Title of the document



பணிக்குத் திரும்பிய ஆசிரியர் மற்றும் அரசு ஊழியர்கள் மீது எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகளை திரும்பப் பெற வேண்டும் என தமிழக முதல்வருக்கு வேண்டுகோள் விடுத்து சிவகங்கையில் செவ்வாய்க்கிழமை மாலை நடைபெற்ற ஜாக்டோ ஜியோ கூட்டமைப்பின் உயர்மட்ட குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

சிவகங்கை அரசு ஊழியர்கள் சங்க அலுவலகத்தில் நடைபெற்ற இக்கூட்டத்துக்கு அக்கூட்டமைப்பின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் முத்துப்பாண்டியன், ஜோசப் சேவியர் ஆகியோர் தலைமை வகித்தனர். மாவட்ட இணை ஒருங்கிணைப்பாளர்கள் செல்வக்குமார், முத்துச்சாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில், பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட  9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த ஜனவரி 22 ஆம் தேதி முதல் தொடர் வேலை நிறுத்தம் மற்றும் மறியல் போராட்டங்களில் ஜாக்டோ ஜியோ கூட்டமைப்பு ஈடுபட்டது.
இந்நிலையில், மாணவர்கள் நலன் கருதியும், தமிழக முதல்வரின் வேண்டுகோளை ஏற்றும் போராட்டம் கைவிடப்பட்டது. இதன்பின் பள்ளிக்குத் திரும்பிய ஆசிரியர்களுக்கு பணியிட மாறுதல் மற்றும் கைதாகி சிறை சென்று திரும்பியவர்களுக்கு தற்காலிக பணியிடை நீக்க உத்தரவை மாவட்ட நிர்வாகம் வழங்கியுள்ளது.

இந்த உத்தரவுகள் அனைத்தையும் தமிழக முதல்வர் விலக்கிக் கொண்டு அனைவரையும் பழைய பணி இடத்திலேயே பணியாற்ற அனுமதி வழங்க வேண்டும். மாநில கூட்டமைப்பு தமிழக அமைச்சர்கள் மற்றும் துறை செயலர்களுடன் நடந்த பேச்சுவார்த்தையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாலும், தமிழக முதல்வரை சந்திக்க திட்டமிட்டுள்ளதாலும் அதுவரை மாவட்ட நிர்வாகம் எடுத்து வரும் நடவடிக்கைகளை தற்காலிகமாக நிறுத்தி வைக்க மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரையும் இக்கூட்டமைப்பு கேட்டுக் கொள்கிறது.

மேலும் சிறை சென்று மீண்டுள்ள 62 அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர்களுக்கு பணி பாதுகாப்பு வழங்குவதோடு, அவர்கள் குடும்பங்கள் பாதிக்காத வகையில் உதவிகளை அனைத்து உறுப்பினர்களும் மேற்கொள்வது என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில் மாநில உயர்மட்டக்குழு உறுப்பினர்கள் சங்கர், இளங்கோ உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post