நடப்பாண்டுக்கான பொறியியல் கலந்தாய்வை தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் நடத்தும் : உயர்கல்வித்துறை அறிவிப்புதமிழகத்தில் பொறியியல் கலந்தாய்வை தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் நடத்தும் என்று உயர்கல்வித்துறை அறிவித்துள்ளது. கடந்த 20 ஆண்டுகளாக பொறியியல் கலந்தாய்வை அண்ணா பல்கலைக்கழமே நடத்தி வந்தது. தமிழ்நாடு பொறியியல் மாணவர் சேர்க்கை மையத்தின் முலம் கலந்தாய்வு நடைபெற்று வந்தது. அதன் தலைவராக பல்கலை., துணைவேந்தர்கள் செயல்பட்டு வந்தனர். இந்நிலையில் கலந்தாய்வில் உயர்கல்வித்துறை செயலாளரை தலைமை பொறுப்பில் வைத்து தமிழக அரசு ஒரு அரசாரணையை வெளியிட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து துணைவேந்தர் சூரப்பா பதவியில் இருந்த ராஜினாமா செய்தார். மேலும் இந்தாண்டு பொறியியல் கலந்தாய்வை அண்ணா பல்கலைக்கழகம் நடத்தாது என்றும் அறிவித்தார்.

இதையடுத்து இந்தாண்டு பொறியியல் கலந்தாய்வை நடத்துவது அண்ணா பல்கலைக்கழகமா அல்லது உயர்கல்வித்துறையா என்று கேள்வி எழுந்தது. இந்நிலையில் தமிழகத்தில் பொறியியல் கலந்தாய்வை இந்தாண்டு தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் நடத்தும் என்று உயர்கல்வித்துறை செயலாளர் மங்கத் ராம் சர்மா அறிவிப்பு வெளியிட்டுள்ளார். தமிழகத்தில் 548 பொறியியல் கல்லூரிகள் உள்ளன. ஆண்டுதோறும் ஏப்., முதல் வாரம் கலந்தாய்வு குறித்து அறிவிப்பு வெளியாகும். கடந்த 2017ம் ஆண்டு வரை ஒற்றை சாளர முறையில் அண்ணா பல்கலை.,யில் நேரிடையாக கலந்தாய்வு நடைபெற்று வந்தது. ஆனால் கடந்தாண்டு முதல் ஆன்லைன் கலந்தாய்வு முறை அறிமுகம் செய்யப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டது.

இதனையடுத்து 42 உதவி மையங்கள் அமைக்கப்பட்டு கலந்தாய்வு நடைபெற்றது. அதற்கான மென்பொருள் மற்றும் உபகரணங்கள் அண்ணா பல்கலைக்கழகம் வசம் உள்ளது. இந்நிலையில், தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் எவ்வாறு கலந்தாய்வு நடத்தும் என்று கேள்வி எழுந்துள்ளதால் மாணவர்களிடையே குழப்பம் ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது. அண்ணா பல்கலைக்கழகம் உயர்கல்வித்துறைக்கும் ஏற்பட்டுள்ள மோதலால் பொறியியல் கலந்தாய்வு நடத்த காலதாமதம் ஏற்படும் நிலை ஏற்பட்டுள்ளது. கலந்தாய்வு குறித்து தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் மற்றும் உயர்கல்வித்துறை ஆலோசனை நடத்தி முடிவு எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதையடுத்து கலந்தாய்வு தள்ளிப்போக வாய்ப்புள்ளது.