1 லட்சம் அரசு ஊழியர்- ஆசிரியர்கள் தபால் ஓட்டு போடவில்லை

1 லட்சம் அரசு ஊழியர்- ஆசிரியர்கள் தபால் ஓட்டு போடவில்லை

*1 லட்சம் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் இன்னும் ஓட்டு போடவில்லை. வாக்குச் சீட்டுகளை வாங்கி வைத்திருந்தாலும் அரசு ஊழியர்கள் இன்னும் தபாலில் அனுப்பாமல் உள்ளனர்*

*தமிழ்நாட்டில் 3 லட்சத்து 75 ஆயிரம் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் போலீசார் தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ளனர்*

*இவர்கள் தேர்தலில் ஓட்டு போடுவதற்காக தபால் ஓட்டு போடும் வசதி உள்ளது. துறை அதிகாரியிடம் கையெழுத்து பெற்று தபாலில் வாக்களிக்க வேண்டும்*

*கலெக்டர் அலுவலகத்தில் உள்ள பெட்டியிலும் தபால் ஓட்டை போடலாம் அல்லது எந்த வாக்குச்சாவடியில் பணியில் உள்ளாரோ அந்த பூத்திலும் கடைசியாக வாக்களிக்கலாம். இப்படி ஓட்டு போட 3 விதமான வசதிகள் உள்ளன*

*இந்த தேர்தலில் 1 லட்சம் போலீசார் தபால் ஓட்டுகளை பதிவு செய்துள்ளனர். ஆனால் 2 லட்சத்து 75 ஆயிரம் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்ட தபால் ஓட்டுகளில் 1 லட்சத்து 75 ஆயிரம் ஓட்டுகள் தான் பதிவாகி உள்ளது*

*இன்னும் 1 லட்சம் தபால் ஓட்டுகள் வர வேண்டும். ஆனால் அரசு ஊழியர்கள்- ஆசிரியர்கள் இன்னும் ஓட்டு போடாமல் உள்ளனர். வாக்குச் சீட்டுகளை வாங்கி வைத்திருந்தாலும் அரசு ஊழியர்கள் இன்னும் தபாலில் அனுப்பாமல் உள்ளனர்*

*இவர்களுக்கு 23-ந்தேதி காலை 8 மணி வரை ஓட்டு போட கால அவகாசம் உள்ளது. ஆனால் இன்னும் ஓட்டு போடாதது ஆர்வம் இல்லாததையே காட்டுகிறது*

*இதுகுறித்து உதவி தேர்தல் அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது அவர் கூறியதாவது*

*அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு தேர்தல் பயிற்சி கொடுக்கும் போதே தபால் ஓட்டு போடுவதற்கான பயிற்சியும் கொடுக்கப்படுகிறது. எந்த வாக்குச் சாவடியில் பணியாற்ற செல்கிறாரோ அங்கேயே தனது வாக்கை பதிவு செய்யலாம் என்ற விவரத்தையும் சொல்லி கொடுத்துள்ளோம்*

*சிலர் வாக்குச்சீட்டை வாங்கி வைத்துக் கொண்டு சம்பந்தப்பட்ட அதிகாரியிடம் கையெழுத்து பெற்று தபாலிலும் வாக்களிக்கும் முறையை எடுத்து கூறி உள்ளோம்*

*சில ஊழியர்கள் வாக்குச் சாவடியில் பணியாற்றாமல் பறக்கும் படையில் இடம் பெற்றிருப்பார்கள். இவர்கள் ‘பூத்’துக்கு செல்ல முடியாததால் தபால் மூலம் தான் வாக்களிக்க இயலும். அவர்களுக்கும் விதிமுறைகளை எடுத்து சொல்லி உள்ளோம்*

*ஆனாலும் சிலர் வாக்களிக்க முன் வராமல் இருப்பது அவர்களது மனநிலையை பொருத்த முடிவாகும்*

*தபால் ஓட்டுகளை கண்காணிக்க ஒவ்வொரு மாவட்டத்திலும் தனியாக துணை ஆட்சியர் மேற்பார்வையில் தாசில்தார் நியமிக்கப்பட்டுள்ளனர்*

*தபால் ஓட்டுகளை தவறாமல் பதிவு செய்யுங்கள் என்று தேர்தல் கமி‌ஷன் வலியுறுத்தி வந்தாலும் ஒவ்வொரு அரசு ஊழியர்களும் வாக்களித்தார்களா? என்பதை கண்டறிய தேவையான முயற்சி எடுக்காதது உண்மைதான்*

*சில அரசு ஊழியர்களுக்கு சொந்த ஊரில் ஓட்டு இருக்கும். பணிபுரியும் இடம் வேறொரு இடமாக இருக்கும். இவர்கள் ஓட்டு போட சொந்த மாவட்டத்தில் உள்ள கலெக்டர் அலுவலகத்துக்கு சென்று வர வேண்டும் அல்லது அதிகாரியிடம் கையெழுத்து பெற்று வாக்களிக்க வேண்டும்*

*இதற்காக லீவு போட்டு சென்று வர வேண்டுமா, என நினைத்து சிலர் வாக்களிக்காமல் இருக்கலாம்*

*ஆனாலும் தினமும் ஒவ்வொரு கலெக்டர் அலுவலகத்துக்கும் தினமும் தபால் ஓட்டு வந்து கொண்டிருக்கிறது. 23-ந்தேதி தான் எவ்வளவு தபால் ஓட்டுகள் வந்துள்ளது. எத்தனை பேர் ஓட்டு போடவில்லை என்பது முழுமையாக தெரிய வரும்*

*இவ்வாறு அவர் கூறினார்*