கலை, அறிவியல் கல்லூரியில் சேர மாணவ, மாணவியர் ஆர்வம்தமிழகத்தில் 91 அரசு கலை, அறிவியல் கல்லூரிகள், 139 அரசு உதவிபெறும் கல்லூரிகள், 500-க்கும் மேற்பட்ட தனியார் சுயநிதி கல்லூரிகள் உள்ளன.

இங்கு கலை, அறிவியல் தொடர்பான இளங்கலை படிப்புகளில் (பி.ஏ., பி.எஸ்சி., பி.காம்., பிபிஏ) ஏறத்தாழ 4 லட்சம் இடங்கள் உள்ளன.பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வந்ததைத் தொடர்ந்து, தனியார் கலை, அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான ஆன்லைன் பதிவு ஏப்ரல் 2-வது வாரத்திலேயே தொடங்கிவிட்டது. அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் இளங்கலை படிப்புகளில் சேர, கடந்த 15-ம்தேதிமுதல் விண்ணப்பங்கள் வழங்கப்படுகின்றன.பிளஸ் 2 தேர்வு முடிவுகள் கடந்த 19-ம் தேதிவெளியானது.

இதைத் தொடர்ந்து, சென்னையில் மாநிலக் கல்லூரி, ராணி மேரி மகளிர் கல்லூரி, காயிதே மில்லத் அரசு மகளிர் கல்லூரி, நந்தனம் அரசு ஆண்கள் கலைக் கல்லூரி உள்ளிட்ட அரசு கல்லூரிகளில் தினமும் ஏராளமான மாணவ, மாணவியர், பெற்றோர்கள் விண்ணப்பங்களை வாங்கிச் செல்கின்றனர்.பொறியியல் படிப்பில் சேர்வதற்கான ஆன்லைன் பதிவு மே 2-ம் தேதி தொடங்க உள்ளது. எனினும், கலை, அறிவியல் படிப்புகளில் சேரும் ஆர்வம் மாணவ, மாணவியரிடம் அதிகமாகவே காணப்படுகிறது. கலை பாடங்களில் பி.காம்., பிபிஏ படிப்புகளிலும், அறிவியல் பாடங்களில்கணிதம், இயற்பியல், வேதியியல் போன்றவற்றிலும் சேர மாணவர்கள் மிகுந்த ஆர்வத்துடன் இருப்பதைப் பார்க்க முடிந்தது.

சென்னை மாநிலக் கல்லூரி முதல்வர் பேராசிரியர் ராவணன் கூறியது: கடந்த 15-ம் தேதி முதல் விண்ணப்பங்களை வழங்கி வருகிறோம். இந்த ஆண்டுமுதல்முறையாக ஆன்லைன்விண்ணப்ப முறையை அறிமுகம் செய்துள்ளோம். ஆன்லைனில் இதுவரை 1,000 பேர் விண்ணப்பித்துள்ளனர்.

தேசிய தரவரிசை பட்டியலில் சிறப்பிடம் பெற்றிருப்பதால் டெல்லி உள்ளிட்ட பல மாநிலங்களில் இருந்தும் ஆன்லைனில் விண்ணப்பித்து வருகின்றனர். கல்லூரியில் நேற்று ஒரே நாளில் மட்டும் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் விண்ணப்பங்கள்வாங்கியுள்ளனர். விண்ணப்பங்களை மே 6-ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்றார்.