100 சதவீத ஓட்டு பதிவுக்கு - தேர்தல் ஆணையத்தையே யோசிக்க வைக்கும், சிறுவர்கள் கூறும், 'ஐடியா'

தேர்தலில், 100 சதவீத ஓட்டுப்பதிவுக்கு, சிறுவர்கள் கூறும் ஐடியா, சமூக வலைதளங்களில், வேகமாக பரவி வருகிறது.

சட்டசபை, லோக்சபா தேர்தலின் போது, சிலர் ஓட்டளிப்பதில்லை. இதனால், தேர்தல் ஆணையம் சார்பில், 100 சதவீத ஓட்டு பதிவை வலியுறுத்தி, வாக்காளர்களிடம் விழிப்புணர்வு பிரசாரம் செய்யப்படுகிறது. இம்மாதம், 18ல், லோக்சபா தேர்தல் நடக்கிறது. இந்நிலையில், சிறு வயதுடைய சகோதரரும், சகோதரியும், 100 சதவீத ஓட்டு பதிவு தொடர்பாக பேசும் வீடியோ, சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. அதன் விபரம்:

சிறுமி: அண்ணா நேற்றிரவு, நம் ஊரில், தேர்தல் விழிப்புணர்வு பிரசாரம் செய்தனர்; இன்னொரு ஊரில், விழிப்புணர்வு பிரசார பேரணி செய்தனர்; இப்படி செய்தால், எத்தனை சதவீத ஓட்டுகள் கிடைக்கும்?

சிறுவன்: குறைந்தபட்சம், 60 - 65 சதவீதம் கிடைக்கும்.

சிறுமி: அதிகபட்சம் எவ்வளவு கிடைக்கும்?

சிறுவன்: 70 - 75 சதவீதம் கிடைக்கும்.

சிறுமி: அப்ப, 100 சதவீதம் கிடைக்க வாய்ப்பில்லையா?

சிறுவன்: வாய்ப்பிருக்கு; அதை, அரசு செயல்படுத்துவதில்லை.

சிறுமி: அரசு, எப்படி செயல்படுத்தினால், 100 சதவீதம் கிடைக்கும்?

சிறுவன்: ஓட்டுனர் உரிமத்தை புதுப்பிக்கிறோம். அதேபோல், வாக்காளர் அடையாள அட்டை, 'ஆதார்' கார்டு, ரேஷன் கார்டுக்கும், புதுப்பிக்கும் தேதி என, ஒன்று வைக்க வேண்டும். அது தான், நாம் ஓட்டு போடுற நாள்.ஓட்டு போட தகுதியான, 18 வயது நிரம்பிய ஆண், பெண் ஓட்டு போட்டால் மட்டும் தான், வாக்காளர் அட்டை, ஆதார் கார்டு, ரேஷன் கார்டு புதுப்பிக்கப்படும். ஓட்டு போடாவிட்டால், அவை, ரத்தாகி விடும் என, மத்திய அரசு அறிவித்தால், வாக்காளர், அமெரிக்காவில் இருந்தாலும், ஓட்டு போட்டு தான் ஆக வேண்டும். இப்படி செய்தால், 100 சதவீதம் ஓட்டுபதிவாகும்.

சிறுமி: சூப்பர் ஐடியா.

இப்படி முடிகிறது உரையாடல். சிறு பிள்ளைகளின் இந்த பேச்சு, தேர்தல் ஆணையத்தையே யோசிக்க வைக்கும் அளவில் உள்ளது.