Title of the document



விடுமுறை நாள்களை ஆசையாய் எதிர்பார்த்துக் காத்திருப்பார்கள் குழந்தைகள். ஆனால், பெற்றோருக்கோ இதுதான் சோதனைக்காலம். விடுமுறை நாள்களில் வீட்டில் அதகளம் செய்யும் குட்டீஸை நாள் முழுவதும் எப்படிச் சமாளிப்பது, அவர்களின் கவனத்தை எதில் திசை திருப்புவது, குழந்தைகளை வெயிலில் விளையாட அனுப்புவதா, குளிர்ந்த உணவுகளைச் சாப்பிட அனுமதிக்கலாமா, சரியான நேரத்திற்கு எப்படிச் சாப்பிட வைப்பது, எந்த ஊருக்கு அழைத்துச் செல்வது, யாரை வீட்டுக்கு அழைப்பது என அடுக்கடுக்காய் எழும் உங்கள் கேள்விகளுக்குப் பதில் சொல்கிறார் தன்னம்பிக்கை பேச்சாளர் சியாமளா ரமேஷ் பாபு

விடுமுறை விட்ட முதல் நாளிலிருந்தே ஒவ்வொரு நாளையும் எப்படிக் கழிக்கலாம் என்ற அட்டவணையைக் குழந்தைகளோடு சேர்ந்து தயார் செய்துகொள்ளுங்க


அடுத்த வருடத்திற்கான பாடத்திட்டம் புத்தகங்கள் அதற்காக முன்கூட்டியே ட்யூஷன் இவற்றை அறவே தவிர்ப்பது நல்லது. விடுமுறை நாள்கள் அதற்கானதல்ல என்பதை உணர்ந்து உங்கள் குழந்தைகளின் அறிவினையும் ஆரோக்கியத்தையும் வளர்ப்பது போன்று பிளான் செய்து கொள்ளுங்கள்.

ஒவ்வொரு குழந்தைக்கும் விடுமுறையைக் குதூகலமாக்கும் முதல் இடம், அவர்கள் வீடாகத்தான் இருக்க வேண்டும். இதற்குப் பெற்றோர்கள் இருவரும் இணைந்து பொறுப்புகளை ஏற்று குழந்தைகளின் விடுமுறையை அவர்களோடு சேர்ந்து மகிழ வேண்டும். அவர்களையும் மகிழ்ச்சியுடன் வைத்திருக்க வேண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.


அவசர கதி ஓட்டத்திலிருந்து குழந்தைகள் விடுபட்டு கொஞ்சம் ஆற அமர பொழுதினைப் பயனுள்ளதாய் ஆரோக்கியமாய்க் கழிக்கும் நாள்கள்தாம் இந்தக் கோடை விடுமுறை. குழந்தைகளைக் காலையில் சீக்கிரம் எழுவதற்கு ஊக்கப்படுத்திப் பழக்கலாம். இதற்கு அசாத்திய பொறுமை தேவை என்றாலும் தொடர்ந்து பழக்கப்படுத்துவதன் மூலம் சில நாள்களிலேயே குழந்தைகள் சீக்கிரம் எழுந்திருக்கப் பழகிக்கொள்வார்கள். இந்தப் பழக்கம் பள்ளி தொடங்கிய பின்னரும்கூட பயனுள்ளதாக இருக்கும்.

பள்ளிக்குக் கிளப்பும் போது அவசரமான சூழலில் குழந்தைகளுக்குத் தினமும் பாலை மட்டுமே குடிக்க கொடுத்திருப்போம். விடுமுறை தினங்களில் அவர்களை என்ஜாய் பண்ண வைக்கும் விதமாக விதவிதமான சத்துள்ள பானங்களை குடிக்கக் கொடுக்கலாம். அந்தச் செய்முறைகளில் குழந்தைகளையும் பங்கெடுக்க வைக்கலாம்.

