Title of the document

இளைஞர்களை மிகவும் ஈர்க்கிற ஒன்றாக அரசுப் பணி இருந்து வருகிறது.

பணிப் பாதுகாப்பு, பணிச் சூழல், பதவி உயர்வுக்கான வாய்ப்புகள், கணிசமான சம்பளம் என்று இதற்கு பல காரணங்கள் உள்ளன. அரசுப் பணி மீதான இந்த ஈர்ப்பைப் பயன்படுத்தி, சமூக ஊடகங்களில் சிலர், வேலைவாய்ப்பு தொடர்பான பொய்ச் செய்திகளைப் பரப்பி வருகின்றனர்.

‘..... துறையில் 5,000 பணியிடங்கள்! மாதம் 50,000 ரூபாய் சம்பளம்!' என்று கவர்ச்சியான போலி விளம்பரங்கள், சகட்டு மேனிக்கு வலம் வந்து கொண்டு இருக்கின்றன. இத்துறையில் பணிபுரிகிற யாரையேனும் கேட்டுப் பார்த்தாலே, இவை போலியான தகவல்கள் என்பது தெரிந்துவிடும். ஆனாலும், அரசுப் பணி என்கிற ஆசை வார்த்தையில், நாள்தோறும் ஏராளமானோர் ஏமாற்றப்பட்டு வருகிறார்கள். இத்தகைய போலி செய்திகள் பெரும்பாலும் 'வாட்ஸ்அப்' மூலம் பரப்பப்படுகிறது. மின்னஞ்சல் மூலம் வருவனவும் உண்டு.

ரிசர்வ் வங்கி, வருமானவரித் துறை, ரயில்வே மற்றும் ஸ்டேட் பாங்க் ஆகியன சமூக ஊடகச் செய்திகளில் அதிகம் காணப்படுகின்றன. கடந்த ஒரு மாதத்தில் மட்டும், தொலைபேசியிலும் நேரிலுமாக, தனிப்பட்ட முறையில் என்னிடம் நூற்றுக்கணக்கான விசாரிப்புகள் வந்துவிட்டன.

தமிழகத்தின் தென் மாவட்டத்தில் இருந்து, எம்.எஸ்.சி. நிறைவு செய்த ஓர் இளம்பெண், ஓர் அச்சடித்த விண்ணப்பத்தில், தனது புகைப்படத்தையும் ஒட்டி, அரசுத் துறை ஒன்றுக்கு, பணிக் கோரிக்கை அனுப்பி இருக்கிறார். இந்த விண்ணப்பத்தை அவர் ஒரு தனி நபரிடம் இருந்து பணம் கொடுத்து வாங்கி இருக்கிறார் என்பதுதான் வேதனை.

மத்திய, மாநில அரசுத் துறைகளுக்கு போட்டித் தேர்வுகள் மூலம் மட்டுமே பணி நியமனம் செய்யப்பட முடியும். மத்திய அரசுப் பணிகளுக்கு, யு.பி.எஸ்.சி., எஸ்.எஸ்.சி. போன்ற ஆணையங்கள், மாநில அரசுப் பணிகளுக்கு டி.என்.பி.எஸ்.சி., ரயில்வே பணிகளுக்கு ஆர்.ஆர்.பி, வங்கிப் பணிகளுக்கு ஐ.பி.பி.எஸ். என்று தனித்தனியே சிறப்பு ஆணையங்கள் இருக்கின்றன. இவை, அவ்வப்போது போட்டித் தேர்வுகள் நடத்தி, ஊழியர்கள், அலுவலர்களைத் தேர்வு செய்கின்றன.

இவற்றுக்கான விளம்பரங்கள் பிரபல நாளிதழ்களில் வெளியிடப்படுகின்றன. அநேகமாக எல்லாத் தமிழ் நாளிதழ்களுமே, வாரம் ஒருமுறையேனும், வேலைவாய்ப்புச் செய்திகளை வெளியிடுகின்றன. அரசு, ரயில்வே, வங்கி, காப்பீட்டு நிறுவனங்களில் பணியிடங்களுக்கான அறிவிக்கை வரும் போதெல்லாம், நாளிதழ்கள் தவறாமல் அது குறித்துத் தனியே விரிவாகத் தெரிவிக்கின்றன. இதோடு மட்டுமன்றி, ‘இந்து தமிழ்' போன்ற பத்திரிகைகள், வேலைவாய்ப்பு தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சிகளையும் தமிழ்நாடு முழுவதும், தொடர்ந்து நடத்திக் கொண்டு வருகின்றன..

இத்தனையும் மீறி, இளைஞர்கள் மத்தியில், அரசுப் பணி பற்றிய தவறான புரிதல் நீடிக்கிறது. கல்வியறிவு மிகுந்துள்ள தமிழ்நாட்டிலேயே இந்த நிலை என்றால், பிற மாநிலங்களில் எந்த அளவுக்கு மோசடிகள் நடைபெறக் கூடும்...?எந்தத் துறையில் பணி வாய்ப்பு இருப்பதாகத் தகவல் வந்தாலும், அதிகாரப்பூர்வ இணைய முகவரிக்குச் சென்று, செய்தியை உறுதி செய்து கொள்ள வேண்டும். வேலைவாய்ப்பு அறிவிக்கையில் வயது வரம்பு, கல்வித் தகுதி, விண்ணப்பம் அனுப்ப இறுதி நாள், போட்டித் தேர்வு நாள் ஆகியன பிரதானமாக அடிக் கோடிட்டு அல்லது சற்றே வித்தியாசமாகத் தெரியுமாறு தரப்பட்டு இருக்கும்.

‘மாத சம்பளம் இவ்வளவு' என்று ஊதியத்துக்கு முக்கியத்துவம் தந்து எந்த அறிவிக்கையும் இருப்பது இல்லை. தேர்வுக் கட்டணம், ரொக்கமாகப் பெறப்படுவது இல்லை. வங்கி ‘டிராப்ட்' அல்லது' கணக்கு மாற்றல்' மூலமாகத்தான் பெறப்படும். இதுபோன்ற, முக்கிய அம்சங்களைத் தெரிந்து வைத்துக் கொண்டால், யாரையும் கேட்காமலேயே, போலிச் செய்திகளை எளிதில் அடையாளம் கண்டு கொண்டுவிடலாம்.
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post