Title of the document


``கடந்த வருடத்தைவிட இந்த ஆண்டு, அரசுப் பள்ளிகளின் தேர்ச்சி சதவிகிதம் அதிகரித்திருப்பதே தமிழகத்தில் திருப்பூர் மாவட்டம் முதலிடம் பிடித்ததற்குக் காரணம்'' என திருப்பூர் மாவட்ட ஆட்சியர் பழனிசாமி தெரிவித்திருக்கிறார். 12- ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளில், திருப்பூர் மாவட்டம் அதிக தேர்ச்சி சதவிகிதம் பெற்று, முதலிடம் பிடித்த நிலையில், தற்போது 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளிலும் திருப்பூர் மாவட்டமே முதலிடம் பிடித்திருக்கிறது. இன்றைய தினம் வெளியான 10 - ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளில், 98.53 சதவிகிதம் தேர்ச்சிபெற்று, மாநில அளவில் திருப்பூர் மாவட்டம் முதலிடம் பிடித்துள்ளது. இதுபற்றி செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய திருப்பூர் மாவட்ட ஆட்சியர் பழனிசாமி,
``ஒரே வருடத்தில் 10 மற்றும் 12 - ம் வகுப்பு பொதுத் தேர்வுகளில் மாநில அளவில் திருப்பூர் மாவட்டம் முதலிடம் பிடித்திருப்பது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது. இதற்குக் காரணமான மாணவர்களுக்கும், அவர்களுக்குத் துணை நின்ற ஆசிரியர்களுக்கும் வாழ்த்துகள். பள்ளிக் கல்வித்துறை சிறப்பான முறையில் மாணவர்களுக்கு வகுப்புகளை நடத்தி, அவர்களை சிறப்பான முறையில் தேர்ச்சியடையவும் வைத்துள்ளது.
திருப்பூர் மாவட்டத்தில் தேர்வு எழுதிய 29,153 மாணவர்களில், 28,723 பேர் தேர்ச்சியடைந்திருக்கிறார்கள். இதில், கடந்தஆண்டைவிட இந்த ஆண்டு அரசுப் பள்ளிகளின் தேர்ச்சி சதவிகிதம் அதிகரித்திருப்பதே, திருப்பூர் மாவட்டம் முதலிடம் பிடித்திருப்பதற்குக் காரணமாக இருக்கிறது'' என்றார். அதைத் தொடர்ந்து, பொதுத்தேர்வு வெற்றியைக் கொண்டாடும் விதமாக, அரசுப் பள்ளி மாணவர்கள் கேக் வெட்டி தங்களது மகிழ்ச்சியைப் பரிமாறிக்கொண்டனர்.
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post