண்டிருக்கிறார் இவர்.நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகேயுள்ள இப்பள்ளியின் தலைமை ஆசிரியர் உதயகுமாரை சந்தித்தோம். “கடந்த இரு ஆண்டுகளுக்கு முன் ஆர்.புதுப்பாளையம் பள்ளியின்  தலைமை ஆசிரியராக பொறுப்பேற்றேன். அப்போது,  பள்ளியில் சுமார்  1,500 மாணவ, மாணவிகள் பயின்று வந்தனர். இரு ஆண்டுகளில் மாணவர்எண்ணிக்கை 1,800 ஆக அதிகரித்துள்ளது. இந்தாண்டு இதுவரை 600-க்கும் மேற்பட்ட  மாணவ, மாணவிகள் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளனர்.

மாவட்ட அளவில் எந்த அரசுப் பள்ளியிலும் இதுபோல அதிக அளவில் மாணவர் சேர்க்கை நடக்கவில்லை.இதன்மூலம் நடப்பாண்டு 2,200 முதல் 2,300 மாணவர்கள் வரை  பள்ளியில் பயில்வார்கள். இதற்கு முதல் காரணம், பொதுத் தேர்வில் மாணவர்களை கணிசமான அளவில் வெற்றிபெறச் செய்தது. நடப்பாண்டு பிளஸ் 2 பொதுத் தேர்வில்  99 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றனர்.ப்ளஸ்1, 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் 97 சதவீத மாணவர்கள் தேர்ச்சிபெற்றனர். ஏறத்தாழ 30 ஆண்டுகளுக்குப் பின்னர் இந்த அளவுக்கு தேர்ச்சி விகிதம் அதிகரித்துள்ளது.இதற்காக, மாலை மற்றும் இரவு நேரங்களில் சிறப்பு பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டன.

பொறியியல் கல்லூரிகளில் மாணவர்கள் சேருவதற்காக, தனிப் பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன. நீட் தேர்வுக்கு பயிற்சி அளிப்பது மட்டுமின்றி, ஆங்கிலம், தமிழில்   பயிற்சிக் கையேடும்வழங்கப்பட்டது. மாவட்ட அளவில் முதன்முதலாக ரூ. 20 லட்சம் மதிப்பில்,  ‘ரோபாடிக் ஆய்வகம்’ அமைக்கப்பட்டு,  மாணவர்களுக்கு கணினி மூலம் பயிற்சி அளிக்கப்படுகிறது.மேலும், மாவட்ட அளவில் முதன்முறையாக 9, 10-ம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு  பல்வேறு தொழிற்கல்வியும் அளிக்கப்படுகிறது. இதற்காக  ரூ. 2 லட்சம் மதிப்பிலான உபகரணங்கள் வாங்கப்பட்டுள்ளன. 9 முதல் 12-ம் வகுப்பு வரை இந்த தொழிற்பயிற்சி அளிக்கப்படுகிறது. மேலும், வேலைவாய்ப்பும் ஏற்படுத்தித் தரப்படுகிறது.

இவைதவிர,  மாணவர்களிடம் வாசிப்புப்  பழக்கத்தை அதிகரிக்கும் வகையில், பள்ளியின்அறிவிப்புப் பலகையில் தினமும் நாளிதழ்களில் வரும் நல்ல தகவல்களை பெரிய அளவில் நகல் எடுத்து ஒட்டப்படுகிறது. காலையில் நடைபெறும் இறை வணக்கத்தின்போதும்,நல்ல தகவல்கள் படித்துக் காண்பிக்கப்படும்.இதன் மூலம் மாணவர்களின் நாளிதழ் வாசிப்பு பழக்கம் மேம் படுகிறது. இதற்கு முன் பணிபுரிந்த சேந்தமங்கலம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில், 1,000 மாணவர்களை நூலகத்தில் ஆயுட்கால உறுப்பினர்களாக்கினேன். பாடக் கல்வியுடன், விளையாட்டு, கட்டுரை, ஓவியம், பேச்சுப் போட்டிகளில் பங்கேற்க மாணவர்களை  ஊக்கப்படுத்துகிறோம்.

கடந்த ஆண்டு மாணவர் நவீன்குமார்,  தனியார் தொலைக்காட்சி நடத்திய பேச்சுப்போட்டியில் மாநில அளவில் முதலிடம் பிடித்து, ரூ.10 ஆயிரம் பரிசு வென்றார். மரம் வளர்ப்பை ஊக்குவிக்கும் வகையில், ஆர்.புதுப்பாளையத்தில் உள்ள தனியார் அறக்கட்டளையுடன் இணைந்து,  போதைமலையில் ஆயிரம் விதைப் பந்துகளை வீசியுள்ளோம்.

சேந்தமங்கலம் பள்ளியில் பணிபுரிந்தபோது,  சுற்றுச்சூழல் துறை சார்பில் விருதும்,  ரூ.2 லட்சம் நிதியும் வழங்கப்பட்டது. இதேபோல,  தனியார் அமைப்புகளும் விருதுகளை வழங்கியுள்ளன. எனினும், விருதுகளுக்காக இப்பணிகளை மேற்கொள்வதில்லை. மாணவர் சேர்க்கை அதிகரிப்புக்கு, பள்ளி ஆசிரியர்களின் ஒத்துழைப்புதான் முக்கியக் காரணம். அரசுப் பள்ளி என்றாலும், அனைத்துக்கும் அரசை எதிர்பார்க்காமல், சுயமாக முயற்சி மேற்கொண்டால் எதுவும் சாத்தியம்தான்”  என்றார் உறுதியுடன் உதயகுமார்

🔴🔴 இந்த பயனுள்ள தகவலை அனைத்து Whatsapp குழுக்களிலும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்