நீட் 2019 - தேர்வுக்கான கட்-ஆப் மதிப்பெண்களை 6 சதவீதம் குறைக்க மத்திய அரசு ஒப்புதல்

2019-20-ஆம் ஆண்டுக்கான மருத்துவ மேல் படிப்புக்கான நீட் தேர்வு தகுதி கட்-ஆப் மதிப்பெண்களை 6 சதவீதம் குறைப்பதற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. வாரிய ஆளுநர்கள், இந்திய மருத்துவக் கவுன்சில் (எம்சிஐ) ஆகியவற்றுடன் நடைபெற்ற ஆலோசனைக்குப் பிறகு மத்திய சுகாதார நல அமைச்சகம் இந்த முடிவை மேற்கொண்டுள்ளது.

தற்போது, இத்தேர்வில் பொதுப் பிரிவில் தேர்வு எழுதுவோர் குறைந்தபட்சம் 44 சதவீதம், மாற்றுத்திறனாளிகள் பிரிவில் தேர்வு எழுதுவோர் குறைந்தபட்சம் 39 சதவீதம், எஸ்சி, எஸ்டி மற்றும் ஓபிசி பிரிவில் தேர்வு எழுதுவோர் 34 சதவீதம் மதிப்பெண்கள் எடுப்பது இப்படிப்பில் சேர்க்கை பெறுவதற்கான தகுதியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு நடைபெறும் மருத்துவப் படிப்பு கவுன்சிலிங்கில், திருத்தி அமைக்கப்பட்ட தகுதி மதிப்பெண்களின்படி மாணவர்களைச் சேர்க்க தேவையான ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறு அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள் ஆகியவற்றை மத்திய சுகாதார அமைச்சகம் கேட்டுக் கொண்டுள்ளது. இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான எம்பிபிஎஸ், பிடிஎஸ் போன்றவற்றுக்கு நீட் தேர்வு நடத்தப்படுவது போல, முதுகலைப் படிப்புகளுக்கும் நீட் தேர்வு நடத்தப்படுவது குறிப்பிடத்தக்கது.