இலவச கட்டாயக்கல்வி திட்டம்- அரசு பள்ளிகளின் கட்டமைப்பை கைகழுவும் அரசு: ஆசிரியர் சங்கம் கேள்விஇலவச கட்டாயக் கல்வித் திட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையினை அரசே எடுத்து நடத்துவதன்மூலம் அரசு பள்ளிகளின் கட்டமைப்பை கைவிடுகிறதா? என தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் கேள்வி எழுப்பியுள்ளது.

இதுகுறித்து இச்சங்கத்தின் மாநிலத்தலைவர் பி.கே.இளமாறன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை:“இலவச கட்டாயக் கல்வி திட்டத்தில் தனியார் பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்கு இன்று முதல் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என்று மெட்ரிகுலேசன் பள்ளிகள் இயக்குநரகம் அறிவித்துள்ளது அரசு பள்ளிகள் வளர்ச்சிக்கு பெரிதும் தடையாக இருக்கும்.இலவச கட்டாய கல்வி திட்டத்தில் 25 % மாணவர்கள் சேர்க்கையினை அந்தந்த பள்ளி நிர்வாகமே மேற்கொண்டு அதனை அரசு கண்காணிக்கவேண்டும். ஆனால் அரசாங்கமே முன்னெடுத்து வருடத்திற்கு ஒரு லட்சம் மாணவர்களை தேர்வு செய்து தனியாருக்கு தாரைவார்ப்பதோடு மானியத் தொகை 100 கோடி ரூபாய் வழங்கப்பட்டு வருவதினால் அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை எப்படி அதிகரிக்கும்.

அரசு பள்ளிகளின் வளர்ச்சியினை கருத்தில் கொண்டும் ஏழை எளிய மக்களின் குழந்தைகள் ஏற்றம்பெற செய்திட அரசு பள்ளிகளின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தவேண்டும். தரமான பாடத்திட்டம் தயாரித்தல் மட்டும் போதாது அதனை செயல்படுத்தும் விதமாக பள்ளிகள் சீரமைக்கப்பட வேண்டும்.குறிப்பாக Q R எனும் புதிய முறையினை செயல்படுத்திட ஆன்ட்ராய்டு ஸ்மார்ட் கிளாஸ் அமைத்திடவேண்டும்.

மேலும், 2017 ல் கல்விஅமைச்சர் நடத்திய ஆசிரியர் சங்கப் பிரதிநிகளுடனான கூட்டத்தில் தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் சார்பில் வைக்கப்பட்ட கோரிக்கையினை ஏற்று 3000 ஸ்மார்ட் வகுப்பறைகள் தொடங்கப்படும் என அறிவித்ததை விரைந்து செயல்படுத்திட வேண்டுகின்றோம்.மேலும் போதிய இடவசதியின்றி அங்கிகாரம் இல்லாமல் செயல்படும் மெட்ரிக் பள்ளிகள் மாணவர்களை அரசு பள்ளியுடன் இணைத்திட நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும்.

தமிழ்நாடு அரசு உடனடி நடவடிக்கை எடுத்து அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கையினை அதிகரித்திடவும், தரமான கல்வி வழங்கும் அரசு பள்ளிகளை காப்பாற்றிட. இலவச கட்டாயக் கல்வி திட்டத்தின் மூலம் தனியார் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையினை அரசு தேர்வு செய்து தருவதை கைவிடவேண்டும்”இவ்வாறு தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.