நீங்கள் வாக்கிங் செல்லும் போது குழந்தைகளையும் அழைத்துச் செல்லுங்கள். அந்தச் சமயத்தில் சூழலைப்பற்றி அறிந்து கொள்ளும் வகையிலும் ரசிக்கும் வகையிலும் சுவாரஸ்யமாகப் பேசிக்கொண்டே போகலாம். வீட்டிற்கு வந்த பின் நீதிக்கதைகளோ, செய்தித்தாள்களையோ படிக்கும் பழக்கத்தை இலகுவாக அறிமுகப்படுத்தலாம்

குழந்தைகளுடன் பகல் நேரத்தில் உங்களால் நேரம் கழிக்க முடியும் எனில், பக்கத்து வீட்டு குழந்தைகளோடு உங்கள் குழந்தைகளையும் விளையாடப் பழக்க வேண்டும். குழந்தை விளையாடுகிறார்களே எனத் தனியே விட்டுவிடாமல் அவர்களின் பாதுகாப்பிற்காக அவர்களின் அருகில் இருப்பது நல்லது.


மதிய நேரம் 2 மணிநேர ஓய்வு கட்டாயம் குழந்தைகளுக்கு அவசியம். கண்ணை மூடித் தூங்க வேண்டும் என்ற அவசியமில்லை. அந்த நேரத்தில் நம் சிறு வயது கதைகள், நாம் சந்தித்த நல்ல மனிதர்களைப் பற்றிய தகவல்களைக் கதைகளாகப் பகிரலாம்.

மாலை நேரங்களில் அருகிலுள்ள பூங்கா நூலகம் மற்றும் வழிபாட்டு இடங்களுக்கு அழைத்துச் செல்லலாம். இது அவர்களை அனுபவம்மிக்கவர்களாக மாற்றும். மேலும் நம் பாரம்பர்யப் பெருமைகளை விளக்கும் சுற்றுலா தலங்களுக்கு அழைத்துச் செல்லலாம். இது வரலாற்றுச் செய்திகளை குழந்தைகள் மனதில் பசுமரத்தாணி போல் பதியச்செய்யும்

குழந்தையின் வயதுக்குத் தகுந்த சின்னச் சின்ன வீட்டு வேலைகளை உங்களோடு பகிர்ந்து கொள்ளப் பழக்கலாம்.

ஆதரவற்றோர் இல்லம் மற்றும் மனநலம் குன்றியோர் காப்பகம் போன்ற இடங்களுங்கு அழைத்துச் செல்லலாம். தங்களுக்குக் கிடைத்த நல்ல வாழ்க்கை மற்றும் பெற்றோர் பற்றி குழந்தைகள் உணர்ந்து கொள்ள உதவும்.

உறவினர்கள் வீட்டிற்கு அழைத்துச் செல்லலாம் அல்லது உறவினர்களை நம்வீட்டிற்கு சிலநாள்கள் வரச்சொல்லி அவர்களோடு குழந்தைகள் விடுமுறையைக் கழிக்கச் செய்யலாம்.

குழந்தைகளோடு நேரத்தைச் செலவிடும் போது கூடுமானவரை கைப்பேசி உபயோகத்தைப் பெற்றோர்கள் குறைப்பதோ அல்லது தவிர்ப்பதோ நல்லது. அதே போன்று, குழந்தைகளின் கைகளிலும் கேட்ஜெட்களை கொடுப்பதைத் தவிர்த்து, நம் மரபு சார்ந்த விளையாட்டுகள் விளையாடக் குழந்தைகளை ஊக்கப்படுத்தவேண்டும். குழந்தைக்கு ஆர்வம் இருக்கும் பட்சத்தில் உடலை வலுவாக்கும் உள் அரங்க விளையாட்டுகளில் குழந்தைகளின் ஆர்வத்தை அறிந்துகொண்டு அவர்களைச் சேர்த்து விடலாம்.

இது அன்றாட வாழ்வில் ஓர் ஒழுங்கினையும் நேரம் தவறாமையும் கடைப்பிடிக்க உதவும்.

பள்ளிக்குச் செல்லும் போது குழந்தைகளை தங்களைத் தாங்களே தயார்படுத்திக்கொள்ள உதவும் சின்னச் சின்ன பயிற்சிகளை வழங்கலாம்.
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post