பள்ளிகளுக்கு செல்போனுடன் வரும் மாணவர்கள் : படிப்பில் கோட்டை விடும் அவலம்!

Join Our KalviNews Telegram Group - Click Here
9080019831 - Add This Number In Your Whatsapp Groups - 9080019831

கடந்த 2012ம் ஆண்டு முதல் செல்போன் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை ஏராளமாக உயர்ந்துள்ளது. சமீபத்தில் டிராய் வெளியிட்ட புள்ளி விவரத்தில் இந்தியாவில் செல்போன் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கையில், தமிழகம் 2ம் இடத்தில் இருப்பதாக தெரிய வந்துள்ளது.
2013ம் ஆண்டு முதல் பள்ளிகளுக்கு மாணவர்களும் செல்போன் கொண்டு வருவதாக புகார்கள் எழுந்தது. எனவே, மாணவர்கள் செல்போன் கொண்டு வர தடை விதித்து தமிழக கல்வித்துறை சார்பில் அதிரடி உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டது. ஆனாலும் பள்ளிகளில் செல்போன் பயன்படுத்துவது குறைந்தபாடில்லை. சமீபத்தில் வேலூர் மாவட்டம் திருப்பத்தூரில் உள்ள ஒரு அரசு பள்ளிக்கு செல்போன் கொண்டு வந்த மாணவர்கள் ‘டிக் டாக்’ என்ற இணையதளத்தில் ஆசிரியரை பற்றி அவதூறாக வீடியோ வெளியிட்டனர். இந்த வீடியோவால், பொதுமக்கள் கடும் அதிர்ச்சியடைந்தனர். இதுபோன்று செல்போன்கள் பயன்பாட்டால் மாணவர்களின் கல்வியில் கவனம் சிதறுகிறது. தற்போது, பொதுத்தேர்வுக்கான செய்முறை தேர்வுகள் நடந்து வருகிறது.
தொடர்ந்து எழுத்துத் தேர்வுகள் நடக்கவுள்ளது. எனவே, மாணவர்கள் கல்வியில் கவனம் செலுத்தும் வகையில் போதிய விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்பதே கல்வி ஆர்வலர்களின் கோரிக்கை.
இதுகுறித்து கல்வி ஆர்வலர்கள் கூறுகையில், ‘சிறந்த கல்வியில்தான் நாட்டின் வளர்ச்சி அமைந்துள்ளது. பள்ளி மாணவர்கள் சிலர் செல்போன் பயன்படுத்துவதில் மூழ்கி கிடக்கின்றனர். செல்போனில் நல்ல தகவல்களும் இருக்கிறது. ஆனால், இன்டர்நெட் பயன்படுத்தும்போது இடையில் வரும் ஆபாச படங்களுக்கான விளம்பரங்கள் மாணவர்களின் கவனத்தை திசை திருப்பிவிடுகிறது. எனவே, இதுதொடர்பாக கல்வி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றனர். கல்வி அதிகாரிகளிடம் கேட்டபோது: பள்ளிகளில் மாணவர்கள் செல்போன் கொண்டு வர தடை விதிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக மாவட்ட கல்வி அதிகாரிகள் வழியாக அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு பலமுறை கடிதங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அதேபோல், ஆசிரியர்களும் வகுப்பு நேரத்தில் செல்போன் பயன்படுத்த கூடாது என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. மாணவர்கள் சிலரிடம் செல்போன் பறிமுதல் செய்யப்பட்டு பெற்றோரை அழைத்து ஒப்படைத்த சம்பவங்கள் நடந்துள்ளது. இதில் ஒரு சில பெற்றோர் மாணவர்களிடம் எப்படி செல்போன் வந்தது என்பதே தெரியவில்லை என்கின்றனர். ஒரு சிலர் நாங்கள்தான் பாதுகாப்புக்காக செல்போன் கொடுத்து அனுப்பினோம் என்று ஒப்புதல் அளிக்கின்றனர். மாணவர்கள் பெரும்பாலான நேரங்களில் பள்ளிகளில்தான் இருக்கின்றனர். ஆனால், மாணவர்களை கண்காணிக்க வேண்டிய கடமை பெற்றோருக்குதான் அதிகம் என்பதை ஒரு சிலர் மறந்துவிடுகின்றனர். எனவே, மாணவர்களை கண்காணிக்க வேண்டியது மட்டுமல்ல, செல்போன் பயன்பாட்டில் கட்டுப்பாடுகளை கையாளுவது பெற்றோரின் கடமை என்பதையும் உணர வேண்டும்.  இவ்வாறு அவர்கள் கூறினர்.
ஆபாச படங்களால் விபரீதம்
சமீபத்தில் தனியார் அமைப்பு வெளியிட்ட புள்ளி விவரங்களில், இந்தியாவில் 71 சதவீதம் கல்லூரி மாணவர்கள் ஆபாச படங்களுக்கு அடிமையாகி இருப்பதாக தெரிவித்துள்ளது. மேலும் ஆபாச படங்களை பார்ப்பவர்களின் சராசரி வயது 9ஆக குறிப்பிட்டுள்ளது. இதன் விளைவாக போதை பொருட்களுக்கும் மாணவர்கள் அடிமையாகிவிடுவதாக அதிர்ச்சி தகவல்களை வெளிப்படுத்தியது. ஆபாச இணையதளங்களை முடக்கும்படி தொடரப்பட்ட வழக்கில், ஆபாச இணையதளங்களை முடக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி, கடந்த அக்டோபர் மாதம் 800க்கும் அதிகமான ஆபாச இணையதளங்கள் முடக்கி மத்திய மின்னணு மற்றும் தொழில்நுட்ப அமைச்சகம் நடவடிக்கை மேற்கொண்டது. ஆனால், கடந்த சில நாட்களாக மீண்டும் ஆபாச பட இணைய தளங்கள் செயல்பட தொடங்கியுள்ளதாக புகார் எழுந்துள்ளது. ஏற்கனவே, பலமுறை ஆபாச பட இணையதளங்கள் முடக்கப்பட்டு மீண்டும் செயல்பட தொடங்கியது குறிப்பிடத்தக்கது. எனவே ஆபாச பட இணையதளங்களை சம்பந்தப்பட்ட துறையினர் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாகும்

Post a comment

0 Comments