மாணவர்களுக்கு கணக்காயர் பயிற்சி: பள்ளிக் கல்வித்துறை ஏற்பாடு


தமிழக பள்ளிக் கல்வித்துறை மற்றும் இந்திய பட்டய கணக்காயர் சங்கம் ஆகியவற்றின் இடையே செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தப்படி அரசுப் பள்ளிகள் மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு வணிகக் கல்வியின் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில் இந்திய பட்டயக் கணக்காயர் சங்கத்தின் கல்வி ஆலோசனைக் குழுவின் மூலம் 32 மாவட்டங்களில் 352 முதுநிலை பட்டதாரி ஆசிரியர்களுக்கு (வணிகவியல், கணக்குப் பதிவியல், பொருளியல், வணிகக் கணிதம் மற்றும் ஆங்கிலம்) பயிற்சி அளிக்கப்பட்டது.

இதையடுத்து சுமார் 10  ஆயிரம் மாணவர்களுக்கு பட்டயக் கணக்காயர் தேர்வு மற்றும் வர்த்தகம் சார்ந்த தொழில் வாய்ப்புகள் குறித்த பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. பிளஸ் 2 முடித்த மாணவர்களுக்கு அனைத்து வகை பள்ளி மாணவர்களுக்கும் பட்டயக் கணக்காயர் பயிற்சி குறித்த விவரங்கள், சந்தேகங்களுக்கு விளக்கம் அளிக்க மேற்கண்ட சங்கத்தின் 12 கிளைகளிலும் மே 2ம் தேதி முதல் 31ம் தேதி வரை ஆலோசனை வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த கிளைகள் கோவை, ஈரோடு, காஞ்சிபுரம், கும்பகோணம், சேலம், சிவகாசி, திருச்சி, திருநெல்வேலி, திருப்பூர், தூத்துக்குடி, வேலூர் ஆகிய இடங்களில் இயங்கி வருகின்றன. இதில் மாணவர்கள் தொடர்பு கொண்டு ஆலோசனை பெறலாம். மேலும் விவரம் www.icai.org  என்ற இணைய தளத்தில் பார்க்கலாம்